சில பொறுப்புள்ள மனிதரின் தூக்கத்தினால்…!

திரைத் தெறிப்புகள் – 1:

ஒரு நூற்றாண்டைக் கடந்துவிட்ட தமிழ் சினிமாவில் பாடல்கள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் பற்றியே இந்தச் சிறு தொடர்.

துவக்க காலத்தில் ஒரு திரைப்படத்திலேயே 64 திரைப்பாடல்கள் இருந்த காலகட்டமும் இருந்தது. பிறகு ‘அந்த நாள்’ முதல் தற்போது வரை பாடல்களே இல்லாத திரைப்படங்களும் வந்து கொண்டிருக்கின்றன.

மருதகவி, பாஸ்கர தாஸ், தஞ்சை ராமையாதாஸ் துவங்கி தற்போது யுகபாரதி வரை நூற்றுக்கணக்கான திரைப்படப் பாடலாசிரியர்கள் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்கள். பல இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர், பாடகிகளின் பங்கேற்பும் இதில் அடங்கும்.

இந்தத் திரைப்பட வரிசையில் நம் கவனத்தை ஈர்த்த திரைப்பட பாடல் வரிகளை உங்களுக்கு மீண்டும் இந்தச் சிறு தொடர் மூலம் நினைவூட்டுகிறோம் அவ்வளவுதான்.

****

“சில பொன்னான மனிதரின் தூக்கத்தினால்
பல பொன்னான வேலையெல்லாம் தூங்குதப்பா”.

1958-ம் ஆண்டு மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தயாரித்து இயக்கிய ‘நாடோடி மன்னன்’ திரைப்படத்தில் “தூங்காதே தம்பி தூங்காதே” என்ற தலைப்பில் மறைந்த மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் எழுதிய பாடல் வரிகள் இவை.

ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு பொறுப்புகள் இருக்கின்றன. அதிலும் மக்களுக்காக உழைப்பதாக சொல்லிக்கொள்கிறவர்களுக்கு இன்னும் அதிகபட்சமாக பொறுப்புகள் இருக்கின்றன.

அப்படிப் பொறுப்பானவர்கள் தங்கள் பொறுப்பை மறந்து தூங்கிக் கொண்டிருந்தால் அவர்களால் முடிக்கப்பட வேண்டிய வேலைகளும் தூங்கி விடுகின்றன.

இதை எவ்வளவு எளிமையாக பொறுப்புள்ள மனிதராக தங்களை உணர்ந்து கொள்பவர்களுக்கும் புரியும்படியாக எவ்வளவு பொறுப்புடன் மக்களுக்கான எளிய முறையில் சொல்லியிருக்கிறார் பட்டுக்கோட்டையார்.

Comments (0)
Add Comment