இந்திய ஜனநாயகத்தின் இன்றைய நம்பிக்கை நாயகன் ராகுல் காந்தியின் 54 வது பிறந்த நாள் இன்று (ஜூன் 19).
டெல்லியில் உள்ள புகழ் பெற்ற புனித ஸ்டீபன் கல்லூரியின் முதல்வர் உயர்திரு *வால்சன் தம்பு *Valson Thambu* அவர்கள் காணொளி மூலம் ராகுல் அவர்களுக்கு சில அறிவுரைகளை கூறி உள்ளார்.
இவர் முன்னாள் சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் மற்றும் வேலூர் CMC மருத்துவ கல்லூரியின் துணை வேந்தராக பணியாற்றியவர்.
பல்வேறு அறிவு தளங்களில் பயணிக்கும் முதிர்ந்த கற்றறிந்த நல்லறிஞர்.
இந்திய ஜனநாயகத்தின் தன்மை மற்றும் இன்றைய அரசியல் சூழல், எதிர்க்கட்சி தலைவராக ராகுல் ஆற்ற வேண்டிய பணி குறித்தும் அழகான ஆங்கிலத்தில் அவருக்குரிய பாணியில் ஒரு தந்தையின் நிலையில் கூறியுள்ள உரையை பகிர்ந்துள்ளேன்.
பேச்சு நடையில் உள்ள அவரது முழு உரையின் ஆங்கில வடிவத்தை பதிவிறக்கம் செய்து அதை முடிந்த அளவு உரிய திருத்தம் செய்து அதன் கருத்தாக்கத்தை
தமிழில் சுருக்கமாக முன்வைக்கிறேன்.
ராகுல் அவர்களின் ஓவியத்தை கோடுகளால் அழகுற வரைந்த அன்பு நண்பர் ஓவியர் சுந்தர் முருகேசன் அவர்களுக்கு நன்றி.
கடந்த பத்தாண்டுகளால் நடந்த அரசியல் சூழல்களில் இருந்து இந்திய ஜனநாயகத்தை மீட்டெடுப்பது இன்றையத் தேவை. அதை உணர்ந்தே அரசியல் அமைப்புச் சட்டத்தின் மாண்புகளைப் பாதுகாப்பதற்கு மக்கள் வாக்குகள் அளித்துள்ளது பாராட்டுக்குரியது.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் அவர்களுக்குள்ள பொறுப்புகளும் கடமைகளும் குறித்து தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
சிறந்த வாசிப்பாளார் இந்திய அரசியல் குறித்த சரியான புரிதல் உள்ள இளைஞர் என்ற முறையில், தனது கருத்துகளை முன்வைப்பதாக கூறி எதிர்க்கட்சித் தலைவராக அவர் ஆற்றவேண்டிய பணிகள் குறித்து மூன்று வித முதன்மைச் செயல்பாடுகளை பட்டியலிட்டுள்ளார்.
முதலில் மக்களுக்கு எதிரான அரசின் கொள்கைகளை மிகவும் உறுதியாக எதிர்க்க வேண்டும். அதற்காக மிகுந்த விழிப்போடு நாட்டில் நிலவும் சூழல்களை உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும். இரண்டாவதாக பிரச்சினைகள் குறித்த மறுபக்கம் என்ன என்பது குறித்த புரிதலை மக்களிடையே உருவாக்க வேண்டும். ஏனெனில் வெற்றி பெற்ற கட்சிகள் விளம்பர உத்திகள் மூலம் அழகாக பொய்களை உரைக்கும் வல்லமை உள்ளவர்கள் என்று கூறி அதற்கான எடுத்துக்காட்டாக பண மதிப்பு இழப்பு காலத்தில் நடைபெற்ற பொய்ப் பிரச்சாரங்கள் என பல நிகழ்வுகளைக் கூறி உள்ளார்.
மூன்றாவதாக மக்களை மாறுதலுக்கு தயார் செய்வதை எதிர்க்கட்சிகள் மறந்து விட்டன அது மிகவும் பலவீனமான அரசியல் என்பதால். அதில் உரிய கவனம் செலுத்தி மக்களை மாறுதலுக்குட்படுத்த வேண்டிய முயற்சிகளை எதிர்க்கட்சிகள் முன்னெடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
மக்களுக்கான ஜனநாயகம் வலுப்பெற மக்களுக்கான உரிய கற்பித்தல் அவசியம். மக்களைத் திசை திருப்ப முயலும் வசியமிகு வார்த்தைகள் மற்றும் மூளைச் சலவை செய்ய முனைப்போடு செயல்படும் சக்திகளிடம் இருந்து மக்களை மீட்பதற்கு அவர்களுக்கான கற்பித்தலை எளிய முறையில் அவர்களிடம் சேர்ப்பது என்பதை யார் ஆட்சி செய்கிறார், எத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்கிறார்? என்பதை விடவும் ஜனநாயகம் முடக்கபடக் கூடாது என்பதை விளக்க *உண்மையான ஜனநாயகம் என்பது ஜனநாயகத்தைக் கொலை செய்வது* என ஹிட்லர் கூறியதை நினைவு கூர்கிறார்.
தங்களைச் சுற்றி நிகழும் எதார்த்த நிகழ்வுகளில் இருந்து உண்மையான அரசியல் புரிதலை மக்களுக்கு உருவாக்க வேண்டும் என்று கூறுவதை நகைப்புரியதாக பலர் கருதக் கூடும். இதைப் புரிந்து கொள்வதற்கு எல்லோரும் ஸ்டீபன் கல்லூரி மாணவர்களாக இருக்க வேண்டிய அவசியமில்லை.
இன்று பாமர மக்களும் அதை நோக்கிய நகர்வுகளை துவக்கி உள்ளார்கள் என்பதை இந்த தேர்தலில் நிரூபித்துள்ளார்கள்
இதற்கான விளக்கங்களைக் கூறி எவ்வாறு ‘மூடநம்பிக்கைகள்’, ‘அதிகாரம்’ மற்றும் ‘காரணங்கள்’ ஆகியவற்றை இணைத்துக் கொண்ட அரசியல் கட்டமைக்கப்பட்டது என்றும், ஏன் அரசியல்வாதிகள் பலர் மூடநம்பிக்கையில் வீழ்ந்து கிடக்கின்றனர் என்பதை விளக்கியுள்ளார். சகிப்புத் தன்மையற்ற மனநிலை மூடநம்பிக்கைகளை உருவாகும் தளம் என்று கூறி அதற்கான வரலாற்றுத் தரவுகளை விளக்கியுள்ளார்.
அன்றைய முடியரசுக்கு முன்பு மத குருமார்கள் ஆதிக்கம் செலுத்தியது குறித்து யூத வரலாற்றுச் சான்றுகளைக் கூறி பின்பு அரசர்கள் என்றழைக்கபட்டவர்களை கடவுளுக்கு நிகரானவர் என்ற மூடநம்பிக்கை மக்கள் மனதில் எவ்வாறு வலுவாக நிறுவப்பட்டு, மக்கள் அநீதிகளை எதிர்ப்பதற்குப் பதிலாக அதை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு மாற்றப்பட்டார்கள் என்பதை கூறியுள்ளார்.
மூடநம்பிக்கைகள், அதிகாரம் மற்றும் அதற்கான காரணங்கள் எவ்வாறு ஒரே புள்ளியில் இணைக்கபட்டது என்று, விளக்கியுள்ளார். அண்மையில் புதிய நாடாளுமன்றத் திறப்பு விழாவில் ஏன் பிரதமர் மட்டும் முதன்மைப்படுத்தப்பட்டார்? அதேபோல் ராமர் கோவில் திறப்பு விழாவில் பிரதமர் மட்டும் முதன்மைப்படுத்தப்பட்டார் என்பதற்கான காரணங்களை மேலே குறிப்பிட்ட கருத்தாக்கத்தின் அடிப்படையில் விளக்கி உள்ளார்.
கடவுளின் தூதனாக தன்னை பிரதமர் அறிவித்து கொண்டதின் பின்னணி இதுவே என ஐரோப்பிய வரலாற்றுச் சான்றுகளை கூறி உள்ளார்.
இமானுவேல காண்ட் கூறிய காரணங்களுக்கான இயல்பு பிரபஞ்சம் தழுவிய ஒன்று, பிரபஞ்சம் சாராத ஒன்று காரணங்களால் அல்லது பகுத்தறிவுக்கு ஏற்புடையது அல்ல. அதை போலவே குறுகிய நோக்கம் பகுத்தறிவிற்கு ஏற்புடைந்தல்ல.
(nature of reason to be Universal what is not Universal cannot be reasonable or rational what is parochial cannot be rational) என்பதற்கு விளக்கங்களை கூறியுள்ளார்.
மக்கள் வினா எழுப்பினால் மட்டுமே ஜனநாயகம் நிலை பெறும். அதற்காக மக்களை தயார் செய்வது எதிர்கட்சிகள் கடமை.
இதை முழுமையாக உணர்ந்து செயலாற்றக் கூடிய திறன் ராகுலிடம் உள்ளது. மக்களின் நம்பிக்கை நாயகன் பயணம் தொடர தனது வாழ்த்துகளைப் பதிவு செய்துள்ளார் வால்சன் தம்பு.
ஆங்கிலத்தில்: வால்சன் தம்பு
மொழியாக்கம்: தமிழ்பாலன்