நடன்ன சம்பவம் – சிறிய முடிச்சை மையப்படுத்திய கதை!

ஒரு சின்ன முடிச்சைக் கதையில் வைத்துக்கொண்டு, அதனைச் சுற்றிச் சுற்றி சம்பவங்கள் கோர்த்து ஒரு திரைக்கதையாக ஆக்குவது ரொம்பவே சவாலானது.

அப்படியொரு படத்தில் ரொமான்ஸ், காமெடி, த்ரில், செண்டிமெண்ட் என்று பலவித அம்சங்களைச் சரியான அளவில் கலந்து தருவது அதைவிடச் சிரமம் நிறைந்தது.

அப்படியொரு அனுபவமாக அமையுமா என்ற கேள்வியை எழுப்பியது, ராஜேஷ் கோபிநாதன் கைவண்ணத்தில், விஷ்ணு நாராயண் இயக்கிய ‘நடன்ன சம்பவம்’ படத்தின் ட்ரெய்லர். பிஜு மேனன், ஸ்ருதி ராமச்சந்திரன், சூரஜ் வெஞ்சாரமூடு, லிஜிமோள் ஜோஸ், லாலு அலெக்ஸ் உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர்.

‘நடன்ன சம்பவம்’ என்றால் ‘நடந்த சம்பவம்’ என்று அர்த்தம். அப்படியென்ன சம்பவத்தைக் குறிப்பிடுகிறது இப்படம், அது எந்தளவுக்கு ரசிகர்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்டதாகவும் இருக்கிறது என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இதன் திரைக்கதை.

சமத்துவம் அவசியம்!

ஸ்ரீகுமரன் உன்னி (பிஜு மேனன்) ஒரு மரைன் என்ஜினியர். கடல் பயணத்தில் ஆறு மாதம், வீட்டில் மனைவி, மகளோடு ஆறு மாதம் என்றிருக்கிறது அவரது வாழ்க்கை.

உயர் மத்திய வர்க்கக் குடும்பத்தினர் வாழும் ‘வில்லா’ ஒன்றில் அவர்கள் வாடகைக்குப் புதிதாகக் குடி வருகின்றனர். தனித்தனியாக வீடுகள் அமைந்தபோதும், அங்கிருக்கும் சிலர் தீவுகளாகவும், சிலர் ஒன்றாகச் சேர்ந்து உறவு பாராட்டியும் இருந்து வருகின்றனர்.

உன்னியின் பக்கத்து வீட்டில் வசிப்பவர் அஜித் நீலகண்டன் (சூரஜ் வெஞ்சாரமூடு). ஆண்கள் விஷயத்தில் வீட்டில் இருக்கும் பெண்கள் தலையிடக் கூடாது என்ற எண்ணம் உள்ளவர்.

நாற்காலியில் அஜித் அமர்ந்திருக்க, மனைவி தான்யாவும் (லிஜிமோள் ஜோஸ்) மகளும் நிற்பதாக அமைந்துள்ள புகைப்படம் சுவரில் பெரிதாகத் தொங்குவதே, அவரது எண்ணவோட்டத்தைச் சொல்லிவிடும்.

சக குடியிருப்புவாசிகளோடு மது அருந்துவது அஜித்தின் பொழுதுபோக்கு. அப்போது, அக்கம்பக்கத்தினர் குறித்து கிசுகிசுப்பதும் அவர்களது சுபாவம்.

அந்த வகையில், குடியிருப்பில் உள்ள பெண்களோடு உன்னி நெருங்கிப் பழகுவதைச் சொல்லிப் பொருமுகிறார் லிங்கன் (சுதி கோப்பா).

‘நம்மைச் சார்ந்த பெண்களிடம் அந்த உன்னி வாலாட்டினால் இருக்கு’ எனும் தொனியில், அப்போது அதற்குப் பதிலளிக்கிறார் அஜித்.

தெனாவெட்டாகச் சகாக்களிடம் சொன்னாலும், மனைவி தான்யா அந்த உன்னியோடு ரகசியமாகப் பேசி வருகிறாரோ என்ற சந்தேகம் அவருக்குள் எழுகிறது.

இந்த நிலையில், ஒருநாள் அந்த உன்னி தனது வீட்டுக்குள் ஒரு சேல்ஸ்கேர்ளை அழைத்துச் சென்றதைக் கண்டதாகச் சொல்கிறார் லிங்கன். அதனைக் கேட்டதும், கையில் ஒரு கம்பை எடுத்துக்கொண்டு அவரது வீட்டுக்குள் இருவரும் நுழைகின்றனர்.

‘என்ன’ என்று கேட்கும் உன்னியிடம் எதுவும் சொல்லாமல், அவரது படுக்கையறை வரை செல்கின்றனர். அங்கு, அந்த இளம்பெண் கொண்டுவந்த பை இருக்கிறது. அதனைக் கண்டதுமே, உன்னியைக் கண்மூடித்தனமாகத் தாக்கத் தொடங்குகிறார் அஜித்.

அதனை லிங்கன் மொபைலில் படம் பிடிக்கிறார். அந்த நேரத்தில் கழிப்பறையை விட்டு வெளியே வரும் அந்தப் பெண், அதனைக் கண்டு அலறுகிறார்.

அடுத்த சில நிமிடங்களில், அந்த குடியிருப்புவாசிகளின் வாட்ஸ்அப் குழுவில் அந்த வீடியோ இடப்படுகிறது. அதனைக் கண்டதும், உடனடியாக வீட்டைக் காலி செய்ய வேண்டும் என்று உன்னியிடம் சொல்கிறார் வீட்டின் உரிமையாளர்.

நடந்தது என்னவென்று தெரியாமல், வீடியோ பார்த்த பதைபதைப்பில் தனது அலுவலகத்தில் இருந்து அவசரமாக ‘கால்’ செய்கிறார் உன்னியின் மனைவி ரோஷி. அதற்கு, ‘தான் அந்த விஷயத்தை சமாளித்துக்கொள்வதாக’ப் பதிலளிக்கிறார் உன்னி.

நேராக காவல் நிலையம் சென்று, அஜித் தன்னைத் தாக்கியதாகப் புகார் அளிக்கிறார் உன்னி. பதிலுக்கு, அஜித் வீட்டுக்குச் சென்று போலீசார் விசாரிக்கின்றனர்.

காவல் கண்காணிப்பாளருக்கு அஜித் தெரிந்தவர் என்பதால், அந்த விஷயத்தைப் பேசித் தீர்க்குமாறு இன்ஸ்பெக்டர் பிரதிப்புக்கு (லாலு அலெக்ஸ்) உத்தரவிடப்படுகிறது.

தன்னுடன் பணியாற்றிய நண்பர்களுடன் ‘பார்டி’ கொண்டாடும் முனைப்பில் இருக்கும் பிரதீப், சப் இன்ஸ்பெக்டர் சிபியிடம் (ஜானி ஆண்டனி) அதனைச் செய்யுமாறு கூறுவிட்டுச் செல்கிறார்.
அஜித், அவரது மனைவி தான்யா, லிங்கன், சேல்ஸ்கேர்ள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்கிறார் சிபி. அதன் முடிவில் தான்யா, அவரது தோழி இடையிலான உரையாடலின் ‘ஆடியோ’ பதிவே அதற்குக் காரணம் என்பது தெரிய வருகிறது.

அதில் அவர்கள் இருவரும் என்ன பேசிக் கொண்டார்கள்? அதற்காக அஜித் ஏன் உன்னி மீது கோபம் கொண்டார் என்பதை விலாவாரியாகச் சொல்கிறது இப்படம்.

என்னதான் ‘சஸ்பென்ஸ்’ கூட்டுவதாகத் திரைக்கதை அமைந்தாலும், ‘ஆண், பெண் சமத்துவம் அவசியம்’ என்பதே அதன் அடிநாதமாக இருக்கிறது.

‘இந்தக் காலத்துல யாருங்க பொண்ணுங்களை தரக்குறைவா நடத்துறா’ என்ற சொற்களை உதிர்ப்பவர்களால், ‘நடன்ன சம்பவம்’ படத்தை ஏற்றுக்கொள்ளவே முடியாது. மாறாக, அதனை ஒப்புக்கொள்பவர்கள் இப்படத்தைப் பார்க்கலாம்!

ரசனைமிகு காட்சியமைப்பு!

பிஜு மேனன் இப்படத்தின் நாயகன். தனது இமேஜ் குறித்து பெரிதாகக் கவலைப்படமால், ஒரு படத்திற்கும் அடுத்த படத்திற்கும் சம்பந்தம் இல்லாமல், விதவிதமான பாத்திரங்கள் மற்றும் வகைமையில் அமைந்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பவர்; அதனாலேயே ரசிகர்களால் கொண்டாடப்படுபவர்.

இதிலும் அப்படியொரு கொண்டாட்டத்தை நமக்குத் தருகிறது அவரது இருப்பு.

சூரஜ் வெஞ்சாரமூடு நாயகனாகி, நட்சத்திர அந்தஸ்தை அடைந்து வெகு நாட்களாகிவிட்டது. அவரும், இப்படத்தில் தன்னை ஒரு பாத்திரமாக மட்டுமே வெளிப்படுத்தியிருக்கிறார்.

கொஞ்சம் வசதியான, தன்னைத்தானே உயர்வாகக் கருதிக்கொள்கிற ஒரு நபர், மது போதையில் எப்படி நடந்து கொள்வார், அவரது நடை எப்படியிருக்கும் என்பதை ஒரு ‘பாடம்’ போலச் செய்து காட்டியிருக்கிறார்.

லிஜிமோள் ஜோஸுக்கு இதில் அழுத்தமான பாத்திரம். மன அழுத்தத்தில் உழலும் ஒரு பெண் இயல்பு வாழ்வில் எப்படித் தோற்றமளிப்பார் என்பதை நன்குணர்த்துகிறது அவரது இருப்பு.

ஸ்ருதி ராமச்சந்திரன், இதில் பிஜுவின் மனைவியாக நடித்துள்ளார். அவர் வரும் காட்சிகள் குறைவு. அவரது கண்களே பாதி நடித்துவிடுகிறது என்பதால், அவரது தோற்றத்தின் முழுப் பரிமாணத்தையும் ரசிக்கப் படத்தை இன்னொரு முறை காண வேண்டியதாகிறது.

இவர்கள் தவிர்த்து லாலு அலெக்ஸ், ஜானி ஆண்டனி, சுதி கோப்பா, நௌஷத் அலி, மதுசூதனன், ஆதிரா ஹரிகுமார், அனகா அசோக், அஞ்சு தாமஸ், சனுஜா சோம்நாத், மஞ்சுளா மோகன் தாஸ் என்று பெரும்பட்டாளமே இதில் தலைகாட்டியிருக்கிறது.

ஒளிப்பதிவாளர் மனீஷ் மாதவன் மிக அழகாக ஒவ்வொரு ஷாட்டையும் அமைத்திருக்கிறார். காட்சிகளில், கதைக்கருவில் இருண்மை இருந்தபோதும், பிரேம்களில் அதனைப் பிரதிபலிக்காமல், கேமிரா நகர்வுகளின் வழியே பரபரப்பையும் பதற்றத்தையும் ஊட்டியிருக்கிறார்.

இந்துலால் கவீத்தின் கலை இயக்கத்தில், படத்தின் வரும் அனைத்து பிரேம்களிலும் அழகு மிளிர்கிறது.
படத்தொகுப்பாளர்கள் சைஜு ஸ்ரீதரன் – டோபி ஜான் இருவரும், திரையில் குழப்பமின்றிக் கதையைத் தெரிந்துகொள்வதில் உதவியிருக்கின்றனர்.

அங்கீத் மேனன் அமைத்துள்ள பின்னணி இசை, காட்சிகளில் தன்மையோடு நம்மைக் கலந்தோடச் செய்கிறது. பாடல்கள் ஓகே ரகம்.

‘களி’, ‘ஜின்’ படங்களுக்கு ‘ஸ்கிரிப்ட்’ அமைத்த ராஜேஷ் கோபிநாதன், இதன் எழுத்தாக்கத்தைக் கையாண்டிருக்கிறார்.

ஆண் பெண் நட்பு சார்ந்த உரையாடலில் ஏதேனும் எல்லை இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது இப்படம். அதற்குப் பதில் சொல்லாமல் வேறொரு திசை நோக்கிக் கதை நகர்ந்தாலும், மன அழுத்தங்களில் சிக்குண்ட பெண்களை ஆசுவாசப்படுத்துகிறது அவரது கதை சொல்லல்.

இயக்குனர் விஷ்ணு நாராயண், ஒவ்வொரு காட்சியையும் ‘ப்ரெஷ்’ஷாக தருவது எப்படி என்று யோசித்துச் செயலாற்றியிருக்கிறார். அதனாலேயே, கிளைமேக்ஸ் சண்டைக்காட்சியில் பிஜுவை சூரஜ் துரத்துவது நமக்கு ‘க்ளிஷே’வாக தெரிவதில்லை.

இந்தப் படத்தில் புதிதென்று எதுவுமில்லை. ஆனால், இரண்டு மணி நேரம் நாம் எந்தவிதச் சங்கடங்களும் இன்றி தியேட்டரில் அமர்ந்திருக்கிறோம் என்பதே இதன் சிறப்பினைச் சொல்லிவிடும்.

செறிவான உள்ளடக்கம்!

‘நடன்ன சம்பவம்’ படத்தின் மைய முடிச்சு சிலருக்கு ‘அபத்தமாக’ தெரியலாம். சிலருக்கு ‘அது திருப்பம் தருகிற ஒன்றா’ என்ற கேள்வியை எழுப்பலாம்.

‘இது ஹைதர் காலப் பழசு’ என்று சிலர் சொல்லலாம். ‘இந்தக் காலத்துல ஒரு ஆணும் பெண்ணும் நட்போட பழகுறது எல்லாம் சாத்தியமே இல்லைங்க’ என்று சிலர் கூறலாம்.

அத்தனை சாத்தியக்கூறுகளையும் உள்ளடக்கியவாறு இருப்பதே ‘நடன்ன சம்பவம்’ படத்தின் சிறப்பு.

அதுவே, இதனைச் செறிவான உள்ளடக்கம் கொண்டதாக மாற்றுகிறது.

‘ஒரு மனிதன் நல்லவனாகவோ அல்லது தீயவனாகவோ மட்டுமே இருப்பதில்லை; இரண்டும் கலந்த குணமே அவனிடத்தில் இருக்கும்’ என்ற எண்ணம் கொண்டவர்களுக்கு இப்படத்தில் பிஜு, சூரஜ்ஜின் பாத்திர வார்ப்பு திருப்தி அளிக்காது.

அதேநேரத்தில் லிஜிமோள் ஏற்ற தான்யா மற்றும் இதர பெண் பாத்திரங்களின் பார்வையில் நோக்கினால், இக்கதை ஏற்றுக்கொள்ளத்தக்கதாக தெரியும்.

‘நடன்ன சம்பவம்’ படத்தில் பலமும் பலவீனமும் குறிப்பிட்ட விகிதத்தில் பொதிந்திருக்கின்றன. எதற்கு நீங்கள் முக்கியத்துவம் தருகிறீர்கள் என்பதைப் பொறுத்து, ‘நடன்ன சம்பவம்’ உங்களுக்குப் பிடித்துப் போகலாம் அல்லது பிடிக்காமலும் போகலாம்!

-உதயசங்கரன் பாடகலிங்கம்

Nadanna Sambhavam Reviewvishnu narayanநடன்ன சம்பவம் விமர்சனம்பிஜு மேனன்விஷ்ணு நாராயண்
Comments (0)
Add Comment