துயரமும் துயர நிமித்தமும்…!

நூல் அறிமுகம்:

தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த எழுத்தாளர்களில் பேராசிரியர் பெருமாள் முருகன் குறிப்பிடத்தக்கவர்.

பெரும்பாலும் சிறுகதைகள், நாவல்கள் ஆகியவற்றுக்கு பெயர்பெற்றவராக பெருமாள் முருகன் அறியப்படுகிறார். ஆனால் இந்த நூல் பல்வேறு காலகட்டங்களில் வெளியான பல்வேறு ஆசிரியர்களின் நூலைப் பற்றிய ஒரு விமர்சனமாகவும், ஆய்வு நூலாகவும் இரு வகைகளில் இந்த நூல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

பாவாணன் என்பவரின் சிறுகதை பற்றிய ஒரு கட்டுரைக்கு பெருமாள் முருகன் எழுதிய தலைப்பே துயரமும் நிமித்தமும். இந்த தலைப்பு எழுத்தாளர் மன அழுத்தத்தில் இருந்த காலகட்டத்தில் பொருத்தமாக இருந்ததால் இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது.

முதல் கட்டுரையில் உதிரக் கவர்ச்சி படிந்த கவிதைகள் என்ற தலைப்பில் சுகந்தி என்பவரின் கவிதைகளைப் பற்றி விமர்சிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் மாதவிடாய் காலத்தில் தன்னுடைய சிறு சிறு தேவைகளுக்கு பிறரை எதிர்பார்த்து அவர்களுடைய அனுமதியை வேண்டி நிற்பவளாக ஆக்கப்படுகிறாள் என்பதை சுகந்தினுடைய சொற்களினால் குறைந்த பட்சம் ‘ஒரு குட்டி பிச்சைக்காரி’ ஆகி விடுகிறாள் என்ற ஒரு வரியே இக்கவிதையினுடைய வீச்சை நமக்கு இந்த கட்டுரையில் தெரிவிக்கிறார்.

‘படைப்புகளில் கனவுகள்’ என்ற தலைப்பில் ஜி.நாகராஜன் தன் படைப்புகளில் தான் உருவாக்கிய கதாபாத்திரங்கள் கனவுகளின் ஊடாக தனது நிறைவேறாத ஆசைகள் எண்ணங்கள் ஆகியவற்றை எப்படி கையாண்டு இருக்கிறார் என்பதை விளக்குகிறார் எழுத்தாளர்.

தொட்டி கட்டி வீடு சாதி மேலாண்மை என்ற தலைப்பில் இரா வடிவேலன் நாவலில் கொங்கு வட்டார பகுதிகளில் சாதியத்தின் கூறுகளை மறைத்துக் கொண்டு கொங்கு வெள்ளாளக் கவுண்டர்களுடைய உயரிய பண்புகளை வெளிக்காட்ட கூடியதாகவும் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவு படுத்தக் கூடியதாகவும் இந்த நாவல் அமைந்துள்ளதாக இந்த கட்டுரையில் விமர்சனம் செய்யப்பட்டுள்ளது.

திருக்குறளுக்கு உரை எழுதிய சுஜாதா தனது பிரபலத்தின் மூலமாக ஒரு பொதுஜன பார்வையிலிருந்து வெகுஜன உரையாக பொருள் அற்ற ஒரு உரையை எழுதி இருக்கிறார் என்பது இந்த நூலின் மூலம் நாம் அறிந்து கொள்ள முடியும்.

உடுமலை நாராயண கவியின் திமுக சார்பு நிலையோடு திரைப்பட பாடல்கள் மற்றும் கவிதைகளில் அவர் பயன்படுத்திய எழுத்துக்கள் எவ்வாறு பெண்களை இழிவுபடுத்தியதாகவே பெரியாருடைய விமர்சன பார்வைக்கு அப்பாற்பட்டதாக உள்ளது என்பதை விமர்சனம் படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் காலம் காலமாக பெண்களுக்கு சொத்துரிமை மறுக்கப்பட்ட சமூகத்தில் இதே திமுக ஆட்சி காலத்தில் 1989 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அவர்களால் நிறைவேற்ற முடியாமல் போன சொத்துரிமையை பெண்களுக்கும் வழங்கி சட்டம் இயற்றினார் கலைஞர் அவர்கள் இது குறித்து ஆசிரியர் எழுதாமல் விட்டது ஆச்சரியமாக உள்ளது.

கண்ணதாசன் எழுதிய வனவாசம் நூலை பற்றிய விமர்சனத்தில் இந்த நூல் எளிய நடையாளும் தலைவர்களுக்கு இருந்த விலை மகளிர் உறவு குறித்த சுவாரசியமான சில நிகழ்ச்சிகளினாலும் அங்கங்கே அவர் தெளித்துச் செல்லும் தத்துவ சாயல் கொண்ட விளக்கங்களினாலும் தான் என்று ஆசிரியரால் குறிப்பிடப்படுவது திராவிட இயக்கத் தலைவர்களை பற்றிய ஏற்கனவே இருக்கும் ஊகங்களுக்கு மேலும் சான்றாக அமைவது போல இந்த விமர்சனம் உள்ளது. இதை உண்மை எனவும் எடுத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால் ஊகங்கள் எல்லாம் உண்மையாகி விடாது.

பாரதியார் தான் வாழ்ந்த காலத்தில் சொல்லாக்க முயற்சி ஈடுபட்டுள்ளது ஒரு புதிய செய்தியாக உள்ளது.குறிப்பாக 1920 ஆம் ஆண்டில் ‘பொதுவுடமை’ என்ற சொல்லை தமிழ் தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் என்பது ஒரு முக்கிய செய்தியாகும்.

கடைசி கட்டுரையில் கொங்கு வட்டார பகுதிகளில் சுடுமண் சிற்பங்களின் உருவாக்கமும் அதன் பின்னணியில் உள்ள நம்பிக்கை மற்றும் சடங்குகளை பற்றிய ஒரு ஆய்வு கட்டுரையாக அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற ஏராளமான தகவல்கள் இந்த சிறிய நூலில் அமைந்துள்ளது.

– அகரன் பெருமாள்.

*****

நூல் : துயரமும் துயர நிமித்தமும்
ஆசிரியர் : பெருமாள் முருகன்
வெளியீடு : காலச்சுவடு
பக்கங்கள் : 149
விலை: 157

#துயரமும்_துயர_நிமித்தமும்_நூல் #பெருமாள்_முருகன் #Thuyaramum_Thuyara_Nimithamum_Book_review #perumal_murugan

perumal_muruganThuyaramum Thuyara Nimithamum Bookதுயரமும்_துயர_நிமித்தமும்_நூல்பெருமாள்_முருகன்
Comments (0)
Add Comment