கால்பந்தாட்டத்தைப் பற்றி எத்தனையோ பேர் எத்தனையோ விதமான பொன்மொழிகளை அள்ளி இறைத்திருக்கிறார்கள்.
‘கால்பந்து என்பது ஒரு கவிதை. உங்கள் ஆன்மாவிலும், இதயத்திலும் அதை நீங்கள் எழுதலாம். ஆனால் அந்த கவிதையை நீங்கள் கால்களால்தான் சொல்லியாக வேண்டும்’ என்பது கிறிஸ் காஸ்டிலோ சொன்ன பொன்மொழி.
‘கால்பந்தாட்டம் என்பது மக்கள் திரளுக்கான ஒரு பாலே நடனம்’ இப்படிச் சொன்னவர் திமித்ரி சாஸ்டாகோவிச்.
‘சிறப்பாக ஆடினால் இந்த விளையாட்டு பந்துடன் ஆடும் ஒருவகை நடனம்’ என்று ஒரு பொன்மொழியை உதிர்த்தவர் எடுவர்டோ காலியானோ (Eduardo Galeano)
‘கால்பந்தாட்டம் என்பது இசைக்கலைஞர் பாக் போன்றதோ, புத்த மதத்தைப் போன்றதோ இல்லை. அது மதத்தை விட ஆழமாக உணரப்படக்கூடியது. மக்களின் சமூக இழையில் கால்பந்து ஒரு பகுதி. அது பாரம்பரியத்தின் ஒரு கருவூலம்’ என்று சொன்னவர் பிராங்கிளின் ஃபோயர்.
கொனீஃபா என்ற அமைப்பு தற்போது அங்கீகரிக்கப்படாத நாடுகளின், அதாவது நாளை உலகப் பந்தில் உருவாகப் போகும் நாடுகளின் அணிகளுக்கான, மகளிர் உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டி ஒன்றை நடத்தி வருகிறது.
நார்வே நாட்டின் போடோ நகரில் நடக்கும் இந்தப் போட்டியில் மொத்தம் மூன்றே அணிகள்தான் பங்கேற்று ஆடி வருகின்றன. அதில் தமிழ் ஈழ மகளிர் அணியும் ஒன்று.
போட்டியில் பங்கேற்று ஆடி வரும் அணிகளில் ஒன்று செக்கிலி. ஐரோப்பிய நாடான ருமேனியாவின் நட்டநடுவே, அண்டைநாடான ஹங்கேரியின் மேக்யார் இனத்தின் துணைக் குழுவைச் சேர்ந்த மக்கள் செறிந்து வாழும் பகுதி செக்கிலி.
ஹங்கேரி நாட்டவர்கள் கால்பந்தாட்டத்தில் ஒருகாலத்தில் அசகாய சூரர்கள். கால்பந்தாட்டத்தில் விந்தைகள் புரிந்ததால், ‘மேஜிக்கல் மேக்யார்’ என்பது அவர்களது அந்தநாள் செல்லப்பெயர்.
பெரங்க் புஸ்கஸ் போன்ற மிகப்பெரிய கால்பந்தாட்ட நட்சத்திரங்கள் வாழ்ந்த நாடு ஹங்கேரி.
அதுபோல ருமேனியாவும் கால்பந்தாட்டத்தில் குறைந்த நாடு அல்ல. ‘கார்பேத்தியன் பகுதியின் மாரடோனா’ என புகழப்பட்ட ஜார்ஜ் ஹகியின் நாடு அது.
ஆக, இதுபோன்ற புகழ்பொதிந்த ஒரு பகுதியில் இருந்து வந்திருக்கும் செக்கிலி அணியுடன் தமிழ் ஈழ அணி சிறப்பாகக் களம் கண்டு, ஒரு வெற்றி, ஒரு சமநிலையை அடைந்திருப்பது மிகச் சிறப்பானது.
இதுபோக நார்வே, ஸ்வீடன், ஃபின்லாந்து, ரஷியா போன்ற நான்கு நாடுகளின் நடுவே வாழும் சாப்மி இன மக்களின் மகளிர் கால்பந்தாட்ட அணியும் இந்த உலகக்கோப்பைப் போட்டியில் பங்கேற்று வருகிறது.
உலக உருண்டை என்பது ஒருவிதமான கால்பந்துதான்.
ஆகவே, உதைக்கிற உதையில் உலகம் உங்கள் முன் உருண்டு ஓடட்டும் பிள்ளைகளே!
வையம் தமிழரின் வசமாகட்டும். வெற்றி விரைந்து வந்து கதவைத் தட்டட்டும்.
– நன்றி: மோகன ரூபன் முகநூல் பதிவு