மழையை ரசிக்கவா, வலியை நினைக்கவா?

மழையும் காற்றும் அழகு தான்‌. ஆனால்‌ ஜன்னல் வழியாக ரசிக்கும் வரை. இவ்வரிகள் ஆழமான வலிகளை நமக்கு உணர்த்துகிறது.

சூடான டீயுடன் பஜ்ஜியை சாப்பிட்டுக்கொண்டே மழையை ரசிக்கும் நம்மால் எந்த நேரத்தில் குடிசை விழுமோ என்ற அச்சத்தில் தூக்கமிழக்கும் பட்டியல் மற்றும் பழங்குடியினர் வலியை எப்படி உணரமுடியும். கிராமப்புற விளிம்புநிலை மக்களுக்கு உயிருடன் இருத்தல் என்பதே சவாலானதாக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் சோளிங்கர் என்னும் பகுதிக்கு அருகில் பைரா காலனி இருக்கிறது. அங்குள்ள மக்கள் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்தவர்கள்.

பைரா காலனியின் நிலங்கள் யாவும் ஒரே நபரின் பேரில் உள்ளது. மொத்த நிலத்திற்கும் உரிமையாளரும் ஊர் மக்களும் சொந்தக்காரர்கள் என்பதால் அவர்களுக்குள் இருக்கும் புரிதலின் அடிப்படையில் மக்கள் வீடு கட்டி வாழ்ந்து வருகின்றனர்.

சில வீடுகள் ஓலைகளால் ஆனது. சில வீடுகள் ஓட்டு வீடுகள். சில வீடுகள் மழையிலிருந்து தன்னை பாதுகாக்க தார்ப்பாய்களை போர்த்திக் கொண்டுள்ளன. சில வீடுகளை அரசாங்கம் கட்டி தந்துள்ளது.

பைரா காலனியில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொல்வதற்கு பல ஆயிரம் கதைகள் உள்ளன.

பெரும்பாலான ஆண்கள் வாழ்வாதாரத்துக்காக கட்டுமானத் தொழிலையே நம்பியிருக்கின்றனர்.

கட்டுமானத் தொழிலில் ஈடுபடும்போது ஏற்படும் விபத்துகளால் வேலைக்கு செல்ல முடியாமல் மருத்துவமனைக்கு அலையும் பல குடும்பங்களை பைரா காலனியில் பார்க்கலாம்.

இந்த நிலைக்குத் தள்ளப்பட்ட குடும்பங்களில் ஒன்று தான் பவித்ராவின் குடும்பம்.

பவித்ரா வீடு வீடாகச் சென்று சேலையை வாங்கி, துவைத்து கம்பெனியில் விற்றுப் பணம் பெறுகிறார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து குடும்பத்தை நிர்வகிக்கிறார்.

வீடு ஆள்மட்டச்சுவர் கட்டப்படும் கற்களால் கட்டப்பட்டுள்ளது. வீட்டின் மேல் தளம் சிமெண்ட் தளமாக இல்லாமல் தகர சீட்டுகள் மேற்கூரையாகியுள்ளன. ஆனாலும் மழை நீர் வீட்டுக்குள் ஒழுகுவதை தடுக்க முடியவில்லை.

பவித்ராவின் கணவர் கட்டுமான வேலையில் அடிபட்டதால் அந்த வேலைக்கு செல்லாமல் தற்போது ஜோதிடம் பார்த்து வருமானம் ஈட்டுகிறார். வருமானம் கிடைத்த கையோடு டாஸ்மாக்கில் செலவாகிவிடும். பவித்ராவின் உழைப்பில் தான் குழந்தைகள் பசியாறுகிறார்கள். 

“நான் மற்ற எல்லாரைவிடவும் வாய்விட்டு சிரிப்பேன். அதுக்காக நான் சந்தோசமா இருக்கேனு அர்த்தம் இல்ல. என் கஷ்டத்த நான் வெளிய காட்டிக்க விரும்பல. நான் ரொம்ப தைரியமான ஆளா தான் வெளி உலகத்துக்கு தெரியனும்.

பக்கத்துல ஒரு இடம் இருக்கு. அங்கு விதவப் பொன்னுங்க தாலி அறுக்கும் சடங்குக்கு வருவாங்க. சடங்கு முடிஞ்சதும் அங்கேயே புடவையெல்லாம் விட்டுருவாங்க. அத அங்கேயிருந்து எடுத்து வந்து துவைச்சு வியாபாரம் பண்ணுறேன்.

மாசத்துக்கு நாலாயிரம் கிடைக்கும். அத வச்சு என்ன பண்ணுறது. கடன வாங்கி கல்லும் சீட்டும் வாங்கி, பேருக்கு ஒரு வீடுனு கட்டி வச்சுருக்கேன்.

மழை வந்தால் ராவெல்லாம் ஒழுகுது. தொட்டில் கட்டி குழந்தைகள படுக்க வச்சுருவேன், என் வீட்டுக்காரு சேர்ல உக்காந்துப்பாரு, நான் ராவெல்லாம் தண்ணிய வெளியேத்திட்டே இருப்பேன். தூக்கமே இருக்காது.

எங்களுக்குனு தண்ணீ வராத வீடு இருந்தால் நல்லா இருக்கும். என் வீட்டுக்காரு குடிச்சுட்டு வந்து என்ன அடிப்பாரு. வேலைக்குப் போனாலும் காசு கொடுக்க மாட்டாரு.

எல்லா கஷ்டத்தையும் எனக்குள்ளயே பொதைச்சுட்டு தான் சத்தமா சிரிக்குறேன். வலிய மறக்க அல்ல, மத்தவங்க கிட்ட என் வலிய மறைக்க” என்கிறார் பவித்ரா அதே சிரிப்புடன்.

மழைக்கும் வர்க்கமிருக்கிறது; சாதி இருக்கிறது என்பதை பவித்ராவின் வாழ்க்கை நமக்கு உணர்த்துகிறது.

மழை வந்தால் குளுமையான தூக்கத்தை அனுபவிக்கும் மக்கள் இருக்கும் இதே பூமியில் தான் இரவெல்லாம் பவித்ரா போன்ற பெண்கள் தன் வீட்டில் உள்ள தண்ணீரை, பாத்திரத்தை வைத்து வெளியேற்றுக் கொண்டிருக்கின்றனர்.

அதனால் தான் சொல்கிறேன், ”மழை அழகு தான், அப்பார்ட்மெண்ட் ஜன்னல் வலியாக ரசிக்கும் வரை”.

வெள்ளத்தின்போது மழைநீர் பெருங் கட்டிடத்துக்குள் நுழையும் போது, ஈர்க்கப்படும் அரசு மற்றும் ஊடக கவனங்கள், எண்ணற்ற பவித்ராவின் வீடுகளில் எல்லா வருடமும் மழைநீர் அடைக்களம் தேடும் போதும் யாதுமற்றவர்களாக்க தவிக்க விடுகின்றன.

– கு.சௌமியா

Comments (0)
Add Comment