சில மாதங்களுக்கு முன்னர் முதலமைச்சர் ஸ்டாலின், தனது கட்சிக்காரர்களின் செயல்பாடுகள் குறித்து வேதனை தெரிவித்திருந்தார்.
‘எனது தூக்கத்தைக் கட்சிக்காரர்கள் சிலர் தொலைத்துவிட்டனர்’ என நொந்து கொள்ளும் நிலைக்கு, அவரை ஆளாக்கினர். இதனால், அந்த நேரத்தில் மட்டும் கட்சியினர் அடக்கி வாசித்தனர்.
கொஞ்சநாள் கழித்து, வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதையானது. ஆங்காங்கே சில மூத்த நிர்வாகிகளே சர்ச்சைக்கு உள்ளானார்கள். அப்போது மக்களவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்ததால், அமைதி காத்தார் மு.க. ஸ்டாலின்.
தேர்தல் முடிந்து, முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், கட்சிக்குள் களை எடுத்து, கட்சியைப் புனரமைக்க முடிவு செய்துள்ளார், ஸ்டாலின்.
அதன் முதல் கட்டம் தான் இரண்டு திமுக மேயர்களின் பதவி நீக்கம்.
அவை, கோவை மற்றும் நெல்லை.
கோவை விவகாரம்
அவர்களில் ஒருவர் கோவை மாநகராட்சியின் மேயர் கல்பனா. இவர் கோவையின் முதல் பெண் மேயர் ஆவார். கணவர் ஆனந்தகுமார், மாநகர் மாவட்ட திமுகவில் பொறுப்புக் குழு உறுப்பினராக உள்ளார்.
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் என்ற அடிப்படையில், திமுகவினரே எதிர்பார்க்காத வகையில் கல்பனா மேயராகத் தேர்வு செய்யப்பட்டார்.
பொறுப்பேற்றது முதலே மேயருக்கும், கவுன்சிலர்களுக்கும் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. மாநகராட்சி கமிஷனர்களுடன் மோதல் போக்கை கடைபிடித்தார். மாநகராட்சி ஒப்பந்ததாரர்களுடனும், மேயருக்கு இணக்கம் கிடையாது.
இப்படியாக அனைத்துத் தரப்பிலும் எதிர்ப்பை சம்பாதித்த கல்பனாவுக்கு, மக்களவைத் தேர்தல் உச்சபட்ச இடியாக அமைந்தது.
இந்தத் தேர்தலில் கல்பனாவின் 19-வது வார்டில், திமுக வேட்பாளரை விட, பாஜகவின் அண்ணாமலை கூடுதல் வாக்குகள் பெற்றிருந்தார்.
இதனால் அவரை மேயர் பதவியில் இருந்து தூக்கும் முடிவுக்கு வந்த ஸ்டாலின், அதற்கான நடவடிக்கைகளை எடுக்க மூத்த அமைச்சர்களுக்கு உத்தரவிட்டார்.
இதன் விளைவாக கல்பனா, மேயர் பதவியில் இருந்து விலகிவிட்டார். தனது ராஜினாமா கடிதத்தை, தனது உதவியாளர் மூலம் மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரனிடம் ஒப்படைத்தார்.
நெல்லையில் நீண்ட நாள் பிரச்சினை
திமுக தலைவர் கருணாநிதி திருநெல்வேலிக்கு வரும் போதெல்லாம் ‘நெல்லை எனக்கு தொல்லை’ என சொல்லத் தவறுவதில்லை. மு.க.ஸ்டாலின் காலத்திலும் நெல்லை திமுகவுக்கு தொல்லையாகவே நீடிக்கிறது.
நெல்லையில் மேயராக இருப்பவர் சரவணன். ஆனால் இங்குள்ள திமுக கவுன்சிலர்கள் அனைவருமே, திமுக முன்னாள் மத்திய மாவட்டச் செயலாளர் அப்துல் வகாப் எம்எல்ஏ மூலம் ’சீட்‘ வாங்கியவர்கள்.
சரவணனுக்கு ‘டிக்கெட்’ வாங்கிக் கொடுத்து, அவரை மேயராக்கியதும் அப்துல் வகாப் தான். காலப்போக்கில் சரவணனுக்கும் அப்துல் வகாபுக்கும் இடையே பனிப்போர் உருவானது.
திமுக கவுன்சிலர்கள் பலரும் அப்துல் வகாபுக்கு விசுவாசமாகவே இருந்து வருகிறார்கள். அவர்கள் மாநகராட்சிக் கூட்டங்களைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தனர்.
இதுதொடர்பாக மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், பிரச்சினை தீரவில்லை.
இந்த விவகாரத்தில் அப்துல் வகாபின் மாவட்டச் செயலாளர் பதவியே பறிக்கப்பட்டது. ஆனாலும் பிரச்சினை தீரவில்லை. சொல்லப்போனால், நாளுக்கு நாள், விவகாரம் பெரிதாகிக்கொண்டே வந்தது என்பதே உண்மை.
மேயர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரக் கோரி திமுக கவுன்சிலர்கள் 38 பேர், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கடிதம் கொடுத்தனர். ஆனால், வாக்கெடுப்பை, அனைத்துக் கட்சி கவுன்சிலர்களும் புறக்கணித்ததால், சரவணனின் மேயர் பதவி தப்பியது.
அதன்பிறகு நடந்த மாநகராட்சிக் கூட்டங்களிலும், மேயர் – திமுக கவுன்சிலர்கள் மோதல் நீடித்தது.
அமைச்சர்களாலேயே பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாத நிலையில், சரவணன், அவசரமாக திமுக மேலிடத்தால், சென்னைக்கு வரவழைக்கப்பட்டார்.
மேயர் பதவியை விட்டு விலகுமாறு அவர் பணிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து சரவணன் தனது மேயர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலுக்குப் பிறகு, இரு மேயர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என்று கூறப்படுகிறது. மேயர் பதவியைப் பிடிக்க இப்போதே, பலரும் முட்டி மோதுகிறார்கள்.
– மு.மாடக்கண்ணு