ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வெற்றி ரகசியம்!

உலகில் எங்கும் காணாத அதிசயங்களை மதுரையில் காணலாம். இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஆங்கில திரைப்பட நடிகருக்கு அகில உலக ரசிகர்கள் மன்றம் வைத்து அலப்பறையைக் கொடுத்தவர்கள் மதுரை ரசிகர்கள் !

ஆங்கில நாவலாசிரியர் இயன் ஃபிளெமிங்கின் பிரசித்தி பெற்ற கதாப்பாத்திரம் ‘ஜேம்ஸ் பாண்ட் 007’. அதை மிகச் சிறப்பாக நடித்து அதற்கு உயிர் தந்தவர் ‘சீன் கானரி’.

சீன் கானரி ஜேம்ஸ் பாண்ட்டாக நடித்த முதல் திரைப்படம் 1962-ல் வெளியான டாக்டர் நோ (Dr.No). இரண்டாவதாக 1963-ல் வெளியான ரஷ்யா வித் லவ் (Russia with Love) 1964-ல் கோல்ட் ஃபிங்கர் (Gold Finger).

1965-ல் தண்டர் பால் (Thunder Ball) பின்னர் யூ ஒன்லி லிவ் டுவைஸ் (You Only Live Twice) இறுதியாக 1971-ல் வெளியானது டயமென்ட் இஸ் ஃபாரெவர் (Diamond is Forever) அதன் பின்னர் அவர் வேறு கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சீன் கானரியின் ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்திற்கு மதுரை ரசிகர்களின் வரவேற்பு அளவிட முடியாதது. மொழி புரியாமலேயே ஜேம்ஸ் பாண்ட் படங்களை அவ்வளவு ரசித்தார்கள்.

அப்போதெல்லாம் ஆங்கிலப் படங்கள் வெளியாகி மூன்று நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தான் மதுரையில் திரையிடப்படும். அதுவும் கரிமேட்டுப் பகுதியில் இருந்த பரமேஸ்வரி தியேட்டரில் மட்டும் தான்.

மதுரையின் மேற்கிலிருக்கும் கரிமேடு பகுதி 1960 – 70 களில் ரவுடித்தனத்திற்கு பேர் போனது. அங்கு எல்லாவித சட்டவிரோத காரியங்களும் நடந்து கொண்டிருந்தது. லுங்கியை ஏற்றி விட்டு ஒரு சவுடாலுடன் லந்து கொடுக்கின்ற இளைஞர் கூட்டம். ஆனால் அவர்களை எல்லாம் சைலென்ட்டாக்கி அசத்திப் போட்டான் – ஜேம்ஸ் பாண்ட்!

ஜேம்ஸ் பாண்ட் படங்கள் நூறு நாட்களுக்கும் மேல் பரமேஸ்வரி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியது. படத்திற்கு வந்த 90 சதவீத ரசிகர்களுக்கு படத்தின் மொழி கொஞ்சமும் புரியாது. ஆனால் அதற்கு, தானே ஒரு கதையை கற்பித்து, தானே ஒரு வசனத்தை பேசி, மகிழ்ச்சியோடு அந்த படத்தோடு ஒன்றி ரசித்தார்கள்.

அவர்களின் அன்பின் மிகுதியால் ‘அகில உலக ஜேம்ஸ் பாண்ட் ரசிகர்கள் மன்றம்’ என ஒரு அமைப்பை ஏற்படுத்தினார்கள்.

ஜேம்ஸ் பாண்ட் சீன் கானரியின் ஆறடி உயர புகைப்படத்தை அழகாக பிரேம் செய்து, பரமேஸ்வரி திரையரங்கில் வராண்டாவில் வைத்திருந்தார்கள். ஒவ்வொரு ரசிகனும் ஜேம்ஸ் பாண்ட்டை அன்னாந்து பார்க்கச் செய்தார்கள்.

நான் எனது 12 வயதில் ஜேம்ஸ் பாண்ட் நடித்த கோல்ட் ஃபிங்கர் திரைப்படத்தை முதல் முறையாக பரமேஸ்வரி திரையரங்கில் எனது ரயில்வே காலனி நண்பர்களுடன் பார்த்தேன். மொழி புரியாமல் பார்த்தேன். அதிர்ச்சியோடு பார்த்தேன்.

ஆனால் அக்கம் பக்கத்திலுள்ள ரசிகர்களின் டயலாக்கைக் கேட்டுக் கொண்டே புரிந்து கொண்டேன். அன்றிலிருந்து சீன் கானரியின் ரசிகனானேன். அந்த நினைவில் தோன்றியதே இந்தப் பதிவு.

ஆங்கில கதாபாத்திரமாக இருந்தாலும், கதை புரியாமல் போனாலும், கதைக் களமே அந்நியமாக இருந்தாலும், திரை மொழி ஒருவருக்கு புரிந்து விட்டால் எந்த மொழித் திரைப்படமும் வெற்றி பெறும் என்பது ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வெற்றியின் ரகசியம் !

ஜேம்ஸ் பாண்ட் – மதுரை ரசிகர்களை இணைத்து வைத்த ஃபெவிகோல் பாண்ட்!

– பொ. நாகராஜன்

James BondJames Bond 007ஜேம்ஸ் பாண்ட்ஜேம்ஸ் பாண்ட் 007
Comments (0)
Add Comment