தங்களுக்கென தனித்துவமும் ஒரு ஸ்பெஷல் இமேஜும் இருப்பதாக நம்பிக்கொண்டு, அதற்கேற்ற கேரக்டர்களில் நடிப்பதையே சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தொடங்கி புதிய ஸ்டார் சிவகார்த்திகேயன் வரையிலும் செய்துவருகிறார்கள்.
அந்த இமேஜ் வளையத்தில் சிக்கிக்கொள்ளாத ஒருசில நடிகர்களில் மம்முட்டி முக்கியமானவர்.
தன்பாலின ஆர்வலர், மனப்பிறழ்வுக்கு ஆளானவர், பழி வாங்கும் பிசாசு, எதிர்நாயகன் என்றெல்லாம் இன்றும் விதவிதமாக நடித்து வருகிறார் மெகா ஸ்டார், மம்முகா என்றெல்லாம் அழைக்கப்படும் மம்முட்டி. இவரது உண்மையான பெயர் முகமது குட்டி. இப்போது இவர் 72 வயது இளைஞர்.
சட்டக் கல்லூரியில் படித்து முடித்து இரண்டு ஆண்டுகள் வழக்கறிஞராகப் பணியாற்றியவர். அந்த நேரத்தில் சல்பத்துடன் திருமணம் முடிந்தது. இவர்களுக்கு முதல் குழந்தை சுருமி, இரண்டாவது குழந்தை துல்கர் சல்மான். ஒரு லட்சிய தம்பதி போன்று இருவரும் இன்று வரையிலும் வாழ்ந்து வருகிறார்கள். மனைவியை பிறரிடம் தோழி என்று தான் அறிமுகம் செய்து வைக்கிறார்.
கல்லூரி காலத்திலிருந்தே நடிப்பு மீது மம்முட்டிக்கு நிறைய விருப்பம். சின்னச்சின்ன கேரக்டர்களில் பல படங்களில் நடித்திருக்கிறார் என்றாலும் 1980-ம் ஆண்டு வாசுதேவன் நாயர் இயக்கத்தில் வீல்கணுண்டு படத்தில் நடித்த பிறகே கதாநாயகனுக்குரிய அந்தஸ்து கிடைத்தது.
அதன் பிறகு அவர் மனதுக்குப் பிடித்த அத்தனை கேரக்டர்களிலும் நடிக்கத் தொடங்கினார். வடக்கன் வீரகதா, மதிலுகள் போன்ற திரைப்படங்கள் வெற்றி அடைந்ததுடன் மத்திய, மாநில அரசு விருதுகளும் பெற்றுத்தந்தன.
திரைப்படங்கள் வெற்றி அடைந்த நேரத்தில் கொஞ்சம் கர்வத்துடன் இருந்த மம்முட்டிக்கு, அன்றைய ஹிந்தி சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம் புதிய பாதையைக் காட்டியிருக்கிறது.
அன்று முதல் பொறுமை, எளிமை, தெளிவு எனும் பாதையை விட்டு அவர் கொஞ்சமும் விலகியதே இல்லை. வெற்றி, புகழ் போன்றவற்றை தலையில் தூக்கி சுமப்பதில்லை.
அரசியல் பற்றி பேசும் மம்முட்டி, ‘’என்னைப் பொறுத்தவரை மக்கள் சமத்துவமாகத்தான் வாழ்கிறார்கள். ஆதாயம் தேடும் சில சமூகவிரோதிகள்தான் அவர்களிடையே பிரிவினையை உருவாக்கி, கலவரத்தைத் துரண்டுகிறார்கள்.
அரசியலுக்கு வருபவர்கள் உண்மையான சேவை செய்யும் எண்ணத்தில் வரவேண்டும்…’’ என்று சொல்வதுடன் பல படங்களில் இதனை புகுத்தவும் செய்கிறார். தன்னால் அவ்வளவு தான் செய்ய இயலும் என்கிறார்.
அம்பேத்கராக நடித்ததை மிகப்பெரும் பாக்கியமாகக் கருதுகிறார். அந்தப் படத்துக்கு மட்டும்தான் ஒன்றரை ஆண்டு காலம் ஒதுக்கி நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“எதிரிகள், போட்டியாளர்கள், விரோதிகள் என்று யாரையும் மம்முட்டி கருதுவதில்லை. கசப்பான அனுபவம் ஏற்படுகிறது என்றால், ‘சொல்வதை தெளிவாகச் சொல்லாததும், சொல்லப்பட்ட கோணத்தில் புரிந்துகொள்ளாததும் நிறைய சிக்கல்களுக்குக் காரணமாக இருக்கிறது. ஆகவே, நமக்கு வரும் பிரச்னைகளுக்கு நாமும் ஒரு முக்கிய காரணமாக இருக்கிறோம்’’ என்கிறார்.
எந்த ஒரு படத்தின் சூப்பர்டூப்பர் ஹிட் வெற்றியும் மட்டமான ஃபிளாப்பும் மம்முட்டியை பாதிப்பதில்லை. தன்னுடைய பணியை சிறப்பாக செய்ததுடன் தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என்கிறார்.
திரைப்படங்களில் நடிப்பது மட்டுமின்றி சமூகப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபடுகிறார். பெயின் அண்ட் பல்லியேட்டிவ் கேர் சொசைட்டியின் உறுப்பினராக இருந்து ஆயிரக்கணக்கான மக்களின் வலி, வேதனையைக் குறைத்துவருகிறார்.
குழந்தைகள் நலனைப் பாதுகாக்கும் இந்தியத் தெருமுனை இயக்கத்தின் நல்லெண்ணத் தூதராக இருக்கிறார். இது தவிர புறக்கணிக்கப்பட்ட, அடித்தட்டு மக்களுக்கு வெளியே தெரியாத வகையில் ஏராளமான உதவிகள் செய்துவருகிறார்.
தன்னுடைய மகன் துல்கர் சல்மான் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்ட நேரத்தில் மம்முட்டி சொன்ன விஷயம் இது தான். ‘’நீ என்ன செய்ய விரும்புகிறாயோ, அதை செய். ஆனால், நான் உனக்கு ஒருபோதும் சிபாரிசு செய்ய மாட்டேன்’’ என்று சொல்லியிருக்கிறார்.
இதை இன்றும் குறிப்பிடும் துல்கர் சல்மான், ‘’சினிமாவில் நான் அறிமுகம் கிடைக்க கஷ்டப்பட்டேன் என்று சொன்னால் அது பொய்யாக இருக்கும். ஆனால், என் தந்தை எனக்கு இதுவரை உதவவில்லை என்பதில் எனக்கு மகிழ்ச்சி.
என்னிடம் வராதே, நான் யாரிடமும் சிபாரிசு செய்ய மாட்டேன் என்று அப்பா சொல்லிவிட்டார். இன்றுவரை கூட அதை அவர் செய்யவில்லை. அதற்காகவே அவரை நான் நேசிக்கிறேன்” என்கிறார்.
நல்ல கணவர், நல்ல நடிகர், நல்ல அப்பா, நல்ல சமூகசேவகர் என்று வாழும் அத்தனை கேரக்டர்களிலும் தனி முத்திரை பதிக்கிறார் மம்முட்டி. அதனால் தான் அவர் பேசுவது எல்லாமே உண்மையாக இருக்கிறது. அந்த உண்மை தத்துவமாகத் தெரிகிறது.
‘’மம்முட்டி என்பவரை இந்த உலகம் எப்படி நினைவு கூரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்.?’’ என்று சமீபத்தில் மம்முட்டியிடம் கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “எத்தனை நாட்கள் மக்கள் என்னை நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஒரு வருடம், பத்து வருடம், 15 வருடம் அவ்வளவு தான். உலகம் அழியும் வரை மக்கள் உங்களை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்க்க முடியாது. யாருக்கும் அப்படி நடக்கப்போவதில்லை.
மிகச் சிறந்த நபர்கள் கூட மிகச் சொற்பமாகவே நினைவு கூரப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கான நடிகர்களில் நானும் ஒருவன். அப்படியிருக்கும்போது எப்படி என்னை காலம் கடந்து நினைவு கூர்வார்கள்; அதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
நீங்கள் மறைந்துவிட்ட பிறகு மக்களுக்கு உங்களை எப்படி தெரியும்? உலகம் அழியும் வரை தங்களை நினைத்து கொண்டேயிருப்பார்கள் என்று பலரும் கருதுகிறார்கள். ஆனால் அது உண்மையில்லை” என்கிறார்.
கடல் உள்ள வரையிலும் காற்று உள்ள வரையிலும் எங்கள் தலைவரின் புகழ் அழியவே அழியாது என்று குரல் கொடுக்கும் அத்தனை ரசிகர்களும் கேட்க வேண்டிய பதில் இது.
மம்முட்டி ஆயிரத்தில் ஒருவர் அல்ல, கோடியில் ஒருவர்.
– எஸ்.கே.முருகன்
- நன்றி : ஞானகுரு மகிழ்ச்சி இதழ்
https://gyaanaguru.com/