ராகுல் காந்தியைப் பலரும் விளையாட்டுப் பிள்ளையாகவே பார்த்தார்கள். ஆட்சியை மட்டுமின்றி எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்து, காங்கிரஸ் கட்சி திக்குத் தெரியாமல் நின்ற சமயத்தில் வெளிநாடுகளுக்குப் பறப்பது, நாடாளுமன்றம் கூடும்போது மட்டும் இந்தியா வருவது, மக்களவையில் உரையாற்றிவிட்டு, பிரதமர் மடியில் போய் அமர்ந்து கொள்வது என ராகுலும் விளையாட்டு பிள்ளையாகவே நடந்து கொண்டார்.
ராகுலின் ஆட்டம்
அவை எல்லாம் வெறும் ஷோ, நாடகம் என நாட்டு மக்களுக்கு இரண்டு ஆண்டுகளில் உணர்த்தி இருக்கிறார். எட்டு ஆண்டுகளாக பாஜக ஆட்சியை ஊன்றி கவனித்த ராகுல், தனது ஆட்டத்தை அதன் பின் ஆரம்பித்தார்.
நாடு தழுவிய இரண்டு பாத யாத்திரைகளை நடத்தி, காங்கிரசுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய கர்நாடகம், தெலுங்கானா ஆகிய இரு மாநிலங்களை, தனது கட்சியின் ஆளுகைக்குள் கொண்டு வந்தார். வட மாநிலங்களிலும், கட்சியை ஸ்திரப்படுத்தினார்.
பிரதமரை தீர்மானிப்பதில் பிரதான பங்கு வகிக்கும், நாட்டின் பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில், கடந்தத் தேர்தலில் காங்கிரசுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. இந்த முறை காங்கிரஸ், 6 தொகுதிகளில் வாகை சூடியதற்கு ராகுலின் உத்தியே காரணம்.
அரியானாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளில், கடந்தத் தேர்தலில் ஒரு இடத்திலும் காங்கிரஸ் ஜெயிக்கவில்லை. இந்த முறை பாதி தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்றியது.
ராஜஸ்தான், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில், காங்கிரஸ் கணிசமான இடங்களில் வென்றது. இந்த வெற்றிகளின் பின்னணியில் நிற்பவர், ராகுல்.
மக்களவையில் மொத்தம் 543 தொகுதிகள் உள்ளன. 55 இடங்களில் வென்றால் மட்டுமே எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறமுடியும். கடந்த இரண்டு தேர்தல்களிலும், அந்த இலக்கை காங்கிரஸ் எட்டவில்லை.
இந்த முறை 99 தொகுதிகளில் காங்கிரஸ் வென்று, எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தியை காங்கிரஸ் கட்சி நியமித்தது.
ராகுலின் பொறுப்புகள்
நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்கும் நாடாளுமன்றம் சரியான முறையில் இயங்குவதை உறுதி செய்யும் மிகப் பெரிய பொறுப்புக் கொண்டவர் எதிர்க்கட்சித் தலைவர்.
எதிர்க்கட்சித் தலைவரின் அதிகாரங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கே சுருங்கப் பார்க்கலாம்.
அரசின் திட்டங்கள், கொள்கைகள் தவறாக இருந்தால் அதை விமர்சித்து முதல் குரல் கொடுப்பவர் எதிர்க்கட்சித் தலைவர்.
மக்களவையில் அமைக்கப்படும் முக்கிய குழுக்களின் உறுப்பினராக எதிர்க்கட்சித் தலைவர் இருப்பார்.
பொதுக் கணக்குக் குழு, பொதுத் துறை நிறுவனங்கள் சார்ந்த குழுக்கள், நாடாளுமன்ற விவகாரங்கள் தொடர்பான குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு நாடாளுமன்ற கூட்டுக் குழுக்களின் உறுப்பினராக எதிர்க்கட்சித் தலைவர் செயல்படுவார்.
லோக்பால் தலைவர், சிபிஐ இயக்குநர், தேர்தல் ஆணையர், மத்திய தகவல் ஆணையர், தேசிய மனித உரிமை ஆணையத் தலைவர் உள்ளிட்ட முக்கிய பதவிகளுக்கான தேர்வுக் குழுவில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பிரதமருடன் ராகுல் இடம்பெறுவார்.
வசதிகள் என்னென்ன?
கடந்த 20 ஆண்டுகால அரசியல் பயணத்தில், ராகுல் காந்திக்கு முதன்முறையாக அரசியல் சாசனப் பதவி கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு பல்வேறு வசதிகள் கிடைக்கும்.
ராகுலுக்கு, டெல்லியில் ‘டைப்-8‘ குடியிருப்பு கிடைக்கும். இதன் பரப்பளவு 8,250 சதுர அடி. தனி வளாகத்தின் நடுவே வெள்ளை மாளிகை போல் அமைந்துள்ள இந்த பங்களாவில் வரவேற்பறை, படுக்கையறைகள் என மொத்தம் 7 பெரிய அறைகள் உள்ளன.
இந்த பங்களாவில் அரசு செலவில் சோபா, மேசை, நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அளிக்கப்படும். டெல்லியில் இந்த மாதிரியான சொகுசு பங்களாவின் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய். வாடகை என்றால் பல லட்சங்கள்.
எதிர்க்கட்சித் தலைவர் பதவி, கேபினட் அமைச்சருக்கு இணையானது. எம்.பி.யாக ராகுலுக்கு 2 லட்சம் ரூபாய் மாத ஊதியம் கிடைத்தது. இனி இது – 3.3 லட்சம் ரூபாயாக உயரும்.
இந்தப் பதவிக்கு என மாதச் செலவுகளும் உண்டு. ராகுல், 14 உதவியாளர்களை நியமித்துக் கொள்ளலாம். அவர்களுக்கு அரசாங்கமே ஊதியம் வழங்கும்.
ராகுலுக்கு இனி அனைத்து விவகாரங்கள் மற்றும் மசோதாக்கள் மீதான விவாதத்தில் பேசுவதற்கு முக்கிய இடம் அளிக்கப்படும்.
இந்த சமயங்களில் எதிர்க்கட்சிகளின் குரலாக ஒலிக்கும் பொறுப்பு அவருக்கு உண்டு.
மக்களவைக்கு 5-வது முறையாக தேர்வாகியுள்ள ராகுலுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி மிக இளம் வயதில் கிடைத்துள்ளது. இது, ராகுலுக்கு அக்னி பரீட்சை என சொல்கிறார்கள், அரசியல் பார்வையாளர்கள்.
எதிர்கால அரசியலை கட்டமைத்துக் கொள்ள, ராகுலுக்கு இது பொன்னான வாய்ப்பு – இதனை அவர் பயன்படுத்திக் கொள்வதில் தான், அவரது எதிர்காலமும், இந்தியா கூட்டணியின் எதிர்காலமும் உள்ளது என்றால் மிகை அல்ல.
– மு.மாடக்கண்ணு