நாடாளுமன்றக் கூட்டத்தொடர் 2 நாள் விடுமுறைக்குப் பின் நேற்று (திங்கட் கிழமை) மீண்டும் தொடங்கியது. குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தை, மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் தொடங்கி வைத்தார்.
முதல் முறையாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசினார். அப்போது ராகுல், அடுக்கடுக்காக பிரச்னைகளை எழுப்பி பாஜகவைத் திணறடித்தார்.
சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் ராகுல் பேசியபோது, அவையில் அனல் பறந்தது. கடந்த 10 ஆண்டுகளாக விவாதத்தில் நேரடியாக பங்கேற்காத பிரதமர் மோடி எழுந்து நின்று, ராகுலின் பேச்சில் குறுக்கிட்டார்.
ராகுல்காந்தி, கடவுள் சிவபெருமான், இயேசு கிறிஸ்து, குருநானக் ஆகியோர் படங்களை காட்டி, தனது பேச்சைத் தொடங்கினார்.
அப்போது, “சிவன் படத்தை இங்கு ஏன் காண்பிக்கிறேன் என்றால், இதில் உள்ள யோசனைகளை எதிர்கட்சிகளாகிய நாங்கள் காத்துள்ளோம்“ என்று குறிப்பிட்டார். அமைதியாக ஆரம்பித்த ராகுலின் உரை, ஒரு கட்டத்தில் பிரளயமாய் வெடித்தது.
’ஒருபோதும் பயப்படக் கூடாது என்ற எண்ணம் சிவனின் உருவத்தில் இருந்துதான் பிரதிபலிக்கிறது – சிவன் கழுத்தில் உள்ள பாம்பு உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதையும், அதில் இருந்து பின்வாங்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறது – அந்த உணர்வோடு தான் நாங்கள் போராடி வருகிறோம்.
இந்த யோசனை எங்களை எதிர்க்கட்சியாக மட்டுப்படுத்தியுள்ளது. எனக்கு இது தெரியும் – நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன் – எங்களைப் பொறுத்தவரை அதிகாரத்தைவிட உண்மைதான் அதிக சக்தி வாய்ந்தது – எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை – ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை – உங்களுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம்.
சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பது வன்முறையின் அடையாளம் அல்ல – அகிம்சையின் சின்னம் – அதனால்தான் இடதுபக்கம் வைக்கப்பட்டுள்ளது – வன்முறையின் சின்னமாக இருந்தால் சிவனின் வலதுகை பக்கம் திரிசூலம் இருந்திருக்கும்.
நாங்கள் பாஜகவை எதிர்த்துப் போராடியபோது எங்களிடம் வன்முறை இல்லை – நாங்கள் உண்மையைப் பாதுகாக்க துணிந்தபோதும் வன்முறை வெளிப்படவில்லை” என்று குறிப்பிட்ட ராகுல், நாட்டில் நிகழும் வன்முறைகள் குறித்து பேசியபோது சலசலப்பு ஏற்பட்டது.
ராகுலை இடைமறித்த மோடி
’தனிப்பட்ட ஒரு மதம் மட்டுமே தைரியத்தைக் கூறவில்லை – அனைத்து மதங்களும் தைரியத்தைப் பற்றி பேசுகின்றன – இஸ்லாம், சீக்கியம் என அனைத்து மதங்களும் தைரியத்தை வலியுறுத்துகின்றன. அஞ்சாமை மற்றும் அஹிம்சையின் முக்கியத்துவத்தை போதிக்கின்றன.
ஆனால், தங்களை இந்துக்கள் என அழைத்துக் கொள்வோர், எந்த நேரமும் வன்முறை, வெறுப்புணர்வு, பொய்கள் குறித்தே பேசுகிறார்கள் – அவர்கள் இந்துக்கள் அல்ல” என ராகுல் குறிப்பிட்ட போது, அவரது பேச்சில் பிரதமர் மோடி குறுக்கிட்டார்.,
தனது இருக்கையில் இருந்து எழுந்த பிரதமர் மோடி, ‘’ஒட்டுமொத்த இந்து சமூகத்தை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது” என்று கூறி, தனது எதிர்ப்பை பதிவு செய்தார்.
கடந்த 10 ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவருக்கு பிரதமர் மோடி எழுந்து பதில் சொல்வது இதுவே முதல்முறை ஆகும்.
தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “இந்து என்று சொல்லிக் கொள்பவர்கள் வன்முறையைப் பேசுகிறார்கள், வன்முறை செய்கிறார்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கூறுகிறார்.
கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக் கொள்வது அவருக்குத் தெரியாது போலும் – வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு – அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்’’ என்று ஆவேசத்துடன் கூறினார்.
இந்த பேச்சுக்களுக்கு பதிலளித்த ராகுல், “நான் பாஜக குறித்துத்தான் பேசினேன் – பாஜகவோ அல்லது மோடியோ இந்து மதத்தின் பிரதிநிதி அல்ல” என்றார்.
பிரியங்கா விளக்கம்
இந்த பதிலால் திருப்தி அடையாத மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜு, அஸ்வின் வைஷ்ணவ் ஆகியோர் ராகுலை விமர்சித்தனர்.
‘’ராகுல் காந்தி, இந்துக்களுக்கு அவமதிப்பை ஏற்படுத்தி விட்டார்’’ என அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கு பதிலளித்த காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, ‘’ராகுல் ஒரு போதும் இந்துக்களை அவமதிக்கவில்லை – பாஜக மற்றும் அதன் தலைவர்கள் குறித்தே அவர் பேசினார்” என குறிப்பிட்டார்.
ராகுல் உரை நிகழ்த்தியபோது, சோனியா காந்தியும், பிரியங்கா காந்தியும் மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் அமர்ந்திருந்து, அவரது பேச்சை கேட்டனர்.
– மு.மாடக்கண்ணு