’பேய் படம்’ என்றால் பயந்து நடுங்கியது ஒரு காலம். இப்போதெல்லாம் ’ஹாரர்’ படங்களைப் பார்க்கச் சிரித்தவாறே செல்கின்றனர் ரசிகர்கள். அதுவும் குழந்தை குட்டிகளுடன் செல்பவர்களின் எண்ணிக்கை அதிகம். ராகவேந்திரா லாரன்ஸ், சுந்தர்.சி போன்றவர்களால் வந்த வினை அது.
ஆனால், அந்த எண்ணத்தை மீறி ‘டிமான்டி காலனி’ போன்ற சில படங்கள் நம்மை மயிர்க்கூச்செறிய வைக்கும் வகையில் அமைந்துவிடும். சில ஆண்டுகளுக்கு முன் மராத்தியில் வெளியான ‘தும்பட்’ போன்ற படங்கள் அந்த மாயாஜாலத்தைச் செய்திருக்கின்றன.
அவற்றில் இருந்து கொஞ்சம் வேறுபட்டு மோகினிப் பேய்களுக்கும் பெண் தெய்வங்களுக்குமான வித்தியாசம் இம்மி அளவுதான் என்று சொன்ன ‘ஸ்திரீ’ சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அந்த படத்தைத் தயாரித்த தினேஷ் விஜன் மற்றும் அமர் கௌசிக் தந்திருக்கும் இன்னொரு படமே ‘முஞ்யா’.
மரத்தில் அடைபட்ட முஞ்யா!
கோட்யாவின் வீட்டில் நடந்த மொட்டையிடும் சடங்கு நிறைவடைந்து பத்து நாட்களுக்குள் அவர் மரணமடைந்த காரணத்தால், அவரது ஆன்மா ‘பிரம்ம ராட்சசனாக’ இந்த உலகை வதைக்கும் என்கின்றனர் அவரது உறவினர்கள்.
அதனால், ஈமச்சடங்கு நடக்கும் செத்துவாக்டி எனுமிடத்தில் உள்ள ஒரு மரத்தில் பூஜைகள் செய்து கோட்யாவின் ஆவியை அடைக்கின்றனர். ஆனாலும், பிரம்ம ராட்சசனாக அவர் உருவெடுப்பதைத் தடுக்க முடிவதில்லை. அதன் இன்னொரு பெயர் ‘முஞ்யா’. அப்படித்தான் கோட்யா ‘முஞ்யா’வாக மாறும் முன்கதை இதில் சொல்லப்படுகிறது.
சுமார் 50 ஆண்டுகளுக்கு பின்னரும், அந்த செத்துவாக்டிக்கு செல்வதென்றால் கோட்யாவின் கிராமத்தினருக்குப் பயம். அங்குதான் கோட்யாவின் சகோதரி மகன் பாலு வசிக்கிறார். இன்னொரு மகனின் குடும்பம் புனேயில் வாழ்கிறது. மகன் இறந்துவிட மருமகள் பம்மி, பேரன் பிட்டு உடன் வசிக்கிறார் அந்தப் பெண்மணி.
சிறு வயதில் இருந்தே பிட்டுவின் கனவுகளில் ‘முஞ்யா’ வந்து போகிறது. அதன் குரல் அவரை நிஜ வாழ்விலும் பயமுறுத்திக் கொண்டே இருக்கிறது.
தனது வீட்டின் அருகே வசிக்கும் பேலாவை மனதார விரும்புகிறார் பிட்டு. சிறு வயது தோழி என்றபோதும், பேலாவுக்குப் பிட்டுவை விட வயது அதிகம்.
இந்த நிலையில், அமெரிக்காவிலிருந்து குபா எனும் வெளிநாட்டவரை அழைத்துக்கொண்டு புனே வருகிறார் பேலா. அவரைத் தான் காதலிப்பதாகப் பிட்டுவிடம் சொல்கிறார். அது அவரது மனதைச் சுக்கல் சுக்கலாக்குகிறது.
இந்த நிலையில், பாலுவின் மகள் ருக்குவின் திருமண நிச்சயதார்த்தத்தில் கலந்துகொள்வதற்காகப் பிட்டு, பம்மி மற்றும் பிட்டுவின் பாட்டி மூவரும் கிராமத்திற்குச் செல்கின்றனர்.
சென்ற இடத்தில், பம்மிக்குப் பாலுவோடு வாக்குவாதம் நிகழ்கிறது. அப்போது, பிட்டுவின் தந்தை செத்துவாக்டியிலுள்ள முஞ்யா இருக்கும் மரத்தை வெட்டச் சென்றபோது உயிரிழந்தார் எனும் உண்மையை வெளிப்படுத்துகிறார் பாலு. அதனைப் பம்மியோ, பாட்டியோ பிட்டுவிடம் சொன்னதே இல்லை.
அதனைக் கேட்டதும், செத்துவாக்டி செல்கிறார் பிட்டு. அவரைப் பிடித்து வைத்துக்கொள்கிறது அந்த முஞ்யா.
வேறு எவரும் பேரனைக் காப்பாற்ற முன்வராத நிலையில், செத்துவாக்டி செல்கிறார் அந்தப் பாட்டி. பிரம்ம ராட்சசனாக இருக்கும் தனது சகோதரனைக் கண்டு பயமுறாமல், ‘எனது பேரனை விட்டுவிடு’ என்கிறார். அவரது மிரட்டலுக்கு முஞ்யா அடிபணிகிறது. பேரனை விடுவித்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்புகிறார் பாட்டி.
கடற்கரையில் வந்து நிற்கும் அவர்களைப் பின் தொடர்ந்து வரும் முஞ்யா, பாட்டியைக் கொல்கிறது. பிறகு, புனே செல்லும் பிட்டுவைப் பின்தொடர்கிறது. ’முன்னியைக் கல்யாணம் செய்து வை’ என்கிறது.
அதன்பின்னர், முஞ்யாவின் ‘டார்ச்சர்’ தாங்காமல் அல்லாடுகிறார் பிட்டு. அந்த முன்னி யார் என்று அறிய முயற்சி செய்கிறார். இறுதியாக, பேலாவின் பாட்டி தான் அந்த முன்னி என்றறிகிறார். நேராக முஞ்யாவை அழைத்துக்கொண்டு அவர்களிருக்கும் வீட்டுக்குச் செல்கிறார்.
அங்கே, முஞ்யா எதிர்பார்த்த முன்னியோ கிழவியாக இருக்கிறார். ஆனால், அவர் அப்போது பார்த்த இளம்வயது முன்னி போன்று பேலா காட்சியளிக்கிறார். அந்த நொடியில் இருந்து ‘பேலாவை திருமணம் செய்’ என்று நச்சரிக்க ஆரம்பிக்கிறது முஞ்யா.
தான் காதலித்த பெண்ணைப் பிரம்ம ராட்சசனிடம் ஒப்படைப்பதா என்று அதிர்ச்சியில் உறைகிறார் பிட்டு. அதன்பின் என்னவானது? பிட்டுவும் பேலாவும் முஞ்யாவின் பிடியில் இருந்து தப்பித்தார்களா என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
தமிழில் பிரம்ம ராட்சசன் என்று நாம் கேள்விப்பட்ட ஒரு பதத்திற்குத் திரையில் உருவம் தந்திருக்கிறது இந்த ‘முஞ்யா’. அது சம்பந்தப்பட்ட காட்சிகள் பயமுறுத்துகிற போதும், இதர பாத்திரங்களின் ‘ரியாக்ஷன்’ நம்மைச் சிரிக்க வைக்கிறது.
அதனால் இப்படத்தில் இடம்பெறுவது காமெடி பேயா, டெரர் பேயா என்ற கேள்விக்குப் பதில் சொல்வது கடினம். ஒரேநேரத்தில் இருவித உணர்வுகளையும் நம்முள் இப்படம் உருவாக்குகிறது என்பதே உண்மை.
ஈர்க்கும் காட்சியமைப்பு!
யோகேஷ் சந்தேகர் எழுதிய கதைக்கு, நிரேன் பட் திரைக்கதை வசனம் எழுத, ஆதித்யா சர்போத்கர் இப்படத்தினை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தில் பேலாவாக ஷர்வாரி, பிட்டுவாக அபய் வர்மா, பம்மியாக மோனா சிங், பாட்டியாக சுஹாஸ் ஜோஷி, பாலுவாக அஜய் புர்கர், ருக்குவாக பாக்யஸ்ரீ லிமாயே, முஞ்யாவாக ஆயுஷ், ஸ்பீல்பெர்க் சிங் ஆக தரஞ்சோத் சிங், குபாவாக வரும் ரிச்சர்ட் லோவாட் என்று பலர் நடித்துள்ளனர்.
சத்யராஜ் இதில் எல்விஸ் கரீம் பிரபாகர் என்ற வேடத்தில் நடித்துள்ளார். ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்தவராக அவரைக் காட்டியிருப்பது சர்ச்சைக்குரியதாக இருந்தாலும், தன் பங்குக்கு இந்த ‘ஹாரர்’ படத்தில் அவரது இருப்பு நம்மைச் சிரிப்பில் ஆழ்த்துகிறது. பிளாஷ்பேக் காட்சியில் ‘இந்திரவிழா’வில் நடித்த ஸ்ருதி மராதே வந்து போயிருக்கிறார்.
சௌரப் கோஸ்வாமியின் ஒளிப்பதிவு, மோனிஷா பால்டவாவின் படத்தொகுப்பு, ஜஸ்டின் வர்கீஸின் பின்னணி இசை மற்றும் சச்சின் – ஜிகர் இசையில் அமைந்த பாடல்கள் என்று இதன் தொழில்நுட்ப அம்சங்கள் ஒன்றுசேர்ந்து, ஒரு செறிவான படம் பார்த்த திருப்தியை உருவாக்குகின்றன. முக்கியமாக டிஐ, விஎஃப்எக்ஸ், சவுண்ட் எபெக்ட்ஸ் ஆகியன சிறப்பாக அமைந்துள்ளன.
வழக்கமான கதை, காட்சிகள் என்றபோதும், இதன் காட்சியமைப்பு ஈர்க்கும்படியாக உள்ளது. அதுவே ‘முஞ்யா’வின் யுஎஸ்பி. இந்தப் படத்தினைச் சிறப்பானதாக உணரச் செய்திருக்கிறார் இயக்குனர் ஆதித்யா சர்போத்கர்.
‘முஞ்யா’வின் அடிப்படைக் கதையானது ஒரு பெண்ணின் விருப்பம் இன்றி அவரைத் துரத்தித் துரத்திக் காதலிப்பது அர்த்தமற்றது என்றுணர்த்துகிறது. இந்த பேய் படத்தில் இருந்து ரசிகர்கள் கற்றுக்கொள்ளும் விஷயமும் அதுவே. இந்தப் படத்தினை வழக்கமான பேய் பட வரிசையில் இருந்து வேறுபடுத்துவதும் அதுவே.
‘அது போதுமே’ என்பவர்கள் தாராளமாக இந்த ‘முஞ்யா’வைப் பார்த்து பயமுறலாம்.. சிரிக்கலாம்.. கொண்டாடலாம்..!
- உதயசங்கரன் பாடகலிங்கம்
#Munjya_Movie_Review #Abhay_Verma #Sharvari_Wagh #முஞ்யா_விமர்சனம் #ஷர்வாரி #அபய்_வர்மா #சத்யராஜ் #sathyaraj #இயக்குனர்_ஆதித்யா_சர்போத்கர் #director_adithya_sarbothkar