கள்ளச்சாராயச் சாவுகள்: அதிர வைத்த நேரடி அனுபவம்!

மணா

சக மனிதர்கள் மீது நேசம் கொண்ட பலரையும் அதிர வைத்திருக்கிறது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தினால் நடந்திருக்கிற 35-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகள். இன்னும் மருத்துவமனையில் பலர் சிகிச்சையில் இருக்கிறார்கள்.

முன்பு மரக்காணம் அருகில் இதே மாதிரியான உயிரிழப்புகள். தற்போது கள்ளக்குறிச்சி.

இதையொட்டி சில அதிகாரிகள் மாற்றப்பட்டிருக்கிறார்கள். புதிதாகச் சிலர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவும் எப்போதும் நிகழ்கிற ஒன்று தான்.

ஆனால், அந்தப் பகுதி மக்கள் தவித்துப் போய்ச்சொல்கிறபடி – நான்கு ஆண்டுகளுக்கு மேல் இதே பகுதியில் ஆட்சி பேதங்களைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், பலரையும் சரிக்கட்டியபடி, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட கள்ளச்சாராயம் தொடர்ந்து விற்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்றால், தனித்து அதிகாரிகளை மட்டுமே இதற்குக் காரணம் என்று குற்றம் சாட்டிவிட முடியாது.

அரசியல் கட்சிகளின் பங்கு இதில் இல்லையா, அவர்களுடைய ஒத்துழைப்பு இல்லாமலா கள்ளச்சாராயப் புழக்கம் தொடர்ந்து பல ஆண்டுகளாக நீடிக்க முடிந்திருக்கிறது?

பாதிப்பு ஏற்படுத்தும் என்று உறுதிப்படுத்தப்பட்ட ‘மெத்தனால்’ என்கிற போதையேற்றி உயிரிழக்க வைக்கிற ஒன்றைக் கலந்து எப்படி கள்ளச்சாராயம் தயாரிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டிருக்கிறது?

இவ்வளவுக்கும் மாவட்ட ஆட்சியரும், அதிகாரிகளும் குடியிருக்கிற பகுதிக்கு அருகிலேயே இப்படிப்பட்ட ‘கள்ளச்சாராய விநியோகம்’ நடந்திருக்கிறது என்றால், தற்போது உயிரிழப்புகள் இந்த அளவுக்கு நடக்கும் வரை, உயரதிகாரிகளின் பார்வையில், இந்த விற்பனை படவில்லையா? காவல்துறையில் மோப்ப சக்திக்கு இதெல்லாம் பிடிபடவில்லையா?

தற்போது சட்டென்று சுதாரித்ததைப் போல, தமிழகத்தின் வேறு சில பகுதிகளிலும் கள்ளச்சாராய விற்பனை செய்கிறவர்களில் சிலரைப் பிடித்து பல லிட்டர் சாராயத்தை அழித்திருப்பதாகச் செய்திகள் வெளிவருக்கின்றன.

மலைப்பு தான் ஏற்படுகிறது.

ஒரு பக்கம் அதிகாரப்பூர்வமாக அரசே முன்னின்று நடத்துகிற டாஸ்மாக்; இன்னொரு புறம் இம்மாதிரியான கள்ளச்சாராயம் அல்லது விஷச் சாராயப் புழக்கம்; மற்றொரு புறம் தமிழ்நாடளவில் பரவலாக வலை விரிக்கப்பட்டிருக்கிற விதவிதமான போதைப் பொருட்களின் நடமாட்டம்.

இப்படி நம்மைச் சுற்றி என்னென்ன விதமான போதை வலைகள்? இதில் சிக்கி வாழ்க்கையைப் படிப்படியாகவோ அல்லது உடனடியாகவோ சீரழித்துக் கொண்டிருக்கிற இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட எத்தனை விதமான மனிதர்கள்?

அண்மையில் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் கதறுவதைத் தொலைக்காட்சியில் பார்த்தபோது, போதைக்கு எதிரான ஆவேசமான குரல்களைக் கேட்க முடிந்தது.

சட்டமன்றத்தில் உயிரிழந்த உயிர்களுக்கு அனுதாபம் தெரிவித்துவிட்டு, இரு நிமிட அஞ்சலி செலுத்துவிட்டு, மருத்துவமனைக்குச் சென்று பார்வையிட்டு – நிவாரணம் வழங்கிவிட்டு, பத்து நாட்களில் நம் நினைவுகளில் இருந்தே மறக்கடிக்கப்பட்டுவிடலாம்.

கொரோனா போன்ற இயற்கைப் பேரிடரின்போது அமல்படுத்திய மதுவிலக்கை, மக்களின் பெயரால் ஆட்சியில் அமர்ந்த எந்த அரசும் ஏன் அமல்படுத்தமுடியவில்லை?

மதுபான ஆலைகளை நடத்துகிறவர்கள் இது பற்றியெல்லாம் யோசிப்பார்களா?

என்னுடைய ஊடக அனுபவத்தில் மறக்க முடியாத ஒரு அனுபவம்.

இதே மாதிரியான வீர்யமான  ஒரு முன் அனுபவம் பல ஆண்டுகளுக்கு முன்பு.

அப்போது விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகில் இதே மாதிரியான விஷச் சாராயம் குடித்து 15 பேர்களுக்கு மேல் பலியாகி இருந்தனர்.

விசுவல் மீடியாக்கள் அவ்வளவாக மொய்க்காத நேரம்.

அச்சு ஊடகங்களில் அதுவே தலைப்புச் செய்தியாகியிருந்தது. அப்போது பிரபல வார இதழ் ஒன்றில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். உடன் சின்னக் கேமிரா. ஒரு பேக்.

சாத்தூர் மருத்துவமனைக்கு உடல்கள் கொண்டு வரப்பட்டிருந்தன. இறந்தவர்களின் உறவினர்கள் போஸ்ட் மார்ட்டம் அறைக்கு முன்னால் கூடிக் குமுறிக் கொண்டிருந்தார்கள்.

சூழலே பதற்றத்துடன் இருந்தது.

மருத்துவமனை ஊழியர்களிடம் விசாரித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் கேட்டார்.

‘’என்னப்பா.. பத்திரிகையா?’’

தலையசைத்ததும், ’’உள்ளே போய்ப் பார்க்கணுமா?’’

குறிப்பிட்ட தொகையைக் கேட்டார். கொடுத்ததும் முகத்தை மறைக்க ஒரு வெள்ளை நிற மாஸ்க்கைக் கையில் கொடுத்தார்.

‘’என்னோட வா’’ – அழைத்துக் கொண்டு போனார்.

போஸ்ட் மார்ட்டம் அறைக் கதவைத் திறந்ததும் குப்பென்ற நாற்றம். வரிசையாகச் சடலங்கள் வயிறு வீங்கிய நிலையில் கிடத்தப்பட்டிருந்தன. சடலம் போர்த்தப்படவில்லை.

என்னை அழைத்துக் கொண்டு போனவர் உள்ளே குறிப்பிட்ட இடத்திற்கு வரச் சொல்லிக் கையால் சைகை காட்டினார்.

அருகே போனேன்.

அப்போது தான் ஒரு சடலத்திற்கு போஸ்ட்மார்ட்டம் நடந்து கொண்டிருந்தது. மாஸ்க் அணிந்த டாக்டர் ஒரு சடலத்தின் வீங்கிய வயிற்றுப் பகுதியில் கத்தியை வைத்ததும் வயிறு பலாப்பழத்தைப் போலப் பிளந்து மிக மோசமான நாற்றத்துடன் திரவம் கொட்டி அந்தப் பிணவறையே நிறைந்தது.

சோதிப்பதற்காகச் சில பகுதிகளை அருகில் இருந்த ஊழியர்கள் சேகரித்தார்கள்.

பிறகு அடுத்த சடலத்திற்கு நகர்ந்தார்கள் மருத்துவர்கள்.

பிணவறையில் முதல்முறையாக இத்தனை உடல்களைக் கோரமான கோலத்தில் பார்த்த அதிர்ச்சி, போஸ்ட் மார்ட்டம் செய்தபோது உடல் பிளவுபட்டபோது பரவிய நாற்றம், எல்லாம் சேர்ந்து உடனடியாக அந்த அறையிலிருந்து வெளியேறியபோது குமட்டிக் கொண்டு வந்தது.

வெளியே வந்து குடிநீர்க்குழாயில் முகத்தைக் கழுவி சற்றே ஆசுவாசப்படுத்திக் கொண்டு திரும்பவும் மருத்துவமனையின் வாசலுக்கு வந்தபோது. முன்னால் நின்றும், அமர்ந்தபடியும் கதறிக் கொண்டிருந்த பெண்களைப் பார்க்கப் பரிதாபமாக இருந்தது.

நடுத்தர வயதுப் பெண் ஒருவர் மருத்துவமனைக்கு முன்னால் கிடந்த மண்ணை வாரித் தூற்றியபடி, ’’இப்படியெல்லாம் பாழாப்போன சாராயத்தை விற்று எங்கத் தாலி அறுக்கணுமாடா? எங்க குடும்பம் மட்டும் குடிச்சு நாசமாப் போகணும். நீங்களும், ஒங்க குடும்பமும் மட்டும் நல்லா இருப்பீங்களாடா? அழிஞ்சு போயிருவீங்கடா” – மண்ணை வாரி இறைந்தபடி அவர் கத்திக் குமுறியபோது வெப்பம் தகித்த சாபத்தைப் போலிருந்தது.

உயிர் வலியுடன் கூடிய அம்மாதிரியான சாபங்கள் இன்னும் காற்றில் அலைந்து கொண்டிருக்கின்றன உயிரோடு.

kallcharayamகள்ளக்குறிச்சிகள்ளச்சாராயம்டாஸ்மாக்போதைப் பொருட்கள்மதுபான ஆலைமெத்தனால்விஷச்சாராயம்
Comments (0)
Add Comment