சன் தொலைக்காட்சியில் இயக்குநர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் தொடர், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது.
பெண்கள் முன்னேற்றத்தை மையப்படுத்தி மட்டுமின்றி, குடும்பத்தில் ஆண்களின் பிற்போக்குத்தனங்களை சுட்டிக்காட்டி எடுக்கப்பட்டு வந்த இந்தத் தொடர், 744 எபிஸோடுகளுடன் நிறைவடைந்தது. இது யாரும் எதிர்பாராத ஒன்று என்றாலும், எதிர்நீச்சல் தொடரின் இரண்டாம் பாகம் விரைவில் வரும் என அத்தொடரின் நடிகர்கள் சூசகம் தெரிவித்துள்ளனர்.
எதிர்நீச்சல் தொடரின் இறுதிக்கட்ட படப்பிடிப்பின்போது சக நடிகர்கள் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி பிரியாவிடை பெற்றனர். அது தொடர்பான விீடியோக்களும் வெளியாகியிருந்தன.
இந்நிலையில் எதிர்நீச்சல் தொடரில் நந்தினி பாத்திரத்தில் நடித்த ஹரிபிரியா இசை நடனப் பள்ளியைத் தொடங்கியுள்ளார்.
பரதநாட்டிய நடனத்தின்மீது தீராத பிரியம் கொண்ட அவர், தற்போது அதனை பயிற்றுவிக்கும் ஆசிரியையாகவும் மாறியுள்ளார்.
காலி கல்பா என தனது நடனப் பள்ளிக்கு பெயரிட்டுள்ளார்.
கோடம்பாக்கம், போரூர் ஆகிய இரு இடங்களில் வகுப்புகள் நடக்கின்றன. இணையம் வழியாக ஆன்லைன் நடன வகுப்புகளையும் அவர் எடுப்பதாக அறிவித்துள்ளார்.
சின்னத்திரையில் நுழைவதற்கு முன்பே பரதநாட்டிய கலைஞராக இருந்த ஹரிபிரியா, தற்போது அதனை பயிற்றுவிக்கும் ஆசிரியையாக மாறியுள்ளார்.
எதிர்நீச்சல் தொடர் முடிந்ததும், நிஜமாகவே வாழ்க்கையில் எதிர்நீச்சல் போடத் தொடங்கியுள்ளதாக ரசிகர்கள் பலர் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.