பாரடைஸ் – இது சொர்க்கமா, நரகமா?

ஆகாச குசும், ஒப நத்துவா ஒப எக்கா, காடி போன்ற படங்களின் வழியாக உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர் சிங்கள இயக்குனர் பிரசன்ன விதாங்கே.

படத்தொகுப்பாளர் ஏ.ஸ்ரீகர் பிரசாத் உள்ளிட்ட சில படைப்பாளிகளோடு நெடுங்காலமாகத் திரைப்பயணத்தை மேற்கொண்டு வருபவர். அவரது எழுத்தாக்கம் மற்றும் இயக்கத்தில் தற்போது மலையாளத்தில் ‘பாரடைஸ்’ வெளியாகியிருக்கிறது.

ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷ்யாம் பெர்னாண்டோ, மகேந்திர பெரைரா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்திற்கு கே இசையமைத்துள்ளார். ராஜீவ் ரவி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

‘பாரடைஸ்’ திரையில் நமக்கு சொர்க்கத்தைக் காட்டுகிறதா?

ஒரு பயணம்; பல மாற்றங்கள்!

ஐந்தாவது ஆண்டு மண வாழ்வைக் கொண்டாட இலங்கைக்குச் செல்கின்றனர் கேசவ் – அம்ரிதா (ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன்) தம்பதியர். சுற்றுலா வழிகாட்டி ஆண்ட்ரூ (ஷ்யாம் பெர்னாண்டோ) அவர்களை விமான நிலையத்தில் இருந்து காரில் அழைத்துச் செல்கிறார்.

மலைப்பகுதியிலுள்ள ஒரு கட்டடத்தில் அவர்கள் தங்க ஏற்பாடாகிறது. அங்கு சமையல்காரர்களாக ஸ்ரீயும் (சுமித் இளங்கோ) இக்பாலும் (அசார் சம்சுதீன்) பணியாற்றுகின்றனர்.

அடுத்த நாள், கேசவ் மற்றும் அம்ரிதாவை அங்கிருக்கும் சில சுற்றுலாத் தலங்களுக்கு அழைத்துச் செல்கிறார் ஆண்ட்ரூ.

ராமாயண நிகழ்வுகளோடு தொடர்புடையதாக அவ்விடங்கள் இருக்கின்றன.

அதனால், ராமாயணம் மற்றும் ராவணன், சீதை தொடர்பான சில கருத்துகளைத் தன் மனத்தில் இருப்பவற்றோடு சேர்த்து வெளிப்படுத்துகிறார் ஆண்ட்ரூ. அதனைப் புன்னகையுடன் கேட்டு ரசிக்கிறார் அம்ரிதா.

அன்றிரவு, அவர்கள் தங்கியிருக்கும் அறைக்குள் இரண்டு திருடர்கள் நுழைகின்றனர். கத்தி முனையில் மிரட்டி, அவர்களிடம் இருக்கும் லேப்டாப், மொபைல்போன்களைத் திருடிச் செல்கின்றனர்.

அடுத்த நாள் காலையில், அது குறித்து அருகிலிருக்கும் காவல்நிலையத்திற்குப் புகார் கொடுக்கச் செல்கிறது அந்த தம்பதி. ஆனால், அங்கிருக்கும் சார்ஜெண்ட் பண்டாரா (ஷ்யாம் பெர்னாண்டோ), ‘அதனைப் பதிவு செய்ய மாட்டேன்’ என்கிறார்.

‘பொருளாதாரச் சீர்குலைவால் இலங்கை அவதிப்பட்டு வரும் நேரத்தில், இந்தப் புகாரை விசாரிக்க நேரமில்லை’ என்கிறார். உடனே, அவ்வாறு செய்தால் தான் இந்திய தூதரகத்தை நாட வேண்டிவரும் என்கிறார் கேசவ்.

அதன்பிறகு, புகாரைப் பதிவு செய்யும் பண்டாரா, மூன்று பேரைக் கைது செய்கிறார். அவர்கள், மலையகத்தைச் சேர்ந்த தமிழர்கள்.

அவர்களிடம் இருந்து தனது லேப்டாப்பும் மொபைலும் உடனடியாகப் பெற்றுத் தர வேண்டும் என்று பண்டாராவிடம் வற்புறுத்துகிறார் கேசவ். ஆனால், ‘நாங்கள் திருடவில்லை’ என்று அவர்கள் கதறுகின்றனர்.

கேசவ்விடம் பேச இயலாத வெறுமையில் அவர்களைக் கடுமையாகத் தாக்குகிறார் பண்டாரா. அதில் ஒரு நபர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.

அந்த நபர் குற்றத்தை ஒப்புக்கொண்டதாகச் சொல்லும் பண்டாரா, ‘அவர் கண் விழித்தபிறகு மட்டுமே அந்த பொருட்கள் எங்கிருக்கிறது என்பது தெரியவரும்’ என்கிறார். அதனைக் கேட்டு இன்னும் ஆத்திரமடைகிறார் கேசவ்.

ஒருகட்டத்தில், இனி அந்த லேப்டாப்பும் மொபைலும் திரும்பக் கிடைக்க வேண்டாம் என்ற மனநிலைக்கு கேசவ்வும் அம்ரிதாவும் வருகின்றனர்.

ஆனால், அதற்குள் நிலைமை கைமீறிச் சென்றுவிடுகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த நபர் மரணமடைகிறார்.

ஆத்திரமடையும் கிராம மக்கள், காவல் நிலையத்தைச் சூறையாடுகின்றனர். அதையடுத்து, அங்கு போலீஸ் படை குவிக்கப்படுகிறது.

கேசவ் – அம்ரிதா தங்குமிடத்திற்கு, அவர்களுக்குப் பாதுகாப்பு தரும் நோக்கோடு பண்டாராவும் இன்னொரு போலீஸ்காரரும் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

அந்த இரவுப்பொழுதில், இருவரும் மது அருந்துகின்றனர். அவர்கள் சாப்பிட உணவு கொடுக்கிறார் ஸ்ரீ. அவரைக் காணும் பண்டாரா, ‘நீயும் மலையகத் தமிழன் தானே’ என்கிறார். அவர் ‘ஆம்’ என்றதும், அவரைப் பண்டாரா நோக்கும் தொனியே மாறுகிறது.

அடுத்த சில நிமிடங்களில், அந்த இடத்தில் நடந்த திருட்டுக்கு ஸ்ரீயும் இக்பாலும் காரணம் என்று குற்றம்சாட்டுகிறார் பண்டாரா.

அந்த நேரத்தில், அந்த கிராமத்தினர் அவ்வீட்டின் மீது கற்கள் எறிந்து தாக்கத் தொடங்குகின்றனர்.

அதன்பிறகு என்னவானது என்பதைச் சொல்கிறது ‘பாரடைஸ்’ படத்தின் முடிவு.

கேசவ், அம்ரிதாவின் சுற்றுலாப் பயணத்தால் ஏற்பட்ட மாற்றங்களுடன் அப்படம் முடிவடைகிறது. அப்போது, அந்தக் கதைக்குள் பல கதைகள், கற்பிதங்கள், வரலாற்று நிகழ்வுகள் புதைந்திருப்பதாக உணர்கிறது நமது மனம். அது ஆளாளுக்கு வேறுபடும் என்பதுதான், பிரசன்ன விதாங்கேவின் படைப்பை உலக சினிமாவாக மாற்றுகிறது.

ஈர்க்கும் லொகேஷன்!

மையப்பாத்திரங்களான ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன் இருவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். ஒற்றுமையாக வாழ்ந்தாலும், அந்த தம்பதியரிடையே புரிதல் எப்படி இருந்தது என்பதை நாம் யோசிக்கும்விதமாக அமைந்துள்ளது அவர்களது நடிப்பு.

போலவே ஆண்ட்ரூவாக வரும் ஷ்யாம் பெர்னாண்டோ, பண்டாரா ஆக வரும் மகேந்திரா பெரைரா, ஸ்ரீயாக வரும் சுமித் இளங்கோ, இக்பால் ஆக வரும் அசார் சம்சுதீன் பாத்திரங்களும் நம்மைக் கவர்கின்றன.

இவர்களோடு ராமாயண நிகழ்வுகளோடு தொடர்புடையதாகக் காட்டப்படும் கோயில்கள், இடங்கள், மலைப்பகுதிகள் என்று லொகேஷன்களும் கூட பாத்திரங்களாகத் தெரிகின்றன. அவை நம்மை ஈர்த்து திரையுடன் ஒன்ற வைக்கின்றன.

அன்னயும் ரசூலும், துறைமுகம், கம்மாட்டிப்பாடம் படங்களின் இயக்குனரும் ஒளிப்பதிவாளருமான ராஜீவ் ரவி, இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

கதை நிகழும் களங்களை அவர் பதிவு செய்திருக்கும் விதமே, இக்கதை குறித்து நிதானமாக நாம் யோசிப்பதற்கு வழி வகுக்கிறது.

ஸ்ரீகர்பிரசாத்தின் படத்தொகுப்பு, தெளிவாகத் திரையில் நாம் பல கதைகளை, நிகழ்வுகளைக் காட்சிகளுடன் பொருத்திப் பார்ப்பதற்கான அவகாசத்தை வழங்குகிறது. அதேநேரத்தில், திரையில் விரியும் கதையைக் குழப்பமின்றிக் காண வகை செய்கிறது.

இசையமைப்பாளர் கே தனது பின்னணி இசை மூலமாக, இரண்டாம் பாதியிலுள்ள காட்சிகளின் வீரியத்தை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறார்.

தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பை ஒருங்கிணைத்து, தனக்கென்று வகுத்துக் கொண்ட பாணியில் ‘பாரடைஸ்’ படத்தைத் தந்திருக்கிறார் இயக்குனர் பிரசன்ன விதாங்கே.

இன்றைய ‘ட்ரெண்ட்’களுக்கு தகுந்ததாக, திரையில் அவரது கதை சொல்லல் தென்படுவது ஆகச் சிறப்பு.

கதாபாத்திரங்கள், களங்களைத் தெளிவாகத் திரையில் சொல்லி, மெதுமெதுவாகக் கதை திருப்பங்களையும் பின்விளைவுகளையும் விவரிக்கிறது அனுஷ்கா சேனநாயகேவின் திரைக்கதை.

நமக்குள் பல கதைகளையும் உருவாக்கும் இயல்பு கொண்டதாக இருப்பது அவரது உழைப்புக்கான பலனாகத் தென்படுகிறது.

அசை போடத் தூண்டும் திரைக்கதை!

மலையகத் தமிழர்கள் பற்றி இலங்கையிலுள்ள பொதுச்சமூகம் எப்படிப்பட்ட கருத்துகளைக் கொண்டிருக்கிறது? இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து அங்கு சுற்றுலா செல்பவர்கள், அங்கிருப்பவர்களை எப்படி நோக்குகின்றனர்?

ராமாயணத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இடங்களை, அங்குள்ள சுற்றுலா வழிகாட்டிகள் இந்தியாவில் இருந்து செல்பவர்களுக்கு எவ்வாறு அடையாளப்படுத்துகின்றனர்? இலங்கையிலுள்ள அதிகார வர்க்கம், அங்கு வாழும் மக்களை எப்படி நடத்துகிறது?

அந்த அதிகார அமைப்பில் அங்கம் வகிப்பவர்களின் சமூக, பொருளாதார, அரசியல் கருத்தாக்கம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்று பல விஷயங்களைப் பேசாமல் பேசுகிறது இந்த ‘பாரடைஸ்’.

‘ஒரு மொழி, பல பொருள்’ என்பதாக உணர வைக்கும் கதை சொல்லலைப் பல படைப்பாளிகளிடத்தில் காண முடியாது.

அந்த வகையில், பிரசன்ன விதாங்கே இதில் மீண்டுமொரு முறை நம்மை ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

இந்தப் படத்தில் மான் ஒன்றை மையப் பாத்திரங்கள் வேட்டையாட முனைவதாக ஒரு காட்சி உண்டு. அப்போது அம்ரிதா பாத்திரம் அதனைத் தடுக்கும். அந்த மான் தப்பியோடிய பிறகு, அவரது கணவராக வரும் கேசவ் பாத்திரம் சலிப்பை வெளிப்படுத்தும்.

தம்பதிகள் இருவரும் ஒரே விஷயத்தை எப்படி இருவேறாக நோக்குகின்றனர் என்பது அக்காட்சியில் தெரியவரும்.

இந்தக் காட்சியில் ‘மான்’ என்பதனை, இலங்கையின் பொதுச்சமூகம் வகைப்படுத்தி வைத்துள்ள எந்தவொரு நலிந்த பிரிவினருடன் நாம் ஒப்பிடலாம்.

இரண்டாம் பாதியில், மையப்பாத்திரங்கள் காரில் பயணித்துச் செல்லும்போது வழியில் ஒரு மான் தென்படும். இம்முறை அந்த மான் தப்பித்து ஓடாமல், நின்று நிதானமாக காரில் இருப்பவர்களை உற்று நோக்கிவிட்டுத் தன் பாதையில் செல்லும். இக்காட்சியை நம்மால் எப்படி வேண்டுமானாலும் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியும்.

இக்பால் பாத்திரம் உணவு கொண்டு வரும் காட்சியில், ‘முஸ்லிம்கள் எப்போதுமே இறைச்சி சமைப்பதில் நிபுணர்கள்’ என்று பண்டாரா பாராட்டுவதாகக் காட்டப்பட்டிருக்கும். அது பொதுச்சமூகத்தின் கருத்தாகவே நமக்குத் தென்படும். நமக்குள் வெவ்வேறு கேள்விகளையும் பதில்களையும் அள்ளித்தருவதாக இருக்கும்.

சமகால நிகழ்வுகள் மீதான இது போன்ற விமர்சனங்களைத் தாண்டி, ராமாயணத்தில் சீதை, ராமன், ராவணன் பாத்திரங்கள் இன்றைய சமூகம் கொண்டிருக்கிற கற்பிதங்களையும் கேள்விக்கு உட்படுத்துகிறது இத்திரைக்கதை.

‘ஜெயின் ராமாயணத்துல சீதை ராவணனை போரில் கொல்வதாகவும், அப்போது தேரோட்டியாக சீதையுடன் ராமன் சென்றதாகவும் ஒரு கதை இருப்பது தெரியுமா’ என்று அம்ரிதா பாத்திரம் ஆண்ட்ரூவிடம் கேட்குமிடம் அப்படியொன்று தான்.

நாம் படம் பார்த்து முடித்து வீடு திரும்பியபிறகு, இப்படிப் பல விஷயங்களை அசை போட முடியும்.

மிகச்சிறப்பான காட்சியாக்கம், எழுத்தாக்கம் கொண்ட படங்கள் மட்டுமே அதனை நிகழ்த்தும்.

பிரசன்ன விதாங்கேவின் இதர படைப்புகள் போலவே, ‘பாரடைஸ்’ படத்தின் காட்சியாக்கத்திலும் மௌனத்திற்குத் தரப்பட்டிருக்கும் இடம் அதிகம்.

அதனால், காட்சிகள் மெதுவாக நகர்வதாகச் சிலருக்குத் தெரியலாம். அவை சலிப்பூட்டவும் செய்யலாம்.

திரையில் தெரியும் இடங்கள், உள்ளரங்குகளை அழகு மிளிரக் காட்டாமல் தவிர்த்திருக்கும் காட்சியாக்க பாணி, ஒரு வீடியோ பதிவு போல அமைந்திருப்பதாகத் தெரியலாம். பிரமாண்ட படங்களைப் பார்த்து ரசித்த கண்களுக்கு, அது அயர்வூட்டலாம்.

அவற்றையெல்லாம் மீறி, படத்தில் இருக்கும் அனைத்து பாத்திரங்களின் பின்னணியையும் அலசிப் பார்த்து, அதன் வழியே அவற்றின் முன்வாழ்க்கையைக் கற்பனை செய்யத் தூண்டிய விதத்தில் நம்மை நிறையவே ஆச்சர்யப்படுத்துகிறது ‘பாரடைஸ்’.

அது மட்டுமல்லாமல், இதில் காட்டப்பட்டிருப்பது சொர்க்கமா, நரகமா என்ற கேள்விக்கான பதிலையும் நம்மையே தேர்வு செய்ய வைத்திருக்கிறது. ஒரு படம் இதை விட வேறென்ன செய்துவிட முடியும்?

– உதயசங்கரன் பாடகலிங்கம்

director Prasanna VithanageParadise Movie Reviewஇயக்குனர் பிரசன்ன விதாங்கேபாரடைஸ்  விமர்சனம்
Comments (0)
Add Comment