மென்மையான கதைகளைச் சொல்வதில் வல்லவரான இயக்குநர் ராதா மோகன் இயக்கத்தில் 2007-ல் வெளிவந்த திரைப்படம் தான் மொழி. அபியும் நானும், பொன்னியின் செல்வன் படங்களைத் தொடர்ந்து இவர் மூன்றாவதாக இயக்கிய படம். மெல்லிய நகைச்சுவையும், உணர்வுகளுமே ராதா மோகன் படத்தில் ஹைலைட்.
மொழி படத்தில் வாய் பேச இயலாத மாற்றுத்திறனாளியாக ஜோதிகா நடிப்பு அப்போது அனைவரையும் வியக்க வைத்தது. இதற்காக அவர் பிரத்யேமாக சைகை மொழியைக் (Sign Language) கற்றார். இந்தப் படம் ஜோதிகாவின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனைப் படமாக அமைந்தது.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாராட்டையும், கலெக்ஷனையும் அள்ளியது மொழி திரைப்படம். தன்னுடைய குறைபாடுகளை ஒதுக்கி அதை வெளியே தெரியாமல் வாழ்வில் எதிர்நீச்சல் போடும் ஒரு பெண்ணின் கதைதான் மொழி திரைப்படம்.
பிரித்விராஜ் ஜோதிகாவின் குறைகளை ஏற்றுக் கொண்டு அவரைக் காதலிப்பது கிளாஸ் ரகம்.
வித்யாசாகர் இசையில் அனைத்துப் பாடல்களும் மெலடியாக மனதை வருடின. ஜோதிகாவுடன் பிரித்விராஜ், பிரகாஷ்ராஜ், எம்.எஸ்.பாஸ்கர், ஸ்வர்ணமால்யா, பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் படமாக மொழி அமைந்ததால் ஜோதிகா அனைவரின் மனதிலும் நீங்கா இடம்பெற்றார்.
மொழி படத்தைப் பொறுத்தமட்டில் அதன் படத் தலைப்பின் பெயரை வைத்தே நடிகர், நடிகைகள் இருக்கின்றனர் என்பது ஆச்சர்யமான விஷயம். இது இயல்பாக அமைந்ததா அல்லது ராதாமோகன் தேர்ந்தெடுத்தாரா என்று தெரியவில்லை.
ஏனெனில் படத்தின் ஹீரோ பிரித்விராஜ் தாய்மொழி மலையாளம், ஜோதிகாவிற்கு மராத்தி, பிரகாஷ்ராஜுக்கு தாய்மொழி கன்னடம், ஸ்வரண்மால்யாவுக்குத் தாய்மொழி தமிழ், பிரம்மானந்தம் தாய்மொழி தெலுங்கு, இப்படி தென்னிந்திய மொழிகளை ஒன்றுபடுத்தி கதாபாத்திரங்கள் அனைத்தும் தேர்வு செய்யப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
மொழியே தெரியாத, பேசாத ஒரு பெண் கதாபாத்திரத்தைச் சுற்றி பலமொழி நடிகர்கள் நடித்திருப்பது வியப்பானது.
இப்படி மொழிகளைத் தாண்டி உணர்வுகள் ஒன்றே என்று படத்தில் சொல்லவருவது சுவாரஸ்யமானது. சுஜாதா மோகன் பாடிய காற்றின் மொழி பாடல் மொழிகளைக் கடந்து அனைவராலும் மிக நேசிக்கப்பட்டது.
– நன்றி: ஜான் அழகர்