பரங்கிமலையில் எம்.ஜி.ஆரின் வெற்றி: ஒரு ரீ வைண்ட்!

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் திமுகவுக்காக இடைத்தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் பிரச்சாரம் செய்திருந்தாலும், அவர் தேர்தலில் முதன் முறையாக போட்டியிட்டது, 1967-ம் ஆண்டுதான்.

அந்தத் தேர்தலில் பரங்கிமலைத் தொகுதியில் நின்ற எம்ஜிஆர், பிரமாண்ட வெற்றி பெற்றார். இது அனைவரும் அறிந்த செய்திதான். இது குறித்த மேலும் சில தகவல்களை, அரசியல் ஆவணங்களில் இருந்து புரட்டிப் பார்க்கலாம்.

திமுக வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது, சென்னை விருகம்பாக்கத்தில் 1967-ம் ஆண்டு நடந்த கட்சியின் சிறப்பு மாநாடு. ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற்ற அந்த மாநாட்டில், தமிழகத்தின் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.

மூதறிஞர் ராஜாஜி, கண்ணியமிக்க காயிதே மில்லத், சிலம்புச் செல்வர் மபொசி மற்றும் கம்யூனிஸ்ட், பார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் அண்ணாவோடு, அந்த மேடையைப் பகிர்ந்து கொண்டனர்.

எம்ஜிஆரை வேட்பாளராக அறிவித்த அண்ணா

மாநாட்டில் உரையாற்றிய எம்ஜிஆர், அண்ணாவிடம் ஒரு லட்சம் ரூபாய் தேர்தல் நிதி வழங்கினார்.

அதனை பெற்றுக்கொண்ட அண்ணா, ’’எம்ஜிஆரிடம் உள்ள பணம் எனது பணம் போன்றது – வேண்டும்போது, அதனை வாங்கிக் கொள்ளலாம் – நான் எம்ஜிஆரிடம் கேட்க விரும்புவது என்ன வென்றால், அவர் ஒரு மாதம் திமுகவுக்கு ’கால்ஷீட்‘ அளிக்க வேண்டும் – 30 நாட்கள் அவர் தமிழகம் எங்கும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும் – அவர் முகம் காட்டினால், 30 ஆயிரம் ஓட்டுகள் அவர் மூலமாக திமுகவுக்கு கிடைக்கும்‘’ என்றார்.

அப்போது மாநாட்டில் எழுந்த கரவொலி விண்ணைப் பிளந்தது. விருகம்பாக்கம் மாநாட்டில்தான் எம்ஜிஆரை பரங்கிமலைத் தொகுதி திமுக வேட்பாளராக அண்ணா அறிவித்தார்.

அப்போதே தேர்தல் வேலைகள் வேகமெடுத்தன. எம்ஜிஆரின் ராமாவரம் தோட்டத்தில் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. எம்ஜிஆர் கலந்து கொண்டு பேசினார்.

அந்த நேரத்தில் தான், ஜனவரி 12-ம் தேதி எம்.ஆர்.ராதாவால், எம்ஜிஆர் சுடப்பட்ட, கோரச்சம்பவம் நிகழ்ந்தது. புரட்சித் தலைவர் உயிர் பிழைத்துக் கொண்ட போதிலும், அவர் தொடர்ச்சியாக சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற வேண்டி இருந்தது. பரங்கிமலையில் எம்ஜிஆரால் பிரச்சாரம் செய்யமுடியாது.

அப்போது பரங்கிமலை சட்டசபைத் தொகுதி, தமிழகத்திலேயே மிகப்பெரிய தொகுதியாக இருந்தது.

திருவான்மியூர் மற்றும் அதையொட்டி உள்ள கிராமங்கள், ஆலந்துர் நகரசபை மற்றும் சுற்றுவட்டார ஊர்கள், பல்லாவரம் மற்றும் தாம்பரத்தின் சில பகுதிகள் என ஒரு மக்களவைத் தொகுதியின் பரப்புக்கு கொஞ்சமும் குறையாமல் பரந்து விரிந்திருந்தது, பரங்கிமலை.

அந்த தொகுதி காங்கிரஸ் கட்சியின் கோட்டை. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக, ஊராட்சி ஒன்றியத் தலைவர் ரகுபதி நிறுத்தப்பட்டிருந்தார். எம்.ஜி.ஆருக்காக அந்த தொகுதியிலேயே இரண்டு மாதங்கள் தங்கி இருந்து பணியாற்றினார் ஆர்.எம்.வீரப்பன்.

அவருக்கு உறுதுணையாக பல்லாவரம் ஊராட்சித் தலைவர் ரசாக், ஆலந்தூர் மோகனரங்கம், பம்மல் நல்லதம்பி போன்றோர் இருந்தனர்.

எம்.ஜி.ஆர் கழுத்தில் கட்டுடன், மருத்துவமனையில் இருப்பது போன்ற சுவரொட்டி தொகுதி முழுக்க ஒட்டப்பட்டது. எம்.ஜி.ஆர். நேரில் பிரச்சாரம் செய்த விளைவுகளை, அந்த சுவரொட்டி ஏற்படுத்தியது.

பரங்கிமலையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமே அந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு, திமுக முதன்முறையாக வெற்றி பெற்று, அண்ணா முதலமைச்சர் ஆவதற்கு, ஒரு கருவியாக அமைந்தது.

வாக்குப்பதிவு நாளில், பரங்கிமலையில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. திமுக ‘பூத்’ ஏஜெண்டுகள் மிரட்டப்பட்டனர்.

எனினும் புரட்சித்தலைவர் சுமார் 27 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். அவருக்கு, அமைச்சர் அந்தஸ்தில் உள்ள சிறுசேமிப்பு துணைத்தலைவர் பதவியை அளித்து, அண்ணா கவுரவம் செய்தார்.

– மு.மாடக்கண்ணு

annacongressdmkmaposiMGRparangimalaiஅண்ணாஎம்ஜிஆர்திமுகபரங்கிமலை தொகுதிமபொசி
Comments (0)
Add Comment