கல்கி படத்தின் டிக்கெட் விலை ரூ.500!

தெலுங்கானா காங்கிரஸ் அரசு அனுமதி

தெலுங்கு திரை உலகின் தரமான இயக்குநர்களில் ஒருவர், நாக் அஸ்வின். நடிகை சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றைக் களமாக கொண்டு இவர் இயக்கிய ‘மகாநடி’ எனும் தெலுங்கு திரைப்படம், அவருக்கு பெரும் அங்கீகாரத்தை அளித்தது.

இந்தப்படம் தமிழில் ‘நடிகையர் திலகம்’ என்ற பெயரில் ரிலீஸ் ஆகி, இங்கும் வசூல் குவித்தது. இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்தப்படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கியுள்ள ‘சயின்ஸ் பிக்‌ஷன்’ பான் இந்தியா  திரைப்படம், ’கல்கி 2898 ஏடி’. சுமார்  600 கோடி ரூபாய் செலவில் உருவாகியுள்ளது.

இதில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, ஷோபனா, பசுபதி, அன்னா பென் ஆகியோர் நடித்துள்ளனர். வில்லனாக கமல்ஹாசன் நடித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தின் கதை மகாபாரத காலத்தில் தொடங்கி, கி.பி 2898-ம் ஆண்டில் முடிகிறது. சுமார் 6,000 ஆண்டுகள் பயணிக்கும்  கதை .

காங்கிரஸ் அரசாங்கம்  தாராளம்

உலகம் முழுவதும் ‘கல்கி ‘திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்தப் படத்தை தினந்தோறும்  6 காட்சிகள் திரையிட அனுமதிக்கக் கோரியும், பட்ஜெட் கருதி படத்தின் டிக்கெட் விலையை உயர்த்த அனுமதிக் கேட்டும் படத்தைத் தயாரித்த வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் தெலங்கானா மாநில காங்கிரஸ் அரசிடம் மனு அளித்தது.

இதனை பரிசீலித்த  தெலங்கானா அரசு,  ‘கல்கி‘ திரைப்படம் வெளியாகும் தேதியில் இருந்து தொடர்ந்து 8 நாட்களுக்கு – அதாவது ஜூன் 27-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை – பிரத்தியேகமாக 5 காட்சிகள் திரையிட அனுமதி அளித்துள்ளது. முதல் நாள், அதாவது இன்று  மட்டும் அதிகாலை 5.30 மணி காட்சிக்கு அனுமதி அளித்து, 6 காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டது.

‘சிங்கிள் ஸ்கிரீன்‘ தியேட்டரில் 75 ரூபாய் வரை டிக்கெட் விலையை உயர்த்தவும்,  ‘மல்டிபிளக்ஸ்‘ தியேட்டர்களில் 100  ரூபாய் வரை டிக்கெட் விலையை உயர்த்தவும் தெலுங்கானா அரசாங்கம்  அனுமதி அளித்துள்ளது. இதனால்,  கல்கி படத்தின் டிக்கெட் விலை தியேட்டர்களில் 265 ரூபாய்  முதல் 495 ரூபாய்  வரை இருக்கும்.

மும்பையில் ரூ. 2,300

இந்த நிலையில் கல்கி 2898 ஏ.டி படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்பு காரணமாக மும்பையில் படத்தின் டிக்கெட்டுகள் நேரடியாக திரையரங்குகளிலேயே எக்கச்சக்கமான  விலைக்கு விற்கப்பட்டுள்ளது.

மும்பையில் உள்ள ’ஜியோ வேர்ல்ட் பிளாசா‘-வில் கல்கி படத்துக்கான டிக்கெட்டுகள் 2,300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே பட நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”எங்கள் குழுவின் 4 ஆண்டு கால உழைப்பில் ரத்தம், வியர்வையை சிந்தி இந்தப் படத்தை உருவாக்கியுள்ளோம் – திருட்டு விசிடியில் படம் பார்க்க வேண்டாம்” என கேட்டுக் கொண்டுள்ளது.

– பாப்பாங்குளம் பாரதி.

Comments (0)
Add Comment