உழைப்பாளர்களின் உணர்வுகளை நேர்மையாக எழுதிய கார்க்கி!

நூல் அறிமுகம்:

உலகின் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு நாவல் எது என்றால், அது மாக்சிம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவல்தான்.

சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும் இளைஞர்களும் கொஞ்சங்கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இதைத் தீட்டியிருக்கிறார்.

இந்நாவலை வாசிக்காத ஒரு இலக்கியவாதியோ, எழுத்தாளனோ, கம்யூனிஸ்டோ இருக்க முடியாது.

1868, மார்ச் 16-ல் பிறந்து, அலெக்சி மாக்சிமோவிச் பெஷ்கோவ் என்ற தனது இயற்பெயரை கார்க்கி என்று மாற்றிக் கொண்டார்.

கார்க்கி என்றால் ‘கசப்பு’.

சோவியத் ரஷ்யப் புரட்சிக்கு ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் வந்த நாவல் இது. கொடுங்கோல் மன்னனின் ஆட்சிக்கு எதிராக பாதிக்கப்பட்ட மக்கள் கிளர்ந்தெழச் செய்வதை ஒரு பெண்மணி கதாபாத்திரத்தை வைத்து மிக சிறப்பாக சொல்லியிருப்பார் கார்க்கி.

பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்,
ரயில்வே தொழிலாளியாக-
செருப்பு தைப்பவராக-
மூட்டை தூக்குபவராக-
பிணம் சுடும் தொழிலாளியாக-
சோவியத் மண் முழுக்க சுற்றித் திரிந்தவர்,
தொழிலாளர்களுடன் பழகி-
பாட்டாளிகளின் வியர்வையில் கலந்து-
உழைக்கும் மக்களின் உணர்வுகளை நேர்மையாக எழுதியவர் தோழர் கார்க்கி.

ரஷ்யப் புரட்சிக்கு நிதி திரட்ட பல நாடுகளுக்குச் சென்றவர். லெனின், ஸ்டாலின் மீது மாறாத பற்றுதல் கொண்டவர். இவரது எழுத்துக்களை அரசால் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டவைகள். அரசின் கடுங்கோபத்திற்கு ஆளாகி பலமுறை கைது செய்யப்பட்டவர்.

உலகம் முழுவதும் உள்ள ஏராளமான எழுத்தாளர்களிடம் இவரது எழுத்துக்களின் தாக்கம் இன்றுவரை இருக்கிறது.

உலகம் கொண்டாடும் சிறந்த எழுத்தாளராகவும், சிறந்த குடும்பத் தலைவராகவும், சிறந்த மனிதராகவும் வாழ்ந்த மாக்சிம் கார்க்கி தனது 68-வது வயதில் 18.06.1936-ல் மறைந்தார்.

பகட்டான, பொய்யான, ஆதிக்க வர்க்கத்தினருக்கு அடிமைப்பட்டுப்போன, விருதுகளையும் பண முடிப்புகளையும் குறிக்கோளாகக் கொண்டு எழுதும் நம்மூர் இலக்கியவாதிகளுக்கு கார்க்கியின் வாழ்க்கை ஓர் பாடமாக அமையட்டும்.

வாழ்க கார்க்கி !

எழுதியவர்: இரா.திருநாவுக்கரசு

*****

நூல்: தாய்
ஆசிரியர்: மாக்சிம் கார்க்கி
ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
பக்கங்கள்: 600
விலை: 350.00 

Maxim Gorkystalinthai novelthai novel reviewthozhar gorkyதாய் நாவல்தோழர் கார்க்கிமாக்சிம் கார்க்கிஸ்டாலின்
Comments (0)
Add Comment