சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் ஒரு சிற்றூரில், ஒரு தாய் தனது ஆறு வயது மகனை முதலைகள் நிறைந்த ஓடையில் வீசிவிட்டார்.
அந்தக் குழந்தை காது கேளாத, வாய் பேச முடியாத மாற்றுத் திறனாளிக் குழந்தை என்பதுதான் இந்தக் கோரமான முடிவுக்கு அடிப்படைக் காரணம்.
தொடர்ச்சியாக அந்தக் குழந்தையின் குறைபாட்டைக் காரணமாக்கிக் குடும்பத்துக்குள் சண்டை நடந்துவந்திருக்கிறது.
“அக்குழந்தையை எங்காவது துரத்திவிடு” என்பது அவருடைய கணவர் அடிக்கடி பேசிவந்த வசனம்.
ஒரு நொய்மையான தருணத்தில், தன்னை மீறிய உணர்வெழுச்சியில் அதைச் செயல்படுத்திவிட்டார் அந்தப் பெண்.
குழந்தையை எறிந்த சிறிது நேரத்திலேயே தன் செயலின் கொடூரத்தை உணர்ந்து, அவரே ஊராரை உதவிக்கு அழைத்துக் கதறியிருக்கிறார். இப்போது கைது செய்யப்பட்டுக் காவலில் இருக்கிறார்.
அதைப் பற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்கள் கண்ணில் பட்டன. ஒரு தாய்க்கு இவ்வளவு கல் நெஞ்சமா என்பதே அவற்றின் சாரம். குடும்பச் சூழலும் சமூகமுமே இப்படியான குற்றங்களை இழைக்கப் பெண்களைத் தூண்டுகின்றன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.
தாய்மை என்பது பெண்ணுக்கு இயற்கை அளிக்கும் ஒரு பொறுப்பு.
ஆனால், அக்குழந்தையின் திறன்களுக்கும் குறைபாட்டுக்கும்கூட அவளே பதில் சொல்லக் கடமைப்பட்டவள் என்று கட்டமைக்கிறது நம் சமூகம்.
இப்படிச் சமூகமும், அதன் அலகான குடும்பமும் தரும் அழுத்தங்கள்தான் இதுபோன்ற கொடூரங்களுக்குக் காரணமாகிவிடுகின்றன.
சிறப்புத் தேவை கொண்ட குழந்தைகளுக்குத் தினசரி நடவடிக்கைகளுக்கே கூடுதல் கவனம் தந்து பழக்க வேண்டியிருக்கும்.
வழக்கமான வீட்டு வேலைகள் தவிரவும் கூடுதலாகச் சிகிச்சை வகுப்புகளுக்கு (Therapy classes) அழைத்துப் போவது, மருத்துவமனைக்குச் சென்று வருவது போன்ற கூடுதல் பணிச்சுமைகள் பெரும்பாலும் தாயின் தலையில்தான் விடியும்.
அதற்கு மேல் குடும்ப உறுப்பினர்களே அக்குழந்தையைச் சுமையாகப் பார்ப்பதும், அக்குழந்தையின் மீதும் தாயின் மீதும் குற்றஞ்சாட்டுவதும் நிலைமையை இன்னும் மோசமாக்குகின்றன.
சிறப்புக் குழந்தை வளர்ப்புக்காக வேலையிலிருந்து விடுமுறை எடுப்பது, அல்லது வேலையையே விடுவது போன்ற தியாகங்களையும் பெண்களே இங்கு செய்ய வேண்டியிருக்கிறது.
சில குடும்பங்களில் ஆண்கள் ஒட்டுமொத்தமாகவே குழந்தையையும் தாயையும் விட்டுப் பிரிந்துவிடுகிறார்கள்.
தனிப் பெற்றோராக மாறும்போது பொருளாதாரச் சுமையும் அப்பெண்ணின் தோளில் ஏறுகிறது.
கல்வி, விளையாட்டு, பொழுதுபோக்கு என எங்கு சென்றாலும் சிறப்புக் குழந்தைகளும், அவர்களது குடும்பங்களும் புறக்கணிப்பையும் சிறுமையையும் சந்திக்க வேண்டியிருக்கிறது.
குடும்பமாக வெளியில் செல்லும்போது குறைபாடுடைய குழந்தைகளும், அவர்களது குடும்பமும் ஏளனத்துக்கும், ஒதுக்குதலுக்கும் ஆளாகிறார்கள்.
இதனால் மனம் நோகும் பெற்றோர் பலர், தங்கள் குழந்தைகளைப் பொது இடங்களுக்கு அழைத்துச் செல்வதையே நிறுத்திவிடுகிறார்கள்.
அக்குழந்தைகளின் உடன்பிறந்தோரும் பிறருக்கு அவர்களை அறிமுகப்படுத்தவே பல குடும்பங்களில் தயங்குகிறார்கள்.
தங்கத்தில் ஒரு குறையிருந்தாலும் அதன் தரம் குறைவதில்லை என்று ஏற்றுக்கொள்வது போலவே, மனிதர்களிலும் ஏற்றத்தாழ்வு இல்லாது ஏற்றுக்கொள்ளும் மனநிலை நம் அனைவருக்கும் வாய்க்க வேண்டும்.
அப்போது மட்டுமே இத்தகைய துர்மரணங்களும் துயரங்களும் நீங்கும். சிறப்புக் குழந்தைகளின் வாழ்வில் சிறு துளியேனும் வெளிச்சம் விழும்!
– லட்சுமி பாலகிருஷ்ணன், சிறப்புக் கல்வி ஆசிரியர்.
- நன்றி : இந்து தமிழ் திசை