வானுயர இருக்கும் கட்டடங்களைக் கண்டு வியக்கும் நாம் ஏனோ அவற்றை கட்டுவதற்கு தன் கைகளில் கொப்பளங்களைச் சுமக்கும் தொழிலாளர்களைப் புறக்கணிக்கிறோம்!
கட்டடத் தொழில் என்பது இன்றைய உலகில் இன்றியமையாத தொழில். வீடு, அலுவலகம், வணிக வளாகங்கள் என மனிதனின் வாழ்க்கை பின்னிப் பிணைந்திருக்கையில் இவையெல்லாம் செயல்படுவதற்கு இடத்தை ஏற்படுத்தித் தருவதே கட்டடங்கள் தான்.
நவீன உலகின் அங்கமாக கட்டிடங்களை உருவாக்கியவர்களுக்கு கழிவறை கூட ஏற்படுத்தி தரும் வக்கற்ற சமூகத்தில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்ற குற்ற உணர்ச்சியில் இக்கட்டுரையை எழுதுகிறேன்.
கட்டுமானத் தொழிலையே நம்பி இருக்கும் உச்சனப்பள்ளியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளர்களின் கதைகளும் வலிகளும் கவனிக்கப்பட வேண்டியவை. ஆனால் அவர்களின் வலிகள் அவர்களுக்குள்ளே மட்டும் புதைக்கப்பட்டு பெரும்பான்மை சமூகத்தால் புறக்கணிக்கப்படுகிறது.
கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓசூரிலிருந்து தேன்கனிக்கோட்டைக்கு செல்வதற்கு ஒரு மணி நேரம் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும். ஓசூரில் உணர்ந்த சில்லென்ற காற்று தேன்கனிக்கோட்டை, உச்சனப்பள்ளி வரை தொடர்ந்தது.
நான் சென்றபோது மழைக்காலம். தூரல் மனதையும் உடலையும் மகிழ்ச்சிப்படுத்தியது. சென்னையில் அடிக்கும் வெயிலை ஒப்பிட்டால் உச்சனப்பள்ளியின் குளுமை சொர்க்கமாகத் தான் இருக்கும். ஆனால் குளுமையான நிலப்பரப்பில் வாழ்பவர்கள் தான் தனக்குள்ளேயே வெம்பித் தவிக்கிறார்கள்.
உச்சனப்பள்ளியில் பெரும்பாலான ஆண்கள் கட்டுமானத் தொழிலையே நம்பியுள்ளனர். இங்குள்ள பெண்களில் சிலரும் கட்டுமானத் தொழிலில் ஈடுபடுகின்றனர். அனைவரும் தேன்கனிக்கோட்டை சுற்று வட்டாரங்களில் கிடைக்கும் கட்டுமான வேலைக்கு செல்கிறார்கள்.
இவர்கள் கொத்தனார்கள் இல்லை, மேஸ்திரிகளும் இல்லை, மாறாக சிமெண்ட் மூட்டையை தூக்கி செல்லும், சிமெண்ட் கலவை கலக்கும், செங்கற்கள் எடுத்துக் கொடுக்கும் அமைப்பு சாரா தொழிலாளர்கள்.
வழக்கமாக எல்லா இடங்களில் இருப்பது போல இங்கும் சம வேலைக்கு சம ஊதியம் கிடைப்பதில்லை.
முன்ராஜ் இரு குழந்தைகளின் அப்பா. அவருக்கு சுமார் 40 வயதிருக்கும். முன்ராஜின் உடலில் பருமனான பகுதியைப் பார்க்க முடியாது. எலும்பும் தோலுமாகத் தான் இருப்பார்.
முன்ராஜிக்கு வாரம் ஆறு நாட்கள் வேலை, ஒரு நாள் விடுமுறை. விடுமுறை என்று கூட சொல்ல முடியாது, ஆறு நாட்கள் கடுமையான உடலுழைப்பை செலுத்தி உடல் சோர்ந்து, உள்ளம் சோர்ந்த பின்னும் ஏழாவது நாளும் உழைக்க உடலும் மனமும் ஒத்துழைக்காத நிலையில் முன்ராஜ் ஞாயிற்றுக்கிழமை வேலைக்கு செல்வதில்லை.
அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் பணியாற்றும் தொழிலாளிகளுக்கு சம்பளத்துடன் ஞாயிறு விடுமுறை இருப்பது போல் முன்ராஜ் போன்றவர்களுக்கு கிடைப்பதில்லை. ஓய்வு வேண்டுமென்றால் ஒரு நாள் சம்பளத்தை இழக்க வேண்டும்.
கட்டடத்திற்கு தேவையான சிமெண்ட் கலவையை கலப்பது, சிமெண்ட் மூட்டையை வேலை நடக்கும் இடத்திற்கு தூக்கிச் செல்வது, கொத்தனார் தேவையான செங்கற்களை எடுத்துக் கொடுப்பது இதெல்லாம் பெரியாள் வேலை என்று சொல்வார்கள்.
பெரியாள் வேலை பெரும்பாலும் ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பெண்கள் சித்தாள் வேலையில் ஈடுபடுகிறார்கள்.
பெரியாளுக்கும் சித்தாளுக்கும் சிறிய வித்தியாசம் தான். சித்தாள்கள் மூட்டையை தூக்க மாட்டார்கள் மற்ற எல்லா வேலையும் செய்வார்கள்.
தினசரி சுமார் பத்து மூட்டைகளை முன்ராஜ் சுமக்கிறார். முன்ராஜ், ’நான் பல நேரங்களில் மூட்டய நாலு அஞ்சு தூக்கிப் போறேன். இதனால அடிக்கடி மூட்டு வலியால அவதிப்படுறேன்.
சில நேரங்கள்ல சாப்பிடுற சாப்பாடும் செறிக்க மாட்டேங்கிது. வெயில் நேரத்துல சாப்பிட்ட பிறகு, உடனே வேலை செய்றதால செறிக்காம நெஞ்செறிச்சல் ஏற்படுது. எல்லாமே கஷ்டம் தான். ஆனா என்ன செய்ய முடியும்? நா வேலைக்குப் போனா தானே என் வீட்டுல சமைக்கவே முடியும்.
முன்ராஜ் கட்டட வேலையென்றால் அவரது மனைவி வசந்தா தோட்ட வேலை. வசந்தாவிற்கு தமிழ்ப் பேச வராது. தெலுங்கு மட்டும் தான் பேசுவார்.
வசந்தாவும் முன்ராஜீம் காலை எட்டு மணிக்கு வேலைக்காக வீட்டை விட்டு வெளியேறுகின்றனர். இரவு வீடு திரும்புவதற்கு எட்டு மணியாகிவிடும்.
காலையில் எட்டு மணிக்கு வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் வசந்தா விடியற்காலை 5 மணிக்கு விழிக்க வேண்டும். அப்போது தான் வீட்டில் உள்ள வேலை எல்லாம் முடித்துவிட்டு சமையலையும் முடித்துவிட்டு வேலைக்கும் செல்ல முடியும்.
இரவு வேலையை விட்டு வந்த பிறகும் உடல் களைப்பைப் பொருட்படுத்தாமல் சமைக்க வேண்டிய நெருக்கடி வசந்தாவிற்கு. இரவு பகல் பாராமல் உழைத்தாலும் வசந்தாவிற்கு கிடைக்கப்பெறும் கூலி வெறும் முன்னூறு ரூபாய் மட்டுமே.
வீட்டு வேலை என்றுமே உழைப்பாக அங்கீகரிக்கப்படாத சூழலில் உடல் களைத்தாலும் குழந்தைகளுக்காக குடும்பத்திற்காக வேலை செய்யும் வசந்தாவிற்கு எந்த வித அங்கீகாரமும், கூலியும் கிடைக்கப்போவதில்லை.
தோட்ட வேலை செய்யும் போது கூட, தன்னுடன் வேலை செய்யும் ஆண் பணியாளர்களுக்குக் கிடைக்கும் சம்பளம் தனக்கு கிடைப்பதில்லை என்கிறார் ஆதங்கத்துடன். ஆனாலும் வசந்தா சுழல் போல் இயங்கிக் கொண்டு தான் இருப்பார். ஏராளமான அமைப்பு சாரா பெண் தொழிலாளர்களுக்கும் இதே நிலை தான்.
உச்சனப்பள்ளியில் மற்றொரு பெண்ணைப் பற்றி கண்டிப்பாக பதிவு செய்தாக வேண்டும். கௌரி கட்டட வேலையில் சித்தாளாக உள்ளார். கௌரி கணவனை இழந்து தன் பிள்ளையுடன் தனித்து வாழ்கிறார்.
முன்ராஜிற்கு இருக்கும் அரசு வீடு கூட, கௌரிக்கு இல்லை. கழிவறையும் இல்லை. வீடு பழுதடைந்துள்ளது.
மழையினால் சுவர் ஈரமாக இருப்பதைக் காண முடிந்தது.
தரையில் பாய் இல்லாமல் படுக்கவோ, அமரவோ முடியாது. ஈரப்பதத்தினால் காய்ச்சல் ஏற்பட்டுவிடும்.
இந்த வீட்டில் தான் கௌரி 17 வயது நிரம்பிய பையனுடன் வாழ்ந்து வருகிறார். கணவர் இறப்பிற்கு பின் எளிய பெண்ணின் சொச்ச சம்பாத்தியத்தில் தான் குடும்பம் வாழ்கிறது.
நான் அவரைப் பார்த்தபோது சாப்பாட்டிற்கு தக்காளித் தொக்கு செய்துகொண்டிருந்தார். அன்றும் மறுநாளும் மூன்று வேளையும் தக்காளி தொக்கும் சாதமும் மட்டும் தான்.
சித்தாளாக நாளெல்லாம் உழைத்துவிட்டு வெறும் தக்காளி தொக்கை சாப்பிட்டால் உடல் எப்படி வலிமையாக இருக்கும்? ஆனால், கௌரிக்கு வேறு வழியில்லை. தனக்குக் கிடைக்கும் வருமானத்தில் சத்தான உணவெல்லாம் எதிர்பார்க்க முடியவில்லை.
“தனியா இருப்பது ரொம்ப சிரமமா இருக்கு! வேலைக்கும் போனும், வீட்டிலயும் சமைக்கனும், பிள்ளையையும் பாத்துக்கனும். ஒத்தாளு சம்பாத்தியத்துல என்ன செய்ய முடியும்?
வேலைக்குப் போற இடத்துல கல்லும் மண்ணும் துக்கி உடல் வலிக்கத் தான் செய்யுது. வேலை பாக்கலனா என் பிள்ளைய எப்படி காப்பாத்துறது?
ஆம்பிளைக்கே அந்த வேலை கஷ்டமா இருக்குறப்ப, பொம்புளைங்க நிலைமைய நினைச்சுப் பாரு மா?
கட்டடம் கட்டுற இடத்துல பாத்ரூம் கூட இருக்காது. அவசரத்துக்கு என்ன செய்ய முடியும். காட்ட தேடனும். மறையிரத்துக்கு இடம் கூட இல்லாததால திடீர்னு பீரியட்ஸ் வந்தா கூட மாத்துறத்துக்கு சங்கட்டமா இருக்கும்.
இத்தன சிரமத்துக்கு மத்தியில தான் வேலை செய்றோம். ஆனா ஆம்புளைங்களுக்கு 750 ரூபா கொடுக்குறாங்க. எங்களுக்கு வெறும் 500 ரூபா தான்.
வாரத்துல எல்லா நாளும் வேலைக்கு போகமுடியாது. திடீர்னு நல்லது கெட்டது வரும் அதையும் பாக்கனும் வேலையும் பாக்கனும். அதுல கிடைக்கிற வருமானத்த வச்சு சமாளிக்க முடியலை.
அவரு இருந்தா நா இப்படி கஷ்டப்பட வேண்டியதில்ல” என்று கூறும் கௌரியிடம் எப்படிச்சொல்வேன், கணவர் இருந்தாலும் வேலைக்குச் செல்லத் தான் வேண்டும் என.
ஏனென்றால் கணவரின் சம்பளம் மட்டும் குடும்பம் நடத்த போதுமானதாக இருக்காதல்லவா?
கிராமங்களில் வசதியிலும் சாதியிலும் உயர்த்தப்பட்டவர்களின் வாழும் பகுதி கட்டடங்களாக நிறைந்திருக்கிறது. நகரங்களில் கட்டடங்கள் கண்ணை கவர்கின்றன. ஆனால் அதனை உருவாக்கியவர்கள் வாழ்க்கையில் எந்தவிதமான மாற்றங்களும் நிகழவேயில்லை.
– கண்மணி