நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பு இரு மாநில ஆளுநர் பொறுப்பை தமிழிசை சௌந்தர்ராஜன் தூக்கி எறிந்து தென்சென்னை பாஜக வேட்பாளராக போட்டியிட்டதிலிருந்தே அவர் மறுபடியும் பரபரப்புக்கு உரிய செய்திகளின் மையமாகிவிட்டார்.
அவருடைய பேச்சுக்கள் ஊடகங்களுக்கு ருசியான தீனியாகவே தொடர்ந்து இருந்துகொண்டே இருந்தது.
தேர்தல் நடந்து முடிந்தபிறகு அதிமுக முன்னாள் அமைச்சரான வேலுமணியின் கருத்துக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்திராஜன், “பாஜக – அதிமுகவுடன் கூட்டணியில் சேர்ந்திருந்தால் எப்படி இருக்கும்” என்பது குறித்து தன்னுடைய கருத்தைப் பதிவு செய்தார்.
உடனே அந்தக் கருத்து தமிழக பாஜகவின் தலைவரான அண்ணாமலைக்கு எதிரான கருத்தாக ஊடகங்களால் விமர்சிக்கப்பட்டது.
இரு மாநில ஆளுநராக பதவி வகித்தபோது, வெளிப்படுத்தாத சற்றே சுதந்திரமான கருத்துக்களை அவர், பொதுவெளியில் முன் வைத்தது பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.
இந்நிலையில்தான் ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பொறுப்பேற்கும் விழாவில் கலந்து கொண்டார் தமிழிசை சௌந்திர்ராஜன்.
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சரான அமித் ஷா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்ட அந்த விழாவில், மேடையில் அமித் ஷாவும் தமிழிசையும் பேசிக் கொண்ட விதம் மறுபடியும் தமிழகத்து ஊடகங்களில் பரபரப்புக்குரிய செய்தியானது.
திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட பல கட்சிகளும் குறிப்பிட்ட சாதி சங்கமும் கூட தமிழிசைக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்கள்.
இந்த நிலையில், ஆந்திராவிலிருந்து சென்னைக்குத் திரும்பிய தமிழிசையிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு எந்தவிதமான பதிலையும் தமிழிசை அளிக்காமல் ஒரு மெல்லிய புன்னகையுடன் அதைக் கடந்து போனார்.
இந்த விவாதங்கள் எல்லாம் நடந்து முடிந்த சில நாட்களான நிலையில் தற்போது, ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார் தமிழிசை.
‘மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு முதன்முறையாக ஆந்திராவில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தேன். அப்போது, தேர்தலுக்குப் பிந்தைய தொடர் நடவடிக்கைகள், எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து கேட்பதற்காகவே என்னை அழைத்தார். நானும் அது தொடர்பாக அவரிடம் விரிவாக எடுத்துக் கூறினேன்.
அவர் அந்த நேரத்தில் அரசியல் மற்றும் தொகுதிப் பணிகளை தீவிரமாக மேற்கொள்ள அறிவுரை வழங்கியது உத்வேகம் அளிப்பதாக இருந்தது. இதன் மூலம் தேவையற்ற யூகங்களை தெளிவுபடுத்தியுள்ளேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
அமித்ஷா தமிழிசை சந்திப்புக் குறித்த தன்னுடைய நிலையை சமூகவலைதளங்கள் மூலம் விளக்கியிருக்கிறார் தமிழிசை. ஆனால், அமித் ஷா தரப்பில் இது குறித்த எந்த எதிர்வினையும் இதுவரையில் இல்லை.
தமிழக பாஜக தலைமை விஷயத்தில் அகில இந்தியத் தலைமை எண்ண முடிவெடுக்கப் போகிறது என்பதைப் பொறுத்தே இனி தமிழக பாஜகவின் நகர்வுகளைத் தீர்மானிக்க முடியும்.