சமீபகாலத்தில் வெளியான விஜய் சேதுபதியின் படங்கள் ஏதும் இந்த அளவுக்கு எதிர்பார்ப்பை உருவாக்கியதில்லை. அப்படிச் சொல்லும் அளவுக்குப் பல தரப்பில் இருந்தும் பாராட்டுகளைக் குவித்து வருகிறது ‘மகாராஜா’. அதனை உருவாக்குவதற்குப் படக்குழு மெனக்கெட்டிருக்கலாம். ஆனால், அப்படிப்பட்ட பாராட்டுகள் இதயப்பூர்வமாக வெளிப்படுவதற்குத் தக்கவாறு படத்தின் உள்ளடக்கமும் சிறப்பானதாக இருக்க வேண்டும்.
நிதிலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப், நட்டி, அருள்தாஸ், முனீஸ்காந்த், சிங்கம்புலி, ‘பாய்ஸ்’ மணிகண்டன், அபிராமி, திவ்யபாரதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘மகாராஜா’ அப்படியொரு உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிறதா?
ஒரு கதை!
சென்னை கே.கே.நகரில் சலூன் கடை வைத்திருக்கும் மகாராஜா (விஜய் சேதுபதி), பள்ளிக்கரணை பகுதியில் வசித்து வருகிறார். ஒருநாள் அவர் கடையில் இருந்து வீட்டுக்குத் திரும்புகிறார். சில மணி நேரம் கழித்து, தரையில் அடிபட்டு மயக்கமுற்ற நிலையில் இருந்து அவர் எழுகிறார். வீட்டிலுள்ள பொருட்கள் அனைத்தும் தாறுமாறாகச் சிதறிக் கிடக்கின்றன.
அடுத்தநாள் பள்ளிக்கரணை காவல் நிலையத்திற்குப் புகார் கொடுக்கச் செல்கிறார் மகாராஜா. ‘லட்சுமியைக் காணவில்லை’ என்று அங்கிருக்கும் போலீசாரிடம் சொல்கிறார். ‘லட்சுமி என்றால் யார்’, ‘மகளா’, ‘மனைவியா’ அல்லது ‘நகையா’ என்று அவரிடம் பலவிதமாக, அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அவரது பதில் சப் இன்ஸ்பெக்டரை (அருள்தாஸ்) எரிச்சல்படுத்துகிறது. அவரை வெளியே அனுப்புமாறு போலீசாரிடம் கூறுகிறார்.
மகாராஜாவோ, ’காவல் நிலையத்தை விட்டுச் செல்லமாட்டேன்’ என்று அடம்பிடிக்கிறார். அவரை போலீசார் வலுக்கட்டாயமாகப் பிடித்திழுக்க, அங்கிருகுக்ம் இரும்புக் கம்பியொன்றைப் பிடித்துக் கொள்கிறார். பலர் சேர்ந்து ஒன்றாக இழுக்க, மகாராஜா தனது பிடியை விடாமல் இருக்க, அந்த கம்பியோடு பிணைந்திருந்த பரண் உடைந்து, அதிலிருந்த பொருட்கள் அனைத்தும் கீழே விழுகின்றன.
தனது புகாரை விசாரித்தே தீர வேண்டும் என்கிற மகாராஜாவின் உறுதி, அக்காவல்நிலையத்தில் இருக்கும் சிலரை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. சிலரது கண்களுக்கு அவர் ‘காமெடி பீஸ்’ ஆகத் தென்படுகிறார்.
இன்ஸ்பெக்டர் வரதராஜனிடமும் (நட்டி என்கிற நடராஜ் சுப்பிரமணியம்) அதே கதையைச் சொல்கிறார். அவரும் லட்சுமியின் புகைப்படத்தைப் பார்த்ததும் ‘டென்ஷன்’ ஆகிறார். ஆனால், தனது புகாரை எடுத்துக்கொண்டால் பணம் தருவதாகச் சொல்கிறார் மகாராஜா.
அதன்பிறகு வரதராஜன் உள்ளிட்ட சில போலீசார், மகாராஜாவின் வீட்டுக்குச் செல்கின்றனர். அந்த வீட்டின் கதியைப் பார்த்தவுடன், அங்கு ஏதோ ஒரு குற்றம் நடந்திருப்பதாக அவர்கள் உணர்கின்றனர்.
அதேநேரத்தில், மகாராஜாவிடம் இருந்து பணம் கறக்கும் நோக்கில் ‘லட்சுமியைக் கண்டுபிடித்து தருகிறோம்’ என்று பொய் சொல்கின்றனர்.
வரதராஜன் உறுதியளித்தபிறகும் கூட, பள்ளிக்கரணை காவல்நிலையமே கதி என்று இருக்கிறார் மகாராஜா. தனது கடைக்குக் கூட அவர் செல்வதில்லை. அங்கிருக்கும் போலீசார் அவமானப்படுத்தும்போதும், அவர் முகம் சுழிப்பதில்லை.
இந்த நிலையில், தனது கடையில் மெக்கானிக் ஆக வேலை செய்த தனத்தைக் (பாய்ஸ் மணிகண்டன்) காணவில்லை என்று ஷோரூம் மேனேஜர் புகார் தெரிவிக்க வருகிறார். அவரது கையில் இருக்கும் புகைப்படத்தைப் பார்த்தவுடன் மகாராஜா பம்முகிறார்.
ஏனென்றால், இரண்டு நாட்களுக்கு முன்பாக தனத்தைப் பின்தொடர்ந்து சென்று ஒரு பழைய ஆலையில் வைத்து அவரைக் கொலை செய்தது மகாராஜா தான்.
மகாராஜா ஏன் தனத்தைக் கொலை செய்தார்? தனமும் அவருடன் வந்த இரண்டு பேரும் மகாராஜாவின் வீட்டில் உண்மையில் என்ன திருடினார்கள் என்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது இப்படத்தின் மீதி.
இந்தக் கதையில் செல்வம் (அனுராக் காஷ்யப்) எனும் நபர் ஒரு மின்சாதனக் கடையொன்றை நடத்தி வருவதாகக் காட்டப்படுகிறது.
செல்வம் தனது நண்பர் (வினோத் சாகர்) உடன் சேர்ந்து, சில பணக்கார வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளையடிக்கவும் செய்கிறார். அதேநேரத்தில் மனைவி (அபிராமி) மற்றும் ஒன்றரை வயது மகள் உடன் கொஞ்சம் ஆடம்பரமான ‘மிடில் கிளாஸ்’ வாழ்க்கையை மேற்கொள்கிறார்.
தனம், மகாராஜா, செல்வம் மூவரும் எந்த வகையில் ஒருவரோடு ஒருவர் சம்பந்தப்படுகின்றனர் என்பது ஒரு கிளையாகவும், மகாராஜாவுக்கும் அவரது பதின்ம வயது மகள் ஜோதிக்குமான (சஜனா நமிதாஸ்) பந்தம் இன்னொரு கிளையாகவும் திரைக்கதையில் விரிகிறது.
அவையனைத்தும் ஒன்று சேரும்போது, ஒரு எளிய கதை வெவ்வேறு திசைகளில் இருந்து அணுகப்பட்டிருப்பதை நாம் புரிந்து கொள்கிறோம். அந்தக் கதை சொல்லலே, இயக்குனர் நிதிலன் சாமிநாதனின் படைப்பாக்கத்தைப் பாராட்ட வைக்கிறது.
ஏன் இந்த வன்முறை?
விஜய் சேதுபதி இதில் இரண்டுவிதமான தோற்றங்களில் வந்திருக்கிறார். ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘விக்ரம் வேதா’ உள்ளிட்ட சில படங்களில் ஒரு தனி பாணியை அவர் வெளிப்படுத்தியிருப்பார்.
அதனைப் பயன்படுத்தி, இதன் முன்பாதியில் விஜய் சேதுபதியைக் காட்டியிருக்கிறார் இயக்குனர். அது தியேட்டரில் வெடிச்சிரிப்பை உண்டுபண்ணுகிறது. ஆனால், இடைவேளையில் வரும் சண்டைக்காட்சி அவர்களை ‘கப்சிப்’ என்றாக்குகிறது.
அதன்பிறகு, பின்பாதி முழுக்க நாம் ஒருவித மிரட்சியுடனேயே திரையை நோக்குகிறோம். அதுவே ‘மகாராஜா’வின் யுஎஸ்பி.
சஜனா நமிதாஸ் உடன் இரண்டொரு காட்சிகளில் தோன்றுகிறார் மமிதா மோகன்தாஸ். அவர் வரும் காட்சிகள் அதிகமில்லை என்றபோதும், ஒரு பாத்திரமாகத் தென்படுகிறார்.
அபிராமி இதில் அனுராக்கின் மனைவியாக வருகிறார். அவருக்கும் அதிகக் காட்சிகள் இல்லை. விஜய் சேதுபதியின் மனைவியாக நடித்துள்ள திவ்யபாரதியோ ஒரே ஒரு காட்சியில்தான் வருகிறார்.
அதிகக் காட்சிகள் இல்லை என்றபோதிலும், திரையில் இவர்களை ஒப்புக்குக் காட்டாமல் வலுவான பாத்திரங்களாகப் படைத்திருக்கிறார் இயக்குனர்.
அனுராக் காஷ்யப் இதில் அமைதியை வெளிப்படுத்தும் வில்லனாக வருகிறார். ’பாய்ஸ்’ மணிகண்டனுக்கு இதில் ஆர்ப்பாட்டமான பாத்திரம். அவர் அதனை நன்றாகவே வெளிப்படுத்தியிருக்கிறார். வினோத் சாகரும் கூட வெகுநாட்களுக்குப் பிறகு இதில் வில்லத்தனத்தைக் காட்டியிருக்கிறார்.
நட்டி, அருள்தாஸ், முனீஸ்காந்த், சிங்கம்புலி உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர். அவர்களது ‘ஒன்லைனர்கள்’ ஆங்காங்கே நம்மைச் சிரிக்க வைக்கின்றன. இவர்கள் தவிர்த்து ’குரங்கு பொம்மை’யில் தலைகாட்டிய பாரதிராஜா, பி.எல்.தேனப்பன் மற்றும் இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி, கல்கி, பிரதீப் விஜயன் உள்ளிட்டோரும் இதில் இருக்கின்றனர்.
இருண்மை மிக்க ஒரு வண்ணம் திரையில் தெரியும் வண்ணம், டிஐயை மனதில் வைத்து ஒளிப்பதிவைக் கையாண்டிருக்கிறார் தினேஷ் புருஷோத்தமன்.
’செட்’ என்று தெரிந்தபோதும், நாம் திரையில் இருந்து விலகாத அளவுக்குப் படத்தில் காவல்நிலையம், நாயகன் வீடு போன்றவற்றை வடிவமைத்திருக்கிறது தயாரிப்பு வடிவமைப்பாளர் வி.செல்வகுமாரின் குழு.
’நான் லீனியர்’ முறையில் நகரும் திரைக்கதையைக் கொஞ்சமும் குழப்பம் இல்லாமல் திரையில் சொல்லியிருக்கிறார் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ்.
இசையமைப்பாளர் அஜனீஸ் லோக்நாத்தின் பின்னணி இசை ‘டெம்ப்ட்’ ஏற்றுகிறது. குறிப்பாக இடைவேளை சண்டைக்காட்சி மற்றும் பின்பாதி ‘த்ரில்’ தருணங்களில் அவர் புகுந்து விளையாடியிருக்கிறார்.
இன்னும் ஆடை வடிவமைப்பு, ஒப்பனை, விஎஃப்எக்ஸ், ஒலி வடிவமைப்பு என்று சிலாகிப்பதற்குப் பல தொழில்நுட்ப அம்சங்கள் இதிலுண்டு.
குறிப்பாக, ஸ்டண்ட் கொரியோகிராஃபர் அனல் அரசுவின் சண்டைக்காட்சிகள் நம்மை மிரட்சியடைய வைக்கின்றன. விஜய் சேதுபதியின் பாத்திரம் எந்தளவுக்கு ‘ஹீரோயிசம்’ கொண்டது என்பதை இயக்குனர் முன்னரே உணர்த்திவிடுவதால், அதனை அடிக்கோடிடும் வகையில் இடைவேளை சண்டைக்காட்சியை அவர் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது.
என்ன, ’வன்முறை தான் கொஞ்சம் ஓவர்’ என்று சொல்லும் அளவுக்கு அக்காட்சிகள் இருக்கின்றன.
விஜய் சேதுபதியே பல பேட்டிகளில் ‘இது ஒரு பழிக்குப் பழி கதைதான்’ என்று சொல்லியிருக்கிறார். அதனால், சண்டைக்காட்சிகளில் ரத்தம் தெறிப்பதை இயக்குனரோ, படக்குழுவினரோ நியாயப்படுத்தலாம்.
அதையும் மீறி, அக்காட்சிகள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன என்பதே நிஜம்.
வேறுபட்ட காட்சியமைப்பு!
‘மகாராஜா’ ஒரு வழக்கமான கமர்ஷியல் ஆக்ஷன் திரைப்படம். ஆனால், நாம் அப்படி உணர முடியாத அளவுக்கு ஒரு திரைக்கதையைத் தந்திருக்கிறார் இயக்குனர் நிதிலன் சாமிநாதன்.
இந்தக் கதையில் ‘லட்சுமி’யாக ஒரு குப்பைத்தொட்டியைக் காட்டுகிறார். திரைக்கதையின் வெவ்வேறு இடங்களில் அந்த குப்பைத்தொட்டி இடம்பெற்றிருக்கும்.
அதன் வழியே, நாமாகச் சில யூகங்களை மனதுக்குள் கிளறுவோம். அவற்றில் இருந்து விடுபட்டு, ‘நான் லீனியர்’ முறையில் திரைக்கதை நகரும்போது நமக்குள் ஒரு ஆச்சர்யம் முளைக்கும். அதுவே நிதிலன் சாமிநாதனின் சிறப்பம்சம்.
படத்தின் இறுதி வரை அந்த லட்சுமி திரைக்கதையோடே பயணிக்கிறது. ‘குரங்கு பொம்மை’யில் அப்படி ஒரு ‘பேக்’கை காட்டியிருப்பார்.
இது போன்ற கதாபாத்திர ஆக்கத்தைச் சிறப்பானதொரு திரைக்கதையில் மட்டுமே காண முடியும். அதனாலேயே, அவர் வடிவமைத்த காட்சிகள் ‘கிளாஸ்’ ஆக இருந்தாலும் ‘மாஸ்’ இயக்குனர்களும் பாராட்டும்படியானதொரு படத்தைத் தந்திருக்கிறார்.
இந்தப் படத்தில் பெண்கள் சிலர் பாலியல் அத்துமீறலுக்கு ஆளாக்கப்படுவதாகக் காட்சிகள் இருக்கின்றன. அவற்றை திரையில் ‘ஆபாசமாக’ காட்டாமல் தவிர்த்திருக்கிறார் நிதிலன் சாமிநாதன்.
லாஜிக் மீறல்கள் இந்தப் படத்தில் நிறைய இருக்கின்றன. கிளைமேக்ஸ் காட்சி நெருங்கும் வேளையில் நம்மால் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.
ஆனால், அவற்றையெல்லாம் புறந்தள்ளிவிட்டு நம்மால் கிளைமேக்ஸ் உடன் எளிதாக ஒன்ற முடியும். அதற்குக் காரணம், சாதாரண மனிதர்களின் மனநிலையில் இந்தக் கதை அணுகப்பட்டிருக்கும் விதம். அதுவே ‘மகாராஜா’வை நிச்சயம் வெற்றி பெற வைக்கும்!
- உதயசங்கரன் பாடகலிங்கம்
#மகாராஜா_விமர்சனம் #நட்டி #அருள்தாஸ் #முனீஸ்காந்த் #சிங்கம்புலி #விஜய்_சேதுபதி #அபிராமி #திவ்யபாரதி #இயக்குனர்_நிதிலன்_சாமிநாதன் #maharaja_movie_review #natty #aruldoss #munishkanth #singampuli #vijay_sethupathi #abirami #divya_bharathi #director_nithilan_swaminathan