அண்ணாமலை வழியைப் பின்பற்றுகிறாரா செல்வப் பெருந்தகை?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்த வந்த பிறகு, தேசியக் கட்சிகளின் முடிவில் சில மாற்றங்கள் தென்படுகின்றன.

குறிப்பாக தமிழ்நாட்டில் பாஜக தரப்பில் 11.24 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தாலும் கூட, “அதிமுகவுடன் கூட்டணி வைத்திருந்திருக்கலாம்” என்கின்ற பேச்சு பாஜகவிற்கு உள்ளேயே கேட்க ஆரம்பித்துவிட்டது.

முன்னாள் ஆளுநரான தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட சில தலைவர்கள் அந்தக் குரலை முன் வைத்திருக்கிறார்கள்.

அதிமுகவிலும் இதேமாதிரி பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் இவ்வளவு எண்ணிக்கையிலான தொகுதிகளில் நாம் வெற்றி பெற்றிருக்கலாம் என்ற கூட்டணிக் கணக்குகள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன.

இதில் முன்னாள் அமைச்சர்களிலிருந்து பலர் இதேவிதமான பார்வையைத் தேர்தல் முடிந்த பிறகு பரிசீலிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

இதற்கு எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட சில பேர் திட்டவட்டமாக பாஜகவுடன் கூட்டணி வேண்டாம் என்று முடிவு எடுத்திருந்தாலும் கூட, அத்தகைய கூட்டணிப் பேச்சுகள் இன்றுவரை அலையடித்துக் கொண்டிருக்கின்றன.

அதேசமயம் திமுக கூட்டணியைப் பொருத்தவரைக்கும் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அந்தக் கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்தாலும் கூட, அந்த கூட்டணியிலும் தேர்தல் முடிவு வெளிவந்தபிறகு சலசலப்பு உருவாகி இருப்பது வியப்புதான்.

அண்மையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை சென்னையில் நடந்த காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், “இன்னும் எவ்வளவு காலத்திற்கு இன்னொருக் கட்சியை நாம் சார்ந்திருப்பது” என்று பேசி இருக்கிறார்.

அதாவது திமுகவுடன் கூட்டணி அமைத்திருப்பதைப் பற்றிய மறுபரிசீலனை தேவை என்கிற விதத்தில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது.

அதே கூட்டத்தில் பேசிய முன்னாள் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஆன ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “நாம் 40 தொகுதிகளையும் வெற்றிபெறக் காரணம் திமுகவும் தமிழ்நாடு முதல்வரான மு.க.ஸ்டாலினும் தான்.

நமக்கு ஆசை இருக்கலாம், பேராசை இருக்கக் கூடாது. இதற்கு முன்பு தனித்துப் போட்டியிட்டு கன்னியாகுமரியைத் தவிர மற்ற இடங்களில் டெபாசிட் இழந்ததைப் பற்றியெல்லாம் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்” என்றிருக்கிறார்.

எப்படியோ காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகை பேசியிருப்பது, ஊடகங்களில் பேசு பொருளாக மாறி இருக்கிறது.

இவ்வளவுக்கும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வெற்றியடைவதற்கு திமுக உதவி இருக்கின்றது.

தற்போது, அடுத்து விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் நெருங்கியிருக்கிற நிலையில், செல்வப் பெருந்தகையின் இத்தகைய பேச்சு அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தில் செல்வப்பெருந்தகை திமுகவுடன் கூட்டணிப் பற்றிய ஒரு மறுபரிசீலனையை வலியுறுத்துகிற வகையிலான ஒரு பேச்சை முன்வைக்க காரணம் என்ன?

தேசிய அளவில் அவருக்கு வந்த அழுத்தம் காரணமாக, இத்தகைய பேச்சை அவர் முன் வைக்கிறாரா? அல்லது அவருடைய பேச்சு தன்னிச்சையானதா? என்று அதுவும் பாஜக தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக வாக்கு எண்ணிக்கை அதிகரித்த நிலையில் வந்திருக்கும் நிலையில், செல்வப்பெருந்தகையின் இத்தகைய பேச்சு அரசியலைப் பொறுத்தவரை வினோதமாகவும் இருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, அதிமுகவைத் தங்களுடைய கூட்டணியிலிருந்து விலக்கி வைப்பதற்கான ஒரு பேச்சை எப்படி தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை முன்வைத்தாரோ அதேமாதிரி, திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதற்கான ஒத்திகையை செல்வப் பெருந்தகை முன்னெடுக்கிறாரோ என்ற சந்தேகமும் பலருக்கு ஏற்பட்டிருக்கிறது. 

ஆனால், இத்தகைய பேச்சுக்கள் எப்படிப்பட்ட அரசியல் விளைவை உருவாக்கும்?

இவ்வளவுக்கும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய அளவில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரச்சாரத்தைத் துவக்கியவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். பிறகே மற்றவர்கள் அது குறித்து பேச ஆரம்பித்தார்கள். இது கடந்த கால வரலாறு.

நடந்து முடிந்த தேர்தலில் அப்படிப்பட்ட எந்த முயற்சியும் நடக்கவில்லை என்பது மட்டுமல்ல, தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலினிடம் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளிவந்தபோது, பிரதமர் பதவி குறித்து அவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, அவர் சொன்ன பதில், “கலைஞரைப் போலவே நானும் சொல்கிறேன். என்னுடைய உயரம் எனக்குத் தெரியும்” என்பதுதான்.

அப்படி  தன்னுடைய உயரத்தை திமுக சரிவர உணர்ந்து இன்றுவரை தன்னுடைய சக கூட்டணிக் கட்சிகளுக்கு மதிப்பளித்து அந்தக் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து, அவற்றிற்காக பிரச்சாரம் செய்து உழைத்து வெற்றியும் பெற வைத்திருக்கிறார். இந்தச் சூழலில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரான செல்வப்பெருந்தகையின் பேச்சு, இனி எத்தகைய விளைவுகளை உருவாக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

– யூகி

annamalaibjpcongressdmkepsselvaperunthahaitn congress leaderஅண்ணாமலைகாங்கிரஸ்செல்வப் பெருந்தகைராகுல்காந்தி
Comments (0)
Add Comment