சமீப காலமாக சென்னையில் தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகள் பொதுமக்களை தாக்கும் சம்பவங்கள் அதிகளவில் நடைபெற்றுவருகின்றன. மாடு முட்டி படுகாயம் அடைந்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதுடன் சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன.
இதுபோன்ற சம்பவங்கள், சென்னை மாநகராட்சி மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகம் நடந்து வருகின்றன.
தொடர் சம்பவங்கள் நடந்து வந்தாலும், விலங்குகள் நலச் சட்டப்படி, மாடுகளை வளர்க்க கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது.
மாடுகளைப் பிடித்து 5,000 ரூபாய், 10,000 ரூபாய் அபராதம் விதித்தாலும், அதன் உரிமையாளர்கள் மீண்டும் வழக்கம்போல் மாடுகளை சாலையில் திரிய விடுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதனிடையே கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளில் மாடுகள் திரிவதற்கு தடை விதிக்கும் வகையில் சட்ட திருத்தம் மேற்கொள்ள, தமிழக அரசுக்கு மாநகராட்சி சமீபத்தில் கடிதம் எழுதியுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசுக்கு மாநகராட்சி எழுதியுள்ள கடிதத்தில்,
சென்னை மாநகராட்சியில் மாடுகளை வளர்க்க, 2013-ல் தடை விதிக்கப்பட்டது. பின், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதற்கு தடை பெறப்பட்டுள்ளது.
தற்போது, மாடுகளால் பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், அதற்கான கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சாலையில் திரியும் மாடுகளைப் பிடித்து, உரிமையாளருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனாலும் உரிமையாளர்கள், மாடுகளை பராமரிப்பது இல்லை.
எனவே, மக்கள் கூட்டம் அதிமுள்ள இடம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் மாடுகளை வளர்க்கவோ, சாலையில் விடவோ தடை விதிக்க, அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது.
அதன்படி சந்தை பகுதிகள், கோவில்கள், பள்ளி, கல்லுாரி வளாகங்கள் உள்ளிட்ட பகுதிகளில் மாடுகள் திரிவதற்கு தடை விதிக்கப்படும். அதையும் மீறி திரியும் மாடுகள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிமையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.” எனக் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே சென்னையில் மாடுகள் வளர்க்க தடை விதிக்கும் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசிக்கப்பட்டு வருவதாகவும் இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் கூறப்படுகிறது.