எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி, துளி கூட நேர்மறையாகவோ அல்லது எதிர்மறையாகவோ எண்ணங்கள் இன்றி, எதை வேண்டுமானாலும் ரசிக்கிற மனநிலையில் படம் பார்க்க உட்காருகிற ரசிகருக்குத் திகட்டத் திகட்டத் திரையில் விருந்தொன்று படைத்தால் எப்படியிருக்கும்?
அதன்பிறகு, அந்த படத்தில் இடம்பெற்ற அத்தனை கலைஞர்களும் மீண்டுமொரு முறை கைகோர்க்கும்போது முன்னே சொன்னது அனைத்தும் தலைகீழாகும்; மிகப்பெரிய கொண்டாட்ட மனநிலையோடு அந்த ‘காம்போ’வை ரசிகர்கள் உற்றுநோக்குவார்கள்.
அப்படி செல்வராகவன் – தனுஷ் காம்பினேஷன் மீது ரசிகர்களை மீண்டும் மீண்டும் காதல் கொள்ளச் செய்தது ‘காதல் கொண்டேன்’.
மீண்டும் துள்ளிய இளமை!
ஆனால், அந்தப் படம் உருவாக நெடு நாட்கள் ஆனது. படத்தின் பட்ஜெட் தொடங்கி செல்வராகவனின் பிடிவாதமிக்க ‘மேக்கிங் ஸ்டைல்’ வரை பல காரணங்கள் அதன் பின்னிருந்தன.
‘காதல் கொண்டேன்’ வெளியாகி முதல் காட்சியை ரசிகர்கள் பார்த்தபிறகு அதுவரை அவர்களிடத்தில் இருந்த குறைகள் எல்லாமே நீர்த்துப் போயின.
‘துள்ளுவதோ இளமை’ படத்தை உருவாக்குவதற்கு முன்பாக, முரளியைக் கொண்டு செல்வராகவன் இயக்குவதாக இருந்த படம் ‘காதலாகி’.
செல்வராகவன் சந்தித்துக் கதை சொன்ன நாயகர்களில் அவர் மட்டுமே அதன் மீது நம்பிக்கை கொண்டு நடிப்பதாக உறுதி தந்தார். ஆனால், ஏனோ அப்படம் உருவாகவில்லை.
பிறகு, சில ஆண்டுகள் கழித்து அந்தக் கதையைத் தனது சகோதரர் தனுஷைக் கொண்டு உருவாக்க முனைந்தார் செல்வராகவன். அந்தப் படமே ‘காதல் கொண்டேன்’.
இப்படத்தின் கதையில் அதற்கு முன் வந்த பல தமிழ் படங்களின் சாயல் தெரியும். குறிப்பாக ‘குணா’ படத்தின் தாக்கம் நிறைய இடங்களில் தெரியும்.
ஒரு இளைஞன் ஒரு இளம்பெண்ணை விரும்புகிறார். அந்தப் பெண்ணும் அவரோடு நெருக்கமாகப் பழகுகிறார். ஆனால், ‘நட்பு’ என்ற எல்லையோடு அந்தப் பெண் நின்றுகொள்கிறார். காரணம், அவர் இன்னொரு நபரைத் தீவிரமாகக் காதலிப்பதே.
இதுவரை எவரோடும் நெருங்கிப் பழகியிராத அந்த இளைஞனால் தனது தோழி வேறொருவரைக் காதலிப்பதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
அது மட்டுமல்லாமல், அவரது கடந்த கால வாழ்க்கை முட்களின் மீது நடப்பது போன்ற அனுபவங்களைக் கொண்டிருக்கிறது. அவை குறித்து சிறிதும் அறியாத அந்தப் பெண், எப்போதும்போல அவரோடு நட்பு பாராட்டுகிறார்.
ஒருநாள் ‘காதலர் அழைத்தார்’ என்ற பெயரில் அந்தப் பெண்ணைத் தன்னோடு கூட்டிச் செல்கிறார் அந்த இளைஞன். பிறகே, அவர் ஏமாற்றியது தெரிய வருகிறது. பெண்ணின் குடும்பத்தார் போலீசில் புகார் செய்ய, அந்த இளைஞ யார் என்ற விசாரணை தொடங்குகிறது.
அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரிய வருகின்றன. அதே நேரத்தில், அந்தப் பெண்ணும் அவர் குறித்த உண்மையான பிம்பத்தை அறிகிறார்.
இறுதியில், அந்தப் பெண் அந்த இளைஞனை மன்னித்து தோழமையுடன் ஏற்றுக்கொண்டாரா? அதன்பின் என்னவானது என்பதைக் கவித்துவமான காட்சிகள் வழியே சொன்னது ‘காதல் கொண்டேன்’.
செல்வராகவனின் முதல் படம் போன்றே இதிலும் இளமை துள்ளியது. ஆனால், அது ஆபாசமாகத் தெரியாத அளவுக்குப் படத்தில் உணர்வுப்பூர்வமாக ரசிகர்களைத் திரையோடு பிணைக்கும்விதமாகப் பல காட்சிகள் இருந்தன.
காதல் என்பது..!
‘உனக்கும் சேர்த்து நானே காதல் செய்தேன்’ என்பது வாசிப்பதற்கு இதமானதாக இருக்கலாம். ஆனால், நிஜ வாழ்வில் காதல் என்பது இரு கைகளும் ஒன்றையொன்று இறுக்கமாகப் பற்றிக்கொள்வது. உண்மையைச் சொன்னால் ‘கொடுத்துப் பெறுவது’தான் காதல்.
அதில் இருக்கும் சமத்துவமும் சமரசமும் சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. ஒருதலைக்காதலில் அதற்கு இடமே கிடையாது. அதனைத் தெளிவாக உணர்த்தியது ‘காதல் கொண்டேன்’.
ஒவ்வொரு நடிகருக்கும் முதல் படம் என்பது முகவரி தருகிற ஒரு படைப்பு. அதேநேரத்தில், மிகச்சில பேருக்கு முதல் படம் மட்டுமல்லாமல் தொடக்க காலப் படங்கள் கூடப் பெருமிதப்படுகிற அளவுக்கு இருக்காது.
‘கிடைக்கிற வாய்ப்புகளைத் தக்க வைத்தால் போதும்’ என்கிற நிகழ்காலச் சங்கடங்கள் அவர்களை அப்படியொரு இக்கட்டுக்கு உள்ளாகும். அந்த வகையில் ‘துள்ளுவதோ இளமை’க்குப் பிறகு தனது திறமையை தனுஷ் ‘அசுரத்தனமாக’ வெளிப்படுத்திய படம் ‘காதல் கொண்டேன்’.
தனுஷின் பிரவாகம்!
இந்தப் படத்தில் நடிப்பதற்கான பயிற்சியாக, ஹாலிவுட் நட்சத்திரங்களான ராபர்ட் டி நீரோ, அல் பசீனோ போன்றவர்கள் நடித்த சில ‘கிளாசிக்’ படங்களைப் பாடங்களாகப் பார்த்து ரசித்திருக்கிறார் தனுஷ்.
‘நடிப்பில் துளி கூட ஆர்வமில்லை’ என்று கத்திக் கூச்சலிட்ட பிற்பாடு இதனை அவர் செய்தார் என்பதே எடுத்துக்கொண்ட வேலையைச் செம்மையாகச் செய்ய வேண்டுமென்ற அவரது எண்ணத்தை நமக்குணர்த்தும்.
வினோத், திவ்யா பாத்திரங்கள் அக்காலகட்டத்தில் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறும் அளவுக்குத் தாக்கம் ஏற்படுத்தியது ‘காதல் கொண்டேன்’. கிளைமேக்ஸில் சுதீப்பை அடித்தவாறே தனுஷ் ஆடும் ஆட்டமும் ரசிகர்கள் மனதோடு ஒட்டிக்கொண்டது.
திரை வரலாற்றில் மிக அரிதாக நாயகர்களை விட வில்லன்களை ரசிகர்களுக்கு ரொம்பவே பிடித்துப் போகும்.
அந்த வரிசையில் தனுஷும் ரசிகர்களின் மனம் கவர்ந்தவராக மாறக் காரணமானது ‘காதல் கொண்டேன்’. அதன் தொடர்ச்சியாக, இயக்குனர் செல்வராகவனும் ‘கொண்டாட்டத்திற்குரிய கலைஞராக’ மாறினார்.
யுவன் சங்கர் ராஜா தந்த ‘தேவதையைக் கண்டேன்’, ‘தொட்டு தொட்டு’, ‘பதினெட்டு வயதில்’ போன்ற பாடல்களோடு பின்னணி இசையில் வெளிப்பட்ட சில துணுக்குகளோடும் கூட ரசிகர்களால் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, பின்னணி இசையும் கூடத் தனியாக வெளியிடப்பட்டு ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் கிருஷ்ணா, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா என்று ‘காதல் கொண்டேன்’ படத்தில் அங்கம் வகித்த பல கலைஞர்கள் மீண்டும் செல்வராகவன், தனுஷோடு ‘புதுப்பேட்டை’ படத்தில் இணைந்தனர்.
அது தயாராவதில் ஏற்பட்ட தாமதமும், அப்படம் குறித்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்திய எதிர்பார்ப்பும் பிறகு ஒரு சுமையாக மாறின. அதனால், அந்தப் படம் பெரிய வெற்றியைப் பெறவில்லை.
பிறகு ‘ஆயிரத்தில் ஒருவன்’, ‘மயக்கம் என்ன’ உட்படச் சில படங்களை செல்வராகவன் இயக்கியபோதும், ஆரம்பகாலத்தில் அவரோடு இணைந்த கரங்களின் இணைவு இனி இல்லை என்ற எண்ணம் ரசிகர்கள் மனதில் நிலைத்துவிட்டது.
அதனை மறக்கடிக்க ‘காதல் கொண்டேன்’, ‘7ஜி ரெயின்போ காலனி’ படங்களே ரசிகர்களுக்குக் கைகொடுக்கின்றன.
அப்படிப்பட்ட ‘காதல் கொண்டேன்’ 21 ஆண்டுகளுக்குப் பிறகும் நினைவுகூரப்படுவது ‘தனுஷ் – செல்வராகவன் காம்போ’வுக்கான மரியாதை என்று எடுத்துக்கொள்ளலாம் அல்லது இன்று அவர்கள் அடைந்துள்ள உயரத்திற்கான ஆரம்பம் என்றும் கருதலாம்.
எது எப்படியானாலும், ‘காதல் கொண்டேன்’ தான் அதற்கான அடித்தளம் என்பதை மறக்கவோ, மறுக்கவோ முடியாது!
– உதய் பாடகலிங்கம்
#காதல்_கொண்டேன் #செல்வராகவன் #தனுஷ் #கஸ்தூரிராஜா #துள்ளுவதோ_இளமை #குணா #யுவன்_சங்கர்_ராஜா #7ஜி_ரெயின்போ_காலனி #Kadhal_Konden #selvaragavan #danush #kasthuri_raja #thuluvatha_ilamai #guna #yuvan_shankar raja #7g_rainbow_colony #17_Years_of_Kaadhal Konden