செல்லப்பிராணிகளைக் கைவிடக்கூடாது!

சக்சஸ் ஸ்டோரி

சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த தினேஷ் பாபா, வீட்டில் வைத்து வளர்ப்பவர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளின் பாதுகாவலராக இருக்கிறார். தனியார் கால்நடை மருத்துவமனை ஒன்றை நடத்திவரும் அனுபவத்தில் விலங்குகளின் நேசராக மாறினார்.

கூவத்தூர் அருகே தங்குமிடம்

இன்று வயது முதிர்ந்த, கைவிடப்பட்ட விலங்குகளைப் பாரமரிப்பதற்காகவே 30 ஆயிரம் சதுர அடியில் தங்குமிடம் அமைத்திருக்கிறார். மாமல்லபுரம் அருகிலுள்ள கூவத்தூரில் உள்ள இடத்தில் 35 செல்லப் பிராணிகள் பராமரிக்கப்படுகின்றன. அதற்கு ஆர்ஓஏ ஷெல்டர் என்று பெயர்.

ஒரு முறை அசோக் நகரில் கைவிடப்பட்ட சுல்தான் என்ற ரோட்வீலர் நாய்க்கு அடைக்கலம் கொடுத்தார். இதுபோன்ற பல வீட்டில் வளர்க்கப்படும் வயதான பூனை, நாய்களைக் கண்டறிந்து காப்பாற்றியிருக்கிறார் தினேஷ். அன்று தொடங்கிய பணி, பின்னாளில் பெரும் சேவையாக மாறிவிட்டது.

கூட்டு நிதியுதவி

பலருடைய நிதியுதவியுடன் கூவத்தூரில் தங்குமிடம் உருவானது. இங்கு வர்தா புயலில் மீட்கப்பட்ட ஐந்து வயதான பன்றிக்குட்டியும் இருக்கிறது. ஏற்கெனவே அதன் தாயும் சில குட்டிகளும் இறந்துவிட்டன.

நம்மிடம் பேசிய தினேஷ் பாபா, “நான் 2010 ஆம் ஆண்டிலிருந்தே செல்லப் பிராணிகளைக் காப்பாற்றும் பணிகளைச் செய்துவருகிறேன். தற்போது நான் மாமல்லபுரத்தில் இருக்கிறேன். ஷெல்டர் கூவத்தூரில் இருக்கிறது.

சில ஆண்டுகள் மென்பொருள் துறையில் பணியாற்றினேன். இப்போது முழுநேரமாக இந்தப் பணியைத் தான் செய்துகொண்டிருக்கிறேன். சாலையோரம் திரியக்கூடிய கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளைக் காப்பாற்றி, சிகிச்சையளித்து பாதுகாத்து வருகிறோம்.

பிராணிகளுக்குப் பாதுகாப்பு

வயதான பிராணிகளை யாரும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள். நாங்களே அவற்றை வைத்துப் பராமரித்துவருகிறோம். எல்லோருமே செய்கிற பணிதான். நான் அதில் கொஞ்சம் அதிகமாகச் செய்கிறேன், அவ்வளவுதான்.

கால்நடை மருத்துவமனையில் வந்த வருமானத்தில் செல்லப்பிராணிகளைக் காப்பாற்றி வந்தேன். இப்போது கூட்டு நிதியுதவி மூலம் செய்கிறேன். தற்போது வயதான செல்லப் பிராணிகளைப் பராமரிக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளோம்.

30 ஆயிரம் சதுர அடி

30 ஆயிரம் சதுர அடி இடத்தில் 10 அடி அளவுள்ள 35 கொட்டில்களை அமைத்துள்ளோம். ஒவ்வொரு கொட்டிலிலும் உட்புற மற்றும் வெளிப்புற வசதிகள் உள்ளன. இங்கு ஜெர்மன் ஷெப்பர்ட், லாப்ரடோர், பொமரேனியன், இண்டீஸ் மற்றும் சில ஊனமுற்ற நாய்களும் பராமரிக்கப்படுகின்றன.

எங்களிடம் பிசியோதெரபி மற்றும் அவை விளையாடவும் நடக்கவும் இடம் உள்ளது. பிராணிகளைக் கவனித்துக்கொள்ள ஆறு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்” என்று விரிவாகப் பேசினார்.

ஒவ்வொரு நாய்க்கும் அவற்றின் வயது மற்றும் உடல்நிலை, சப்ளிமெண்ட்ஸ் உட்பட அதன் சொந்த உணவு முறை இருக்கிறது. ஒரு நாய்க்குச் சிறுநீரக செயலிழப்பு இருந்தால், அதன் உணவில் புரதத்தைச் சேர்க்கமுடியாது. ஒவ்வொரு வேளையும் அனைத்து உணவுகளும் புதிதாகச் சமைக்கப்படுகின்றன.

கைவிடப்படப் பல காரணங்கள்

மேலும் பேசிய தினேஷ் பாபா, “பொதுவாக உடல்நலப் பிரச்சினைகள், சிகிச்சைச் செலவுகள், போக்குவரத்து வசதி இல்லாமை மற்றும் சில நேரங்களில் வீடுகளில் கடைப்பிடிக்கப்படும் விதிமுறைகள் காரணமாகப் பல வயதான விலங்குகள் வளர்ப்பவர்களால் கைவிடப்படுகின்றன.

செல்லப்பிராணிகளை அப்படியே விட்டுவிடுவது கொடுமையானது. இது அவற்றுக்கு மன அழுத்தத்தை அளிக்கிறது. இந்த உணர்ச்சிகள் ஆக்கிரமிப்பு, பதற்றம், பயம் மற்றும் மனச்சோர்வு போன்ற வடிவங்களில் வெளிப்படுகின்றன.

இந்த பாதிப்புகளிலிருந்து பிராணிகளை வெளியே கொண்டுவர நமக்கு அதிக நேரமும் முயற்சியும் தேவைப்படும்” என்று சுட்டிக்காட்டுகிறார்.

எப்போதும் மக்கள் தங்களது செல்லப்பிராணிகளைக் கைவிடக்கூடாது என்றும் அவர் வலியுறுத்துகிறார். ஏனெனில் தங்குமிடங்கள் அவற்றுக்குச் சிறைச்சாலைகளாகத் தோன்றலாம்.

  • எஸ். சாந்தி

#செல்லப்_பிராணிகள் #விலங்குகள் #ஜெர்மன்_ஷெப்பர்ட் #லாப்ரடோர் #பொமரேனியன் #இண்டீஸ் #Pets_Animals #German_Shepherd #Labrador #Pomeranian #Indies #கால்நடை_மருத்துவமனை #Veterinary_Hospital

Pets AnimalsVeterinary Hospitalகால்நடை மருத்துவமனைசெல்லப்பிராணிகள்விலங்குகள்
Comments (0)
Add Comment