சக்சஸ் ஸ்டோரி:
தமிழ்நாட்டில் விவசாயிகளுக்குத் தரமான விதை, உரங்கள் சரியான விலையில் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்துவருகிறது. மேலும், அவற்றைக் கிராமங்களுக்குக் கொண்டுவந்து சேர்ப்பதும் பெரிய சவாலாக இருந்துவருகிறது.
விவசாயிகளின் கவலைகளைத் தீர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் உழவர் உதவி மையம் விதைகளை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் அணுகுமுறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.
தூர்வாரப்பட்ட கண்மாய்கள்
‘தாய்’ இணையதளத்திடம் பேசிய உழவர் உதவி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் திருச்செல்வம், “வேப்பங்குளத்தில் நான்கு ஆண்டுகளாக விவசாயத்தை மீட்டெடுக்கும் முயற்சிகளைச் செய்துவருகிறோம்.
கிராம மக்கள் ஒத்துழைப்புடன் கண்மாய்களை ஆழப்படுத்தினோம். பிறகு அரசு அதிகாரிகள், வேளாண் நிபுணர்களின் ஆலோசனையில் விளைச்சலை அதிகரிக்க முயற்சிகள் செய்தோம்.
சந்தைப்படுத்தலில் விவசாயிகளுக்கு உதவினோம். நல்ல விலைக்கு விற்கமுடியாத நிலையில், நெல்லை அரிசியாக்கி விற்றோம். இந்த நற்பணிகளைக் கவனித்த தமிழக வேளாண் துறை, வேப்பங்குளத்தில் உழவர் உதவி மையத்தைத் தொடங்கியது.
விவசாயிகளின் இணைப்புப் பாலம்
விவசாயிகள் – அரசு – விளைபொருட்களை வாங்குபவர்களுக்குமான இணைப்புப் பாலமாக உதவி மையம் செயல்படுகிறது. இந்த மையம் விற்பதும் இல்லை. வாங்குவதும் இல்லை. விவசாயிகள் தேவைகளை அறிந்து, தகவல்களைத் திரட்டி உதவி செய்யும் பணிகளைச் செய்துவருகிறது.
வேப்பங்குளம் உழவர் உதவி மையத்தில் விவசாயிகளுக்குத் தேவையான விதைகளையும் வாங்கிக் கொடுக்கிறோம். அதுவும் போக்குவரத்து வசதியும் செய்து தருகிறோம். அலைச்சல் குறைகிறது. அவர்கள் விரும்பும் தரமான பிராண்ட் விதையே கிடைக்கிறது.
தற்போது 100 மூட்டை ஐஆர் 20 நெல் ரகத்தின் விதை வைத்திருக்கிறோம். வேறு நெல் ரகங்களைப் பயிரிட்ட விவசாயிகள், அந்தப் பயிர்கள் மழையில் சாய்ந்து நஷ்டத்தை ஏற்படுத்தின. ஆனால், ஐஆர் 20 நெற்பயிர்கள் சாயவில்லை. இதனால் பல விவசாயிகள், வரும் பருவத்தில் அந்த நெல் ரகத்திற்கு மாறுகிறார்கள்.
ஐஆர் 20 நெல் விதைகள்
தகவல் சேகரிப்பு பணியை மேற்கொண்ட உழவர் உதவி மையம் விவசாயிகள் விருப்பம் தெரிவித்த பயிர் ரகங்கள், உரங்கள் வேப்பங்குளத்திலேயே பெற்றுக்கொள்வதற்கு ஏற்பாடு செய்தோம். முதற்கட்டமாக நூறு மூட்டை விதை நெல்லை சுமார் 40 விவசாயிகளுக்கு வழங்கினோம்.
ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் அனந்தராமன், முதல் விதை நெல் மூட்டையை வழங்கி விற்பனையைத் தொடங்கிவைத்தார். வாகன வசதியில்லாத விவசாயிகளுக்குக் குறைந்த கட்டணத்தில் விதை மூட்டைகள் அவர்களது வீடுகளுக்குச் சென்று வழங்கப்பட்டது.
லாபரமாக மாறும் விவசாயம்
இந்த சேவையின் மூலம் விவசாயிகள் அருகில் உள்ள நகரங்களுக்குச் சென்று விதைகள், உரங்களைக் கொண்டுவந்து சேர்ப்பதில் உள்ள போக்குவரத்து செலவு, பயணக்களைப்பு, நேர விரயம் தவிர்க்கப்படுகின்றன. மேலும், தரமான விதைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன.
பயிர் மேலாண்மை எளிமைப்படுத்தப்படுகிறது. விதையில் ஏதேனும் குறைபாடுகள் இருக்குமானால், அதை உடனே விதை நிறுவனத்திற்குத் தெரிவிக்கும் வாய்ப்புள்ளது.
இப்படி பல வழிகளில், வேப்பங்குளம் உழவர் உதவி மையம் விவசாயத்தை எளிமையாக்கி லாபகரமாக மாற்றுவதற்கான முயற்சிகளைச் செய்துவருகிறது” என்று விளக்கமாகப் பேசினார்.
– எஸ். சாந்தி