வாசிப்பின் ருசி:
“இந்த நல் உணவைத் தந்த நம் இறைவனை வணங்குவோம்” என்று காலையில் அலுமினியத் தட்டும் தம்ளருமாக உட்கார்ந்துகொண்டு, கோதுமை உப்புமாவுக்கும் மக்காச்சோளக் கஞ்சிக்கும் எதிர்பார்த்துப் பாடுகிற ஒரு தாங்க முடியாத காட்சி தெரிந்தது.
அனாதைகளை மேலும் மேலும் அனாதைப்படுத்துகிற அந்தப் பாடலை இவன் வாசிப்பில் உடனடியாக உணர்ந்த பையனின் உயிரும் ஜீவனுமற்ற முகத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.
ஞானப்பனுக்கு வேறு எந்த கிறிஸ்தவ கீதங்களும் நினைவுக்கு வரவில்லை. எல்லா கிறிஸ்தவ கீதங்களும் ஒரே ராக வடிவுதான் என்ற நினைப்பை அவனுக்கு உண்டாக்கின.
“எல்லாம் ஏசுவே, எனக்கெல்லாம் ஏசுவே” பாடலின் முதலிரு வரிகளின் தடத்தையே மீண்டும் மீண்டும் வாசித்தான். பையன்கள் அடுத்த வரிகளைப் பாடினபோது அவனுக்குச் சிலிர்த்தது.
அந்த ஆர்பனேஜின் அத்தனை வேப்பம்பூக்களும் பாடுவது போல, வரிசையாக டவுனுக்குள்ளிருக்கிற சர்சுக்குப்போய் வருகிறவர்களின் புழுதிக் கால்களின் பின்னணிபோல –
பால் மாவு டப்பாக்களில் தண்ணீர் மொண்டு மொண்டு வரிசையாகத் தோட்டவேலை செய்கிறவர்கள் பாடுவதுபோல-
வாரத்துக்கு ஒரு நாள் வருகிற கிழட்டு நாவிதனுக்குத் தன் பிடரியைக் குனிந்து, முகம் தெரியா அம்மாவின் முகம் நினைத்து அழுதுகொண்டிருக்கிற பையனின் சோகம்போல –
எந்தச் சத்துக்குறைவாலோ ‘ஒட்டுவாரொட்டி’யாக எல்லாப் பையன்கள் கைகளிலும் வருகிற அழுகுணிச் சிரங்கிற்கான பிரார்த்தனைபோல –
கிணற்றடியில் உப்புநீரை இறைத்து இறைத்து ட்ரவுசரைக் கழற்றி வைத்துவிட்டு அம்மணமாகக் குளிக்கிற முகங்களில் எழுதப்பட்டிருக்கிற அழுத்தமான நிராதரவின் குரல்போல –
இரண்டு பைசா நாணயம் ஒன்று பள்ளிக்கூடத்துக் கிணற்றில் விழுந்துவிட, அசுரத்தனமாகத் தண்ணீரை இறைத்து இறைத்து ஏமாந்து கொண்டிருந்த சிறுவர்களின் பம்பரக்கனவுகள் போல…
ஞானப்பன் மேலே வாசிக்க ஓடாமல் நிமிர்ந்தபோது, டெய்ஸி வாத்திச்சி வாசலில் நின்று கொண்டிருந்தாள். பையன்கள் கலைந்து நகர்ந்தார்கள். இவனின் வாசிப்பைப் பாராட்டினாள். வாசலில் கையூன்றிச் சிரித்தாள்.
– சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வண்ணதாசனின் ‘கலைக்க முடியாத ஒப்பனைகள்’ நூலில் இடம்பெற்றிருக்கும் ‘தனுமை’ சிறுகதையிலிருந்து ஒரு பகுதி.