நீட் தகுதித் தேர்வு எழுதாத மருத்துவரும் சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையின் ஈரல் மாற்றுப் பிரிவை உருவாக்கியவருமான டாக்டர் ஆர்.சுரேந்திரன் அது உருவான வரலாற்றைப் பகிர்கிறார்.
“1995-ல் நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டேன். அங்கு, ஈரல் மாற்றுப் பிரிவைத் தொடங்க விரும்புவதைச் சொன்னபோது எனது சகாக்கள் ஜோக் என்றே நினைத்தார்கள். இதற்கு நிறைய செலவாகும் என்றார்கள்.
அப்போது வடசென்னை எம்.பி. குப்புசாமியின் மனைவிக்கு உணவுக்குழாயில் ஏற்பட்ட புற்றுநோய்க்கு அறுவைச் சிகிச்சை செய்தேன். அவர், தனது தொகுதி வளர்ச்சி நிதியை ஈரல் மாற்றுத் துறைக்குக் கொடுத்தார்.
ஆனால், அந்த நிதியும் எங்களிடமிருந்து பறிக்கப்பட்டது. நானும் எனது நண்பர்களும் ஒவ்வொரு இடமாக ஓடியும் பலனில்லை.
இதையடுத்து அதிகமாக உயிரிழப்பு ஏற்படும் இரைப்பை குடல் இயல் பிரிவைத் தொடங்கி, அதில் ஈரல் மற்றும் கணையம் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொள்வது என்று முடிவெடுத்தோம்.
அதிகமாக உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் ஒரு வார்டை சிரமப்பட்டுப் பெற்றோம். அந்தத் துறைக்கென்று நர்சுகள் இல்லை. அதற்குப் பதிலாக ஒப்பந்த அடிப்படையில் நர்சுகளை எடுக்கும்படி கூறினர். உடனே, நர்சுகள் சங்கம் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தைத் தொடங்கியது. இதில் தனியார் மருத்துவமனை ஆதரவாளர்களும் இருந்தார்கள்.
தமிழகம் முழுவதும் பரவிய இந்த ஸ்டிரைக் ஒரு வாரம் நீடித்தது. இந்த நிலையில் நர்சுகள் சங்கத்தின் தலைவருடைய மருமகன் விமான நிலையத்தில் ரத்த வாந்தி எடுத்து, அபாய கட்டத்தில் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டார்.
பழைய சிகிச்சை முறைகள் அனைத்தும் முயற்சிக்கப்பட்டு தோற்றவுடன், நான் மதியம் 2 மணிக்கு வந்தேன். அறுவைச் சிகிச்சை செய்தேன். அவர் குணமடைந்தார். நர்சுகள் சங்கத் தலைவர் என்னிடம் வந்தார். நன்றி சொல்லி அழுதார்.
நான், அவரிடம் சொன்னேன், “சிஸ்டர், நீங்கள் உங்கள் மருமகனைப் பற்றி சிந்திக்கிறீர்கள். நான் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான மருமகன்களைப் பற்றி நினைக்கிறேன்.”
நர்சுகள் போராட்டம் முடிவுக்கு வந்தது. அரசு விருப்பப்படி ஒப்பந்த நர்சுகளை வைத்து இரைப்பை குடல் அறுவைச் சிகிச்சைப் பிரிவைத் தொடங்கினோம்.
அறுவைச் சிகிச்சை செய்யும் நபர்களிடம் குறைந்தபட்ச பராமரிப்பு செலவுக்கு பணம் பெற்று நர்சுகளுக்கு சம்பளமாக கொடுத்தோம். அது நல்லபடியாக செயல்பட்டது. பின்னர் சில ஆண்டுகளில் தமிழகத்தின் பிற மருத்துவமனைகளிலும் சில மாறுதல்களுடன் இந்தப் பிரிவு தொடங்கப்பட்டது.
2000-மாவது ஆண்டு இந்தப் பிரிவுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கிடைத்தது. இந்தியாவிலேயே முதலாவது இது. அதன்பிறகு இந்தக் குறைபாடுகளால் இறப்பவர்கள் எண்ணிக்கைக் குறைந்தது. பலர் நன்றி சொன்னார்கள். வருமானமும் உபரியாகியது. 80 லட்சம் ரூபாய் கிடைத்தது. அதைக்கொண்டு நவீன உபகரணங்களை வாங்கினோம்.
இந்தத் துறையில் பயிற்சிபெற மருத்துவர்கள் விரும்பினார்கள். கூடுதல் நேரம் தங்கி கூடுதல் பங்களிப்பு செய்யத் தயாரானவர்கள் மட்டுமே சேர்க்கப்படுவார்கள் என்று நிபந்தனை விதித்தேன். இதையடுத்து பல திறமையான இளம் டாக்டர்கள் கிடைத்தார்கள்.
ஒரு நாள் அப்போலோவுக்கு வரும்படி நிதித்துறைச் செயலாளர் என்னிடம் கூறினார். நான் அவரை ஸ்டான்லி மருத்துவமனைக்கு வரும்படி கூறினேன்.
ஒரு அரசு விடுமுறைநாளில் அவர் ஸ்டான்லி வந்தார். எங்கள் டிபார்ட்மெண்ட்டையும் வேலை பார்க்கும் விதத்தையும் பார்த்து அசந்துபோனார். அதன்பிறகு தேவையான நிதியை ஒதுக்கினார். நாங்கள் கேட்டதைக் காட்டிலும் இருமடங்கு நிதி கிடைத்தது. அதுமட்டுமின்றி புதிய கட்டிடமும் கிடைத்தது. அந்தக் கட்டிடத்தை நவீனப்படுத்தவும் நிதி கிடைத்தது.
மருத்துவத்துறை கட்டடத் திறப்பு விழாவுக்கு தயார் செய்யும் மும்முரத்தில் இருந்தோம். புதிய டீன் ஒருவர் எங்களுடன் இணைந்தார். ஆனால் நிதி விஷயத்திலேயே ஆர்வமாக இருந்தார்.
எனினும், நிதி நிர்வாகம் முழுவதும் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் பொறுப்பில் மாற்றப்பட்டதை அறிந்ததும் அவர் விரக்தி அடைந்தார். அதைத் தொடர்ந்து கட்டடத்தை எங்களிடமிருந்து பறிக்க முயற்சித்தார்.
எல்லா வழிகளும் அடைக்கப்பட்ட நிலையில் முதலமைச்சர் கலைஞரின் இல்லத்துக்கு இரவு 8 மணிக்கு போன் செய்தேன். அடுத்த நாள் காலை நான் ஜப்பானுக்குப் போகவேண்டும் என்பதால் அவசரமாக போன் செய்தேன்.
முதலமைச்சரின் மனைவி போனை எடுத்தார். அடுத்தநாள் காலை முதலமைச்சரை சந்திக்க வரும்படி கூறினார்.
செல்வாக்கு மிகுந்த அந்த புதிய டீன் மாற்றப்பட்டார். பல அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தார்கள்.
திரு.சன்வத்ரம் ஐஏஎஸ் தமிழ்நாடு மருத்துவ சேவைக் கழகத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டார்.
அவர் வந்தபிறகு கட்டடத்தை வேகமாக சீரமைத்தோம். இந்தக் கட்டடத்தை முதலமைச்சர் கலைஞர் வந்து திறந்து வைத்தால் பெரிய அளவுக்கு ஒத்துழைப்புக் கிடைக்கும் என்று நினைத்தோம்.
ஆனால், முதலமைச்சரை சந்திக்க அனுமதி பெறமுடியவில்லை. கட்டடத்தை விரைவாகத் திறக்க சுகாதாரத்துறை அமைச்சர் விரும்பினார். அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை.
அடுத்தநாள் அப்போலோவுக்கு சென்று லிப்ட் அருகே காத்திருந்தேன். லிப்ட் வந்தது. உள்ளே இருந்து முதலமைச்சர் கலைஞரும் அமைச்சர்களும் வந்தார்கள்.
முதலமைச்சருக்கு வாழ்த்துச் சொன்னேன். இரண்டு மாதங்களாக அவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கவில்லை என்றேன். உடனே அடுத்த நாள் காலை 9 மணிக்கு வந்து சந்திக்கும்படி கூறினார். போனேன். மருத்துவமனைக் கட்டடத் திறப்புவிழாவுக்கு வரவேண்டும் என்று கேட்டேன்.
“பொதுவாக, பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருதுகளுக்காகத்தான் டாக்டர்கள் வருவார்கள். அதெல்லாம் உங்களுக்கு வேண்டாமா?” என்று நகைச்சுவையாகக் கேட்டார்.
உடனே நான், “ஸார், நீங்கள் இந்தக் கட்டடத்தை திறந்துவைத்தால், அதுவே பாரத ரத்னா விருது பெற்ற மகிழ்ச்சியை எனக்குக் கொடுக்கும்” என்றேன்.
பிறகு அவர் ஆலோசனை நடத்தி திறப்புவிழாவுக்கு வந்தார். திறந்துவைத்த பிறகு, என்னை அழைத்து அவருக்கு அருகில் நிற்கவைத்து போட்டோ எடுக்கச் சொன்னார். நான் உயரத்தில் பறப்பதுபோல உணர்ந்தேன்.
இதற்கிடையில் மாதத்துக்கு ஒரு முறை 50 சீனியர் டாக்டர்களுக்கு எங்களது டிபார்ட்மெண்ட் குறித்து விரிவுரை நிகழ்த்தும்படி பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்சும், ஷீலா பாலகிருஷ்ணன் ஐஏஎஸ்சும் கூறியிருந்தார்கள்.
ஒரு முறை விரிவுரை முடிந்ததும் 2009 ஜனவரி 28 ஆம் தேதி டாக்டர்களுடன் காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.
அப்போது ஒரு டாக்டர் கேட்டார்… “டிபார்ட்மெண்ட் நன்றாக வந்திருக்கிறது. ஆனால், எப்போது முதல் அறுவைச் சிகிச்சையைத் தொடங்குவீர்கள்?” என்று கேட்டார். அவர் வாயை மூடவில்லை. அதற்குள் எனது போன் ஒலித்தது.
அரசு மருத்துவமனையிலிருந்து டாக்டர் பேசினார். தங்களிடம் மூளைச்சாவு அடைந்த ஒரு நோயாளி இருப்பதாகவும், அவரிடமிருந்து ஈரலை எடுத்துக்கொள்ள முடியுமா? என்று கேட்டார்.
நானும் எனது சகாக்களும் ஆச்சரியமடைந்தோம். அன்று காலை 11 மணிக்கே அறுவைச் சிகிச்சையைத் தொடங்கினோம். அடுத்தநாள் மதியம் வரை இது நீடித்தது. எல்லோரும் சோர்வடைந்தோம். நோயாளி கண் விழிக்கும்வரை ஓய்வெடுத்தோம்.
அரசு மருத்துவமனை ஒன்றில் இந்தியாவிலேயே முதன்முதல் ஈரல் மாற்று சிகிச்சையை நடத்தியிருக்கிறோம்.
எங்கள் முதல் அறுவைச்சிகிச்சை வெற்றிபெற்றது. 10 ஆண்டுகள் முடிந்த நிலையிலும், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 29 ஆம் தேதி அந்தப் பெண் எனக்கு போன் செய்து, “நான் இன்னும் உயிரோடு இருக்கிறேன். உங்களுக்கும் உங்கள் குழுவுக்கும் நன்றி” என்று கூறுகிறார்.
இனி, ஸ்டெம் செல் அல்லது குருத்தணு திட்டம் குறித்து கொஞ்சம் சொல்லலாம் என்று நினைக்கிறேன். 2007 ஆம் ஆண்டு, நான் ஒரு கூட்டத்துக்கு போயிருந்தேன். அங்குதான் ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சைக்குப் பதிலாக ஸ்டெம் செல் சிகிச்சைக்கு மாறலாம் என்ற விவாதம் இடம்பெற்றது.
எங்களுடைய முயற்சிகள் வீணாக நாங்கள் விரும்பவில்லை. ஸ்டெம் செல் ஆய்வுக்கூடங்கள் பலவற்றை ஆய்வு செய்தோம். பேராசிரியர் ரோஸி வெண்ணிலா ஆஸ்திரேலியாவுக்குச் சென்று சில ஆய்வுக்கூடங்களைப் பார்த்து வந்தார்.
அந்த அடிப்படையில் 20 கோடி ரூபாயில் ஒரு திட்டத்தை உருவாக்கி இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு அனுப்பினோம். ஒரு பதிலும் வரவில்லை.
இந்தச் சமயத்தில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த பேராசிரியர் க.அன்பழகனும், கனிமொழி எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.யும் 5 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்தார்கள்.
ஆனால், அந்த நிதியை ஒதுக்க லகானி ஐ.ஏ.எஸ். மறுத்துவிட்டார். ஆனாலும், கருப்பையா பாண்டியனால் அந்த நிதியை நாங்கள் பெறமுடிந்தது. ஆனாலும், லேப் கட்டும் பணி நகரவே இல்லை.
இந்த நிலையில்தான் நான் முதலமைச்சர் கலைஞரை சந்தித்தேன். அவரிடம் விவரத்தைத் தெரிவித்தேன். அவர் உடனே அப்போதைய தலைமைச் செயலாளர் ஸ்ரீபதியை அழைத்து கவனிக்கச் சொன்னார்.
அவர், நான்கு மணிநேரம் ஆய்வு செய்தார். அந்தச் சமயத்தில் மருத்துவப் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி காலியாக இருந்தது. அதை ஏற்கும்படி என்னை முதலமைச்சர் கலைஞர் கேட்டார். நான் அதில் விருப்பமில்லை என்றேன். ஸ்டான்லியிலேயே நிறைய வேலை பாக்கியிருக்கிறது என்றேன்.
உடனே அவர்… “வி.சி. போஸ்ட் வேண்டாம் என்கிறீர்கள். பத்மஸ்ரீ விருது வேண்டாம் என்கிறீர்கள். உங்களுக்கு என்னதான் வேண்டும்?” என்று கேட்டார்.
நான் அவரிடம், நடுவண் அரசு திட்டமிட்டுள்ள ஐஎல்பிஎஸ் திட்டம் குறித்து கூறினேன். 3 ஏக்கர் நிலத்தையும் 350 கோடி ரூபாயையும் அது ஒதுக்கியிருப்பதை குறிப்பிட்டேன்.
அதைக்கேட்ட முதலமைச்சர், இடத்தைத் தேர்வு செய்துவிட்டு வாங்க, 450 கோடி ரூபாய் தருகிறேன் என்று தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அவருடைய உதவியாளர் சண்முகநாதனை அழைத்து, இரண்டு மணி நேரத்தில் நிதி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர்களின் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யும்படி உத்தரவிட்டார்.
நான் ஸ்டான்லி மருத்துவமனைக்கு எதிரில் இருக்கும் பொதுப்பணித்துறை இடத்தை அடையாளம் காட்டினேன். அப்படித்தான் பழைய மத்திய சிறையின் 8 ஏக்கர் நிலம் ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கிடைத்தது.
36 ஈரல் மாற்று அறுவைச் சிகிச்சையையும், ஸ்டெம் செல் லேப் கட்டுமானப் பணியையும் மனநிறைவோடு செய்திருக்கிறேன்”.
– நன்றி: தோழர் கணேசன்