சமகாலச் சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை, அதன் பின்னிருக்கும் காரணங்களை, அது ஏற்படுத்தும் விளைவுகளை, அதற்கான தீர்வுகளைத் திரைப்படங்களில் காண்பது மிக அரிது.
அவ்வாறு அமைந்த படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து, தியேட்டரில் நல்லதொரு காட்சியனுபவத்தைத் தருவதென்பது அதைவிட அரிதானது.
வட மாநிலங்களில் இருந்து தென்னகம் நோக்கி பிழைப்பு தேடி வரும் மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில், எழுத்தாளர் மற்றும் வசனகர்த்தாவான பாஸ்கர் சக்தி முதன்முறையாக இயக்கும் ‘வடக்கன்’ படம் அமைந்திருப்பதாக ஊடகங்களில் தகவல் வெளியானது. அதுவே, அப்படம் குறித்த கேள்விகளையும் எதிர்பார்ப்புகளையும் அதிகமாக்கியது.
ஆனால், மத்திய தணிக்கைத் துறையின் கெடுபிடிகளால் அப்படத்தின் பெயர் ‘ரயில்’ என மாற்றப்பட்டது.
முழுக்கப் புதுமுகங்கள் இடம்பெற்ற இத்திரைப்படமானது தற்போது தியேட்டர்களில் வெளியாகியுள்ளது.
இந்தப் படம் பார்வையாளர்களுக்குச் சுவாரஸ்யமான காட்சியனுபவத்துடன் நல்லதொரு சேதியையும் தருகிறதா?
பஞ்சம் பிழைக்க..!
மதுரை வட்டாரத்திலுள்ள கிராமமொன்றைச் சேர்ந்தவர் முத்தையா (குங்குமராஜ்). அவரது மனைவி செல்லம்மா (வைரமாலா). இவர்களுக்குத் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகின்றன. இத்தம்பதிக்குக் குழந்தை இல்லை. அதற்குக் காரணம், முத்தையாவின் குடிப்பழக்கம்.
மதுவுக்கு அடிமையான முத்தையா, குடும்பச் செலவுகளுக்குக் காசு கொடுக்க முடியாத நிலையில் இருக்கிறார். அதனால், ‘இப்போது நமக்கு குழந்தை வேண்டாம்’ என்கிறார் செல்லம்மா.
குழந்தைகள் மீது பிரியம் கொண்ட முத்தையாவை அது இன்னும் காயப்படுத்துகிறது.
ஒருகட்டத்தில் ‘குடியே கதி’ என்றாகிறார் முத்தையா. அதனால் மனைவியிடமும் மாமனாரிடமும் ‘வசவு’ வாங்குகிறார். ஊரில் அக்கம்பக்கத்தினர் எவரும் மரியாதை தருவதில்லை.
அந்த நேரத்தில் நண்பன் வரதன் (ரமேஷ் வைத்யா) மட்டுமே அவருக்கு ஆறுதலாக இருக்கிறார். நாள் முழுவதும் மதுவைக் குடிப்பதற்காக ஒன்று சேர்வதாக, அவர்களது நட்பு இருக்கிறது.
முத்தையா வாடகைக்கு இருந்து வரும் வீட்டின் எதிரே சுனில் (பர்வைஸ் மஹ்ரூ) என்பவர் வசிக்கிறார். மும்பையில் பெற்றோர், மனைவி, மகள் இருக்க, இங்குள்ள ஆலையொன்றில் அவர் வேலை பார்த்து வருகிறார்.
சுனில் உடன் செல்லம்மா பழகுவதும், தன் வீட்டில் சமைத்த உணவை அவருக்குத் தருவதும் முத்தையாவை எரிச்சலூட்டுகிறது.
ஒருநாள் மது போதையில் தள்ளாடும் முத்தையாவிடம், ‘புல்லுக்கட்டை தலையில ஏத்தி விடு’ என்று சொல்கிறார் ஒரு பெண்மணி. அதனைத் தூக்கி வைக்க முடியாமல் திணறுகிறார் முத்தையா.
அங்கு வரும் சுனில் அப்பெண்ணின் தலையில் புல்லுக்கட்டை ஏற்றி விடுகிறார். அது, முத்தையாவை இன்னும் காயப்படுத்துகிறது.
ஏற்கனவே தனக்கு வர வேண்டிய பணிகள் வடநாட்டவர்களிடம் தரப்பட்டதாகப் பொருமுபவர், தன் மனதில் இருக்கும் வலியை வரதனிடம் வெளிப்படுத்துகிறார் முத்தையா.
அதற்கு, சுனிலைக் கொன்றுவிடலாம் என்கிறார் வரதன். அவரது வாய்ச்சவடாலை முத்தையா நம்பிவிடுகிறார்.
அன்றிரவு வீடு திரும்பும் முத்தையா, மனைவி செல்லம்மாவிடம் சண்டையிடுகிறார். அவரைத் தாக்குகிறார். அப்போது அங்கு வரும் சுனில் அவரைத் தடுக்கிறார்; ஒருகட்டத்தில் அவரைத் தள்ளிவிடுகிறார். சுனிலைத் தடுத்து, அங்கிருந்து அனுப்பி வைக்கிறார் செல்லம்மா.
அதன்பிறகு, கோபத்தில் ‘இனிமேல் உன்னோடு வாழ மாட்டேன்’ என்று சொல்லிவிட்டு செல்லம்மா தன் தந்தை வீட்டுக்குச் செல்கிறார்.
அடுத்த நாள் காலையில் முத்தையா வீட்டுக்கு போலீசார் வருகின்றனர். சாலை விபத்தில் சுனில் இறந்துவிட்டதாகவும், அவரது சடலம் மருத்துவமனையில் இருந்து அவ்வீட்டுக்குக் கொண்டுவரப்படுவதாகவும் சொல்கின்றனர். அதனைக் கேட்டதும் பதறுகிறார் முத்தையா.
இந்த நிலையில், சுனிலின் குடும்பத்தினர் அக்கிராமத்தினருக்கு வருகின்றனர். ஈமச்சடங்குகளை முடித்தபிறகும் பதினாறாம் நாள் சடங்கை நிறைவு செய்ய அந்த கிராமத்தில் தங்குகின்றனர்.
இறப்பதற்கு முந்தைய நாள், வங்கியில் தான் சேமித்துவைத்த பணத்தை வீட்டுக்கு சுனில் எடுத்து வந்த தகவல் அவரது குடும்பத்தினருக்குத் தெரிகிறது.
அந்த பேக்கை வாங்கி தனது வீட்டினுள் வைத்தவர் செல்லம்மா. ஆனால், இப்போது அந்த பேக் அங்கு இல்லை.
வீட்டுக்கு மின் இணைப்பு தரும் பணிகளைச் செய்துவரும் எலக்ட்ரீசியனாக, இதில் முத்தையா பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
குடிப்பழக்கத்தால் தனக்குக் கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்புகளை இழக்கும் அவர் மனதுக்குள் பொருமுகிறார்; அந்த வேலையில் வடநாட்டவர்கள் ஈடுபடுவது அவரைக் காயப்படுத்துகிறது. சுனிலின் முன்னேற்றத்தைக் காணும்போது அது அதிகமாவதாகச் சொல்கிறது ‘ரயில்’.
வடநாட்டுத் தொழிலாளிகள் இங்கு பல வேலைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அதையே ஒரு பிரச்சனையாக இப்படம் முன்வைக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. தேவையான அளவுக்குத் திரையில் அதனைச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் பாஸ்கர் சக்தி.
ஆனால், தமிழ்நாட்டு குடிமகன்களில் பலர் குடி போதையில் மூழ்கிச் சீரழிவதையே இது அதிகமாகப் பேசுகிறது.
இரு வேறு திசைகளில் நகரும் திரைக்கதையானது நம்மை நடுவாந்தரமான ஒரு இடத்தில் நிற்க வைக்கிறது. ‘ரயில்’ படத்தின் பெரிய பலவீனம் அதுவே.
அதையும் மீறி, ‘பொழைக்க வந்தவன் பொழைக்க வந்தவன்னு இளக்காரமா பேசாதீங்கடா. நாம எல்லாருமே இந்த பூமிக்கு பொழைக்க வந்தவங்கதான்’ என்பது போன்ற வசனங்கள் நம்மை திரையுடன் பிணைக்கின்றன.
நல்ல முயற்சி!
குரு சோமசுந்தரத்தை நினைவூட்டும் வகையில் திரையில் தெரிகிறார் நாயகன் குங்குமராஜ். முத்தையாவாக மட்டுமே அவர் திரையில் தெரிகிறார். அதனால், இது அவரது முதல் படம் என்பதை நம்ப முடியவில்லை.
செல்லம்மாவாக வரும் வைரமாலா, சட்டென்று ஈர்க்கும் வகையில் இப்படத்தில் தோன்றியிருக்கிறார். அவரது நடிப்பும் வசனம் பேசும் பாங்கும் தொடர்ந்து அவர் பல படங்களில் இடம்பெறுவார் என்ற உத்தரவாதத்தைத் தருகிறது.
சுனில் ஆக வரும் பர்வைஸ் மஹ்ரூ, முதல் பார்வையில் ‘என்றென்றும் புன்னகை’யில் வந்த டி.எம்.கார்த்திக் சீனிவாசனை நினைவூட்டுகிறார். அவரது பாத்திரம் சட்டென்று முடிந்தது நம்மை ஏமாற்றத்திற்கு உள்ளாக்குகிறது.
பத்திரிகையாளர் ரமேஷ் வைத்யாவுக்கு இதில் நாயகனின் நண்பன். மீசையை முறுக்கிக்கொண்டு அவர் ‘லந்து’ கொடுக்குமிடங்கள் ரசிக்க வைக்கின்றன.
வைரம் பாட்டியின் பேச்சு சில இடங்களில் புரியாத வகையில் இருக்கிறது. அதையும் தாண்டி அவரது பாடும் திறனும் பாவனைகளும் ரசிக்க வைக்கின்றன.
இவர்கள் தவிர்த்து நாயகனின் மாமனாராக வருபவர், ஊர் பெரிய மனிதர்கள், இதர பாத்திரங்களில் நடித்தவர்கள் என்று புதுமுகங்களே படத்தில் நிறைய.
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு இந்த படத்தின் மிகப்பெரிய பலம். பல இடங்களில் கண்ணுக்கு குளுமையான வகையில் பல பிரேம்களை இதில் அமைந்திருக்கிறது அவரது கேமிரா பார்வை.
நாயகனின் வீட்டைக் காட்டிய விதமும், மரண வீட்டுக் காரியங்களும், கிராமத்தில் இருப்பது போன்ற பிரமையை நமக்கு ஊட்டுகின்றன.
அதற்கான உழைப்பைக் கொட்டியிருக்கிறது தயாரிப்பு வடிவமைப்பாளர் அமரனின் குழு.
படத்தொகுப்பாளர் நாகூரான் ராமச்சந்திரன், இயக்குனரின் பார்வையில் காட்சிகளை அடுக்கியிருக்கிறார். ஆனால், ஷாட்கள் வெகுநேரமாக ஓடுவது ‘அந்தக் காலத்து அவார்டு படம்’ பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது. அதனைக் கொஞ்சம் சரி செய்திருக்கலாம்.
எஸ்.ஜெ.ஜனனியின் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசை ஏனோ மனதோடு ஒட்டுவதாக இல்லை.
இன்னும் ஒலிக்கலவை, ஆடை வடிவமைப்பு என்று பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு இதில் இருக்கிறது.
ஒரு இயக்குனராக, சமகாலப் பிரச்சனையொன்றை இதில் பேச முனைந்திருக்கிறார் பாஸ்கர் சக்தி. அந்த வகையில், நல்லதொரு முயற்சியை இப்படத்தில் மேற்கொண்டிருக்கிறார்.
அதேநேரத்தில் ஒரு சுவாரஸ்யமிக்க கதை சொல்லலை இதில் அவர் வழங்கவில்லை.
‘நான் மகான் அல்ல’, ‘பாண்டிய நாடு’, ‘எம்டன் மகன்’ போன்ற படங்களில் அவரது பங்களிப்பைக் கண்டவர்களுக்கு ‘ரயில்’ ஏமாற்றத்தையே தருகிறது.
மிகச்சில பாத்திரங்கள் வந்து போவதும், பிரமாண்டமான பின்னணி திரையில் தெரியாததும், நாடக பாணியில் சில காட்சிகள் நகர்வதும், இப்படத்தின் பட்ஜெட் குறைவு என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. அதனை மறக்கடிக்கும் அளவுக்குக் காட்சிகள் அமையவில்லை.
ரசிக்கத்தக்க விஷயங்கள்!
நம்மூரில் கட்டடப் பணி, விற்பனையாளர் பணி என்று தொடங்கி டீக்கடைகள் வரை வடமாநிலங்களில் இருந்து வேலை செய்ய வந்தவர்கள் பணியாற்றுவதைக் காண முடிகிறது.
பெருநகரங்கள், சிறு நகரங்கள் மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் கடைக்கோடிக் கிராமங்களிலும் கூட இதே நிலைதான்.
அதேநேரத்தில், வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் விவசாயம் உட்படப் பல்வேறு தொழில்களில் முதலீடு செய்யும்விதமாக ஏக்கர் கணக்கில் நிலங்களை வாங்குவதும் இங்கு நிகழ்ந்து வருகிறது.
முதலாவதைக் கண்மூடித்தனமாக எதிர்க்கும் சிலர், இரண்டாவதைப் பற்றி எவர் பேசினாலும் காதில் ஏற்றிக்கொள்வதே இல்லை. அந்த முரணை இப்படம் பேசுகிறது.
மது போதைக்கு அடிமையாகி உடல் ஆரோக்கியத்தைப் பலர் இழந்து வருவதைச் சொல்கிறது. மனநலம் பாதிக்கப்பட்டு வாழ்வையே சிதைத்துக் கொள்வதைக் கோடிட்டுக் காட்டுகிறது.
ஒப்பீட்டு அளவில், வடநாட்டு தொழிலாளர்களிடம் மது போதைக்கு அடிமையாதலைக் காண முடிவதில்லை என்பதையும் மௌனமாக அடிக்கோடிடுகிறது.
‘இன்னன்ன வேலையைச் செய்வதற்காக மது அருந்துகிறேன்’ என்று சொன்ன காலம் போய், வேலைக்குச் செல்வதையே மறந்துவிட்டு மதுவில் இன்று பலர் உழல்வதைக் காண முடிகிறது. இந்த நிலையை நமக்கு எடுத்துரைக்கிறது ‘ரயில்’.
ஆனால், மெதுவாக நகரும் திரைக்கதையும், அதனை இன்னும் பலவீனப்படுத்தும் காட்சியாக்கமும், ‘அப்படிப்பட்ட காட்சிகளுக்காகக் காத்திருப்பதே வீண்’ என்று எண்ண வைக்கிறது.
தொடக்கத்திலேயே சொன்னது போல, இந்தப் படம் குறித்து நம் மனதில் முன்னரே எழுந்த எதிர்பார்ப்புகளை இயக்குனர் பூர்த்தி செய்யவில்லை.
அதேநேரத்தில், அந்தப் பிரச்சனைகளை வேறொரு கோணத்தில் இதில் அவர் அணுகியிருக்கிறார். அது எல்லோரையும் ஈர்க்குமா என்றால் தலையைச் சொறியத்தான் வேண்டியிருக்கிறது!
– உதயசங்கரன் பாடகலிங்கம்