இன்னும் நூறாண்டுகள், ஆயிரம் ஆண்டுகள் கழித்து இந்தப் பூமி, பிரபஞ்சம் எப்படி இருக்கும் என்பதைத் தங்களது கற்பனையில் வடித்த படைப்பாளிகள் பலர். அக்கதைகளைத் தாங்கிப் பல திரைப்படங்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன.
அந்தப் படங்கள் உலகம் முழுக்க வரவேற்பையும் பெற்றிருக்கின்றன. ஆனால், திரையில் பிரமாண்டத்தைக் காட்டப் பணத்தை அதிகமாகக் கொட்ட வேண்டுமென்ற காரணத்தால் இந்தியாவில் அப்படிப்பட்ட படங்களை உருவாக்கப் பெரிதாக ஆர்வம் காட்டப்பட்டதில்லை.
அரிதாகச் சில படங்கள் அம்முயற்சியில் ஈடுபட்டு, மிக அரிதாக வெற்றியையும் சுவைத்திருக்கின்றன. அந்த வரிசையில் மிக முக்கியமானதொரு படைப்பாக அமையும் என்ற நம்பிக்கையை உருவாக்கியது ‘கல்கி 2898 ஏடி’ படக்குழு.
‘பான் இந்தியா’ நட்சத்திரமாகக் கருதப்படுகிற பிரபாஸ் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, பசுபதி, சாஸ்வதா சாட்டர்ஜி, ஷோபனா, திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை நாக் அஸ்வின் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் இதற்கு இசையமைத்துள்ளார்.
முன் தயாரிப்புப் பணிகள் தொடங்கி ட்ரெய்லர் வெளியீடு, பத்திரிகையாளர் சந்திப்பு என்று ‘கல்கி 2898 ஏடி’ தொடர்பான ஒவ்வொரு அசைவும் மிகப்பெரிய எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் உருவாக்கியது.
அதற்கேற்ப, அப்படம் திருப்தியான காட்சியனுபவத்தைத் தருகிறதா?
ஆறாயிரம் ஆண்டு கால கதை!
மகாபாரத யுத்தத்தில் அர்ஜுனன் மகனைக் கொல்கிறார் அஸ்வத்தாமன். அவரது மனைவியின் வயிற்றில் வளரும் கருவையும் கொலை செய்கிறார்.
அதற்குத் தண்டனையாக, ‘கலியுகம் முடியும் வரை உயிர் வாழ்வதே உனக்குத் தண்டனை’ என்று அஸ்வத்தாமனை சபிக்கிறார் கிருஷ்ணர்.
மேலும், ‘ஆறாயிரம் ஆண்டுகள் கழித்து, நான் ஒரு பெண்ணின் வயிற்றில் குழந்தையாக உருவெடுப்பேன். அப்போது நீயே என்னைக் காப்பாய். அப்போது, இந்த பாவத்தில் இருந்து விடுபடுவாய்’ என்கிறார். அதன்பிறகு, அந்த காத்திருப்பு காலத்தைக் கழிக்கத் தொடங்குகிறார் அஷ்வத்தாமன்.
ஆறாயிரம் ஆண்டுகள் கழித்து, கி.பி.2898இல் பூமியே சிதைந்து கிடக்கிறது. காசி மட்டுமே மீதமுள்ள ஒரே நகரமாக இருக்கிறது. அங்கு வாழ்பவர்கள் அடிமைகளாக இருக்கின்றனர்.
ஆனால், அதன் அருகே அந்தரத்தில் இருக்கும் ‘காம்ப்ளக்ஸ்’ எனும் குடியிருப்பில் வசிப்பவர்கள் மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். அங்குதான், அதனை ஆட்சி செய்து வரும் ‘சுப்ரீம்’ யஷ்கின் (கமல்ஹாசன்) இருக்கிறார்.
சுப்ரீம் தனது இளமையை மீட்டெடுக்க, 150 நாட்கள் தாண்டிய கருவில் இருந்து ஒரு திரவத்தைப் பிரித்தெடுக்க வேண்டும் என்று மருத்துவர்களுக்குக் கட்டளையிடுகிறார்.
அதற்காகவே ஒரு ஆய்வகம் அமைக்கப்பட்டு, அங்கு பெண்களுக்குச் செயற்கை முறையில் கருத்தரிக்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
ஆனால், 90 நாட்களைத் தாண்டி எந்தப் பெண்ணும் வெற்றிகரமாகக் கருவைச் சுமக்காத நிலையே அங்கு நிலவுகிறது.
அதனால், தனக்குத் தேவையான திரவத்தை உடனடியாகக் கொண்டுவருமாறு சுப்ரீம் கட்டளையிடுகிறார். காம்ப்ளெக்ஸின் தளபதியான மனஸ் (சாஸ்வதா சாட்டர்ஜி) அதனை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கிறார்.
இந்த நிலையில், ஆய்வகத்தில் பணியாற்றும் ‘எஸ்யுஎம் 80’ எனும் ஒரு பெண் (தீபிகா படுகோனே) தனது கர்ப்பத்தை 5 மாதங்களுக்கும் மேலாக மறைத்து வருகிறார். ஒருநாள் அந்த விஷயம் ‘காம்ப்ளக்ஸ்’ஸில் இருப்பவர்களுக்குத் தெரிய வருகிறது. அவர் சுற்றி வளைக்கப்படுகிறார்.
‘சுப்ரீம்’ யஷ்கினிடம் அத்தகவலைத் தெரிவிப்பதற்கு முன்னதாக, அந்தப் பெண்ணின் வயிற்றில் இருக்கும் கருவில் இருந்து திரவத்தை எடுக்க ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்த நேரத்தில், அங்கு மின் தடை ஏற்படுகிறது.
ஆய்வகத்தில் இருக்கும் புரட்சியாளர் படையைச் சேர்ந்த பெண் ஒருவர், அவரைத் தப்ப வைக்கிறார். ஆய்வகத்தின் வெளியே தனது சகாக்கள் காத்திருப்பதாகவும், அவர்கள் அவரைத் தங்களது இடமான சம்பாலாவுக்கு அழைத்துச் செல்வார்கள் என்றும் கூறுகிறார்.
அந்தப் பெண் தப்பியதை அறியும் மனஸ், அவரைப் பிடிக்கப் பல படைகளை அனுப்புகிறார்.
அதே நேரத்தில், காம்பளக்ஸில் ஒரு உறுப்பினராக நுழைவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ள பைரவா (பிரபாஸ்), தப்பித்துப் போன பெண்ணின் தலைக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள விலையைப் பெற விரும்புகிறார்.
புரட்சிப்படையினர் சென்ற பாதையில் பயணிக்கிறார்.
இதற்கிடையே, காசியில் மண்ணுக்கடியில் புதைந்த ஒரு கோயிலுக்குள் பல ஆண்டுகளாகத் தவத்தில் இருந்த அஸ்வத்தாமன், அதனைக் கலைத்துவிட்டு வெளியுலகுக்கு வருகிறார்.
அந்தப் பெண்ணுக்கு உதவுவதே தனது கடமை என்று எண்ணுகிறார்.
மனஸ் அனுப்பி வைத்த படைகள் ஒருபுறம், தனது லட்சியத்தை நிறைவேற்றும் உறுதியோடு பைரவா ஒருபுறம் என்றிருக்க, அவர்களைச் சமாளித்து அந்தப் பெண்ணைக் காப்பாற்றப் போராடுகிறார் அஸ்வத்தாமன்.
அந்த மோதலில் வென்றது யார் என்பதைச் சொல்வதோடு, ‘கல்கி 2898 ஏடி’ முடிவடைகிறது. கூடவே, பைரவாவின் உண்மையான சுயரூபம் என்பதையும் வெளிப்படுத்துகிறது. அதுவே, இந்த முதல் பாகத்தின் யுஎஸ்பியாகவும் விளங்குகிறது.
அசத்தும் தொழில்நுட்பம்!
இந்தப் படத்தில் நட்சத்திரங்கள் வாரியிறைக்கப்பட்டிருக்கின்றனர் என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும்.
பிரபாஸ் இதில் ஹீரோ என்றபோதும், அவருக்கான ‘பில்டப்’ காட்சிகள் கூட ‘ஓவர்’ எனும் எல்லையைத் தொடவிடாமல் பார்த்திருக்கிறார் இயக்குனர். அதுவே, கிளைமேக்ஸ் காட்சிகள் மற்றும் இதர சண்டைக்காட்சிகளை ரசிக்க வைத்திருக்கிறது.
தீபிகா படுகோனே இதில் நாயகி என்று சொல்ல முடியாது. அவரது பாத்திரத்திற்கு இக்கதையில் முக்கியத்துவம் அதிகம்.
இவர்கள் இருவரையும் தாண்டி ‘ஸ்கோர்’ செய்வது அமிதாப்பச்சன் தான். அவரது இருப்பே, இக்கதையுடன் நம்மைப் பிணைக்கிறது.
கமல்ஹாசன் இதில் வில்லன் சுப்ரீம் யஷ்கின் ஆக வருகிறார். முழுக்க ‘க்ரீன்மேட்’டில் எடுக்கப்பட்ட காட்சிகளில் அவர் இடம்பெற்றிருப்பதால், அவரது முகபாவனைகளை, உடலசைவுகளை ரசிக்கும் வாய்ப்பு நமக்கு இதில் கிட்டவில்லை. அவரது உருவமே ‘விஎஃப்எக்ஸில்’ வார்க்கப்பட்டதாக உள்ளது.
இவர்கள் தவிர்த்து மிருணாள் தாகூர், ராஜேந்திர பிரசாத், ஷோபனா, சாஸ்வதா சாட்டர்ஜி, பசுபதி, அன்னா பென், மாளவிகா, காவ்யா ராமச்சந்திரன் என்று இரண்டு டஜன் கலைஞர்களாவது இதில் வந்து போயிருப்பார்கள்.
பிரம்மானந்தம் ஆங்காங்கே நம்மைச் சிரிப்பூட்ட முயன்றிருக்கிறார். சின்ன சைஸ் ‘ரோபோ’வாக வந்து கொஞ்சமாய் கலககலப்பூட்டுகிறது கீர்த்தி சுரேஷின் குரல்.
இவர்கள் தவிர்த்து விஜய் தேவரகொண்டா, துல்கர் சல்மானோடு தெலுங்கு இயக்குனர்கள் எஸ்.எஸ்.ராஜமௌலி, ராம்கோபால் வர்மா, கே.வி.அனுதீப், ஸ்ரீனிவாஸ் அவசரலாவும் இதில் தலைகாட்டியிருக்கின்றனர்.
டியோகே ஸ்டோயில்கோவிக்கின் ஒளிப்பதிவு புதியதொரு உலகத்தைக் காட்டுகிறது. பெரும்பாலான காட்சிகள் ‘க்ரீன்மேட்’டில் படமாக்கப்பட்டு விஎஃப்எக்ஸ், டிஐ நுட்பங்கள் கொண்டு செறிவூட்டப்பட்டாலும், அதற்கான ஆதாரத்தை மிகச்சிறப்பாகத் தந்திருப்பது திரையில் தெரிகிறது.
அது போன்ற பல தொழில்நுட்பக் கலைஞர்களின் அசாதாரணமான உழைப்பே, இப்படத்தை சிகரத்தில் ஏற்றியிருக்கிறது.
இந்தப் படம் 3 மணி நேரத்திற்கும் மேலாகத் திரையில் ஓடுகிறது. சில காட்சிகள் விறுவிறுப்பூட்டினாலும், பல காட்சிகள் கொட்டாவியை வரவழைக்கின்றன.
அதனை உணர்ந்தபிறகு, படத்தொகுப்பாளர் கோட்டகிரி வெங்கடேஷ்வர ராவ் ரொம்பவே சிரமப்பட்டிருப்பது பிடிபடுகிறது.
இந்தப் படத்தின் காட்சியாக்கம் நம்மை ‘ஸ்டார் வார்ஸ்’, ‘மேட் மேக்ஸ்’ வகையறா திரைப்படங்கள் பார்ப்பது போன்ற உணர்வை உருவாக்குகிறது. அதனை இன்னும் உயரத்திற்குக் கொண்டுசெல்வதில் சந்தோஷ் நாராயணனின் ‘டெக்னோ’ இசை முன்னிலை வகிக்கிறது. இப்படத்திற்குப் பிறகு, அவர் இந்தி சினிமாவிலும் கோலோச்சக் கூடும்!
நிதின் ஜிகானி சவுத்ரி இப்படத்தில் தயாரிப்பு வடிவமைப்பாளராகப் பணியாற்றியிருக்கிறார்.
இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் உருவாக்க விரும்பிய உலகை நிர்மாணிப்பதில் அவரது பங்கு முக்கியமானதாக உள்ளது.
அது மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தோடு புராணக் கற்பிதங்களையும் கலந்து தரும் சவாலை அவர் வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்கிறார்.
யவடே சுப்பிரமணியம், மகாநடியைத் தொடர்ந்து கல்கி 2898யை தந்திருக்கிறார் இயக்குனர் நாக் அஸ்வின். இந்தப் படத்திற்காக அவர் கொட்டியிருக்கும் உழைப்பு அசாதாரணமானது.
தான் பார்த்த மேற்கத்திய படங்களின் தாக்கத்தை இதில் அவர் வெளிப்படுத்தியிருந்தபோதும், அதனை இங்குள்ள ரசிகர்கள் ‘அந்நியமாக’ நினைத்துவிடக் கூடாது என்று மெனக்கெட்டிருப்பது சிறப்பு.
ஆனால், அந்த கதை சொல்லல் சிலரை ‘அந்நியமாக’ உணர வைக்கக் கூடியது என்பதையும் மறுக்க முடியாது.
முக்கியமாக, சுமார் 860 ஆண்டுகள் கழித்து பூமி தன் வளங்களை இழந்து வறண்டு போயிருக்கும் என்பதைத் தெளிவுபடுத்தாத காரணத்தால் முழுக்கதையும் ‘அம்புலிமாமா’தனமாகத் தென்படவும் வாய்ப்புண்டு.
அசாதாரணமான உழைப்பு!
கிட்டத்தட்ட ஐந்தாண்டுகள் ஒரு படத்திற்காகச் செலவிடுவதென்பது கொஞ்சம் அதிகப்படியானதுதான். ஆனால், அது படப்பிடிப்பு மட்டுமே சார்ந்ததல்ல என்பது கொஞ்சம் ஆறுதல் தரும் விஷயம்.
இது போன்ற வகைமையில் அமைந்த மேற்கத்திய படங்களை அப்படியே பிரதியெடுக்காமல், முடிந்தவரை திரைக்கதையில் சிறப்பாக ‘முலாம்’ பூசியிருக்கிறார் நாக் அஸ்வின். போலவே, பின் தயாரிப்பு பணிகளும் அபாரமானதொரு உழைப்பைக் கொண்டிருக்கின்றன.
ரொம்பவே வன்முறை நிறைந்த சண்டைக்காட்சிகளோ, நெளிய வைக்கும் ஆபாச சித்தரிப்புகளோ இதில் இல்லை. புராணத்தையும் எதிர்காலத்தை மையப்படுத்திய அறிவியல் புனைவையும் கலந்திருக்கும் திரைக்கதை பாணி கொஞ்சம் ‘அசூயை’யை ஏற்படுத்த வாய்ப்புண்டு.
போலவே, படத்தின் நீளமும் அயர்வைத் தரக்கூடியது. அது போன்ற தடைகளைச் சமாளிக்கத் தயார் என்றால், ‘கல்கி 2898 ஏடி’ படம் புதியதொரு உலகைக் காட்டும்.
ஒவ்வொரு திரைப்படத்தையும் தேடித் தேடிப் பார்ப்பது அப்படியொரு அனுபவத்திற்குத்தானே என்று நினைத்தால், நீங்கள் இப்படத்தைப் பார்க்கலாம்.
– உதயசங்கரன் பாடகலிங்கம்