மரண விளிம்பில் துளிர்க்கும் வாழ்வு மீதான நம்பிக்கை!

வலியிலும் வேதனையிலும் துடிக்கும்போது ‘ஆ’வென்று அலறுவோம். குறைந்தபட்சமாக, ஒரு முனகலாவது நம்மிடம் இருந்து வெளிப்படும். கைகளையும் கால்களையும் உதைத்து, எதையாவது செய்து அந்த வாதையைப் போக்க முயற்சிப்போம்.

ஆனால், உயிரே போய்விடக்கூடிய சூழ்நிலையிலும் இம்மியளவு கூட சத்தம் எழுப்ப இயலாத கட்டாயத்தில் சிக்கிக்கொண்டால் நம்மால் என்ன செய்ய முடியும்? ‘கொயட் பிளேஸ்’ ஆங்கிலப் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகங்களில் அப்படியொரு விஷயம் சொல்லப்பட்டிருந்தது.

இதோ, இப்போது அதன் மூன்றாம் பாகமாக ‘கொயட் பிளேஸ்: டே ஒன்’ வெளியாகியிருக்கிறது.
சரி, இந்தப் படம் தரும் காட்சியனுபவம் எப்படிப்பட்டதாக உள்ளது?

அதே கதை!

ஒரு புற்றுநோய் மருத்துவமனை. அங்கிருப்பவர்களைத் தனது உறவினர், நண்பராகப் பாவித்து அன்பு காட்டுகிறார் செவிலியராகப் பணியாற்றும் ரூபன் (அலெக்ஸ் வோல்ஃப்).

அதற்கேற்ப நோயாளிகளும் அவருடன் நல்லதொரு உறவைப் பேணுகின்றனர். ஆனால், கடுமையான புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் சமீராவுக்கு (லுபிடா யோங்கோ) அவரைக் கண்டாலே பிடிப்பதில்லை.

ஒருநாள் நோயாளிகள் அனைவரையும் மன்ஹாட்டனுக்கு ஷாப்பிங் அழைத்துச் செல்வதாகக் கூறுகிறார் ரூபன்.

எல்லோரும் தயாராக, சமீரா மட்டும் ‘நான் வரவில்லை’ என்கிறார். அவரைக் கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்கிறார் ரூபன்.

திடீரென்று அந்த நகரத்தை விண்கற்கள் தாக்குவது போலிருக்கிறது. அடுத்த சில நொடிகளில் வேற்றுக்கிரகத்தைச் சேர்ந்த ஜந்துக்கள் அங்கு தாண்டவமாடுகின்றன. சிறிதாகச் சத்தம் எழுந்தாலும், அந்த இடத்தைத் துவம்சம் செய்கின்றன.

முதலில் நடப்பது தெரியாமல் குழம்பிக் கூட்டமாக கூட்டமாக அங்குமிங்கும் ஓடுகின்றனர். பயத்தில் அலறுகின்றனர்.

அந்த ஜந்துக்களின் கொடூரமான செய்கைகள் அதனை இன்னும் அதிகமாக்குகின்றன. அதன்பிறகு, அங்கு பிணக்குவியலும் அதிகமாகிறது.

இந்தச் சூழலில், சமீராவை அந்த உயிரினங்களின் தாக்குதலில் இருந்து காப்பாற்றுகிறார் ரூபன். ஆனால், அவர் அவற்றுக்கு இலக்காகிறார்.

ப்ரெடோ எனும் பூனையை மட்டுமே தனது துணையாக எண்ணி வாழ்பவர் சமீரா. அங்கும் அதனை அழைத்து வந்திருக்கிறார். நடக்கும் களேபரத்தில், அது அவரை விட்டு ஓடிப் போவதும் திரும்பி வருவதுமாக இருக்கிறது.

அந்தச் சூழலில், ப்ரெடோவைக் காப்பது மட்டுமே சமீராவின் லட்சியமாக இருக்கிறது. அதனைத் தாண்டி, சிறுவயதில் தனக்குக் கிடைத்த தந்தையின் பியானோ வாசிப்பையும், அவர் வாங்கித் தந்த பீட்சாவின் ருசியையும் மீண்டும் ஒருமுறை பெற விரும்புகிறார்.

அதனால், ‘உயிர் பிழைத்தவர்களைக் காப்பாற்றப் படகு வருவதாக’ அமெரிக்க அரசு அறிவித்தபோதும், அதனைக் காது கொடுத்துக் கேட்கத் தயாராக இல்லை.

அப்போது, அவருக்கு எரிக் (ஜோசப் க்யூன்) என்பவர் அறிமுகமாகிறார். அவரது அருகாமை முதலில் சமீராவுக்கு எரிச்சலூட்டுகிறது.

பிறகு ப்ரெடோவை எரிக் நேசிப்பதைப் பார்த்தபிறகு, ‘அவரே அதனை வளர்க்கத் தகுதியானவர்’ என்று எண்ணத் தொடங்குகிறார் சமீரா.

அந்த நேரத்தில், அவரது ஆசைகளை நிறைவேற்றுகிறார் எரிக். அதனை எதிர்கொண்டதும், தான் இந்த உலகுக்கு வந்த கடமை முடிந்துவிட்டதாக எண்ணுகிறார் சமீரா.

அதன்பிறகு என்னவானது? சமீராவும் எரிக்கும் ப்ரெடோவும் என்னவானார்கள்? அந்த உயிரினங்களிடம் இருந்து அவர்கள் தப்பித்தார்களா அல்லது அங்கேயே வாழ்ந்தார்களா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.

திரைக்கதையில் ஏற்ற இறக்கங்கள்!

‘கொயட் பிளேஸ்’ முதல் பாகத்தில், அமெரிக்க கிராமமொன்றில் அந்த உயிரினங்களின் பிடியில் இருந்து ஒரு குடும்பம் மட்டும் எப்படிப் பிழைத்து உயிர் வாழ்கிறது என்பது சொல்லப்பட்டது.

குறைவான பட்ஜெட்டில் தயாரான அந்த படத்தில் பாத்திரங்கள் குறைவு; விஎஃப்எக்ஸ் காட்சிகள் தவிர்த்து வேறு எதுவும் செலவுகள் இல்லை.

இரண்டாவது பாகத்தில், அந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆண் இறந்துவிட, கைக்குழந்தையைத் தூக்கிக்கொண்டு தனது மகளோடும் மகனோடும் அந்தப் பெண் எவ்வாறு அந்த உயிரினங்களிடம் இருந்து தப்பிக்கிறார், அருகிலிருக்கும் நகரத்திற்குச் செல்கிறார் என்பது சொல்லப்பட்டிருந்தது.

அந்த நகரம் எவ்வாறு அந்த உயிரினங்களால் முதன்முதறையாகத் தாக்குதலுக்கு உள்ளானது என்பதனை விவரிக்கிறது மூன்றாம் பாகமான ‘கொயட் பிளேஸ்: டே ஒன்’.

அதற்கேற்ப, பிரமாண்டமாக இயங்கும் மன்ஹாட்டன் நகரம் தொடக்கத்தில் காட்டப்படுகிறது. ஆயிரக்கணக்கான மனிதர்களும் காட்டப்படுகின்றனர்.

அனைத்தும் அந்த உயிரினங்களால் சிதைவுற்ற பிறகு, வழக்கம்போல இரண்டொரு மனிதர்களின் ‘உயிர் பிழைத்தலை’ மையப்படுத்துகிறது திரைக்கதை.

அந்த பாத்திரங்களின் பின்னணியில் ஒரு நகரத்தின் சிதைவுகள் இடம்பெறுவதுதான் இந்த பாகத்தைப் பிரமாண்டமானதாக மாற்றியிருக்கிறது.

அதே காட்சியனுபவம்!

மைக்கேல் சர்னோஸ்கி உடன் இணைந்து ஜான் கிரசின்ஸ்கி, இப்படத்தின் கதையை அமைத்திருக்கிறார். அதற்குத் தானே திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் மைக்கேல்.

என்னதான் ‘ஆக்‌ஷன் அட்வெஞ்சர்’ படம் என்றாலும், அடிப்படையான மனித உணர்வுகளுக்கு முக்கியத்துவம் தராவிட்டால் படம் காலி. அதனை உணர்ந்து வடிக்கப்பட்டிருந்தன ‘கொயட் பிளேஸ்’ படத்தின் முதலிரண்டு பாகங்கள்.

இதிலும் அதனைத் தொடரும் வகையில் பூனையிடம் அன்பு பாராட்டும் சமீரா காட்டப்பட்டிருக்கிறார்.

புற்றுநோயில் அவர் வாடுவதும், பிறகு அந்த ஜந்துக்களின் பிடியில் இருந்து தப்பியோடும்போது அவரிடத்தில் வாழ்வின் மீதான நம்பிக்கை பலப்படுவதும் இந்த திரைக்கதையின் சிறப்பம்சங்கள்.

அதனால், முதல் இரண்டு பாகங்களில் இருந்த அதே காட்சியனுபவம் இதிலும் நமக்குக் கிடைக்கிறது.

அதேநேரத்தில், அந்த தொனியில் அமைந்த காட்சிகள் படத்தில் ஆக்‌ஷன் எபிசோடுக்கான பரபரப்பை மட்டுப்படுத்துகின்றன என்பதையும் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.

பாட் ஸ்கோலாவின் ஒளிப்பதிவு, சிமோன் பௌலஸின் தயாரிப்பு வடிவமைப்பு, கிரிகொரி ப்ளாட்கின் மற்றும் ஆண்ட்ரூ மாண்ட்ஸினின் படத்தொகுப்பு ஆகியவற்றோடு அலெக்ஸிஸ் க்ரெப்சாஸின் பின்னணி இசை சேர்ந்து நம்மை உணர்வுப்பூர்வமாகத் திரையுடன் பிணைக்கிறது.

லுபிடா யோங்கோ, ஜோசப் க்யூன், அலெக்ஸ் வோல்ஃப் மூவருமே நம் மனதைத் தம் நடிப்பால் கொள்ளையடிக்கின்றனர்.

முதல் இரண்டு பாகங்களில் முக்கிய வேடத்தில் நடித்த ஜமூன் ஹன்சோ இதில் இரண்டொரு காட்சிகளில் ‘கௌரவமாக’ தலைகாட்டியிருக்கிறார்.

சிறிதாக ஒலிக்கும் சத்தத்திற்கும் முக்கியத்துவம் தருகிறது இப்படத்தின் திரைக்கதை. அதனாலேயே, தியேட்டரில் கடுகு விழுந்தாலும் அந்த ஒலி கேட்கும் எனும் சூழல் நிலவுகிறது. அந்த நிசப்தமே, இப்படம் மீது ரசிகர்களுக்கு இருக்கும் பிணைப்பினைப் புலப்படுத்துகிறது.

எந்நேரமும் வாகன இரைச்சல், மனிதர்களின் கூச்சல், எந்திரங்களின் அலறல் என்றிருக்கும் நகரச்சூழல் வாழ்விலிருந்து விடுபட்டு, சிறிது நேரம் மலையுச்சியின் விளிம்பில் ‘டைட்டானிக்’ பட ரோஸ் – ஜேக் போல நம்மைக் கைகளை விரித்து பரவசம் கொள்ளச் செய்தன ‘கொயட் பிளேஸ்’ முதலிரண்டு பாகங்கள். இந்தப் படமும் அந்த மாயாஜாலத்தை ஏறக்குறைய செய்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

– உதயசங்கரன் பாடகலிங்கம்

A Quiet Place: Day One' Reviewகொயட் பிளேஸ் விமர்சனம்
Comments (0)
Add Comment