பிரதமர் நரேந்திர மோடி தனது முந்தைய அமைச்சரவையில் இருந்த முக்கிய அமைச்சர்களின் துறைகளை மாற்றவில்லை. கூட்டணிக் கட்சிகளின் நெருக்குதலுக்கு அவர் அடி பணியவில்லை.
குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடியுடன் 71 அமைச்சர்களும் பதவியேற்றனர். இதில் 30 பேர் கேபினட் அமைச்சர்கள். 5 பேர் தனிப்பொறுப்புடன் கூடிய இணை இணைச்சர்கள். 36 பேர் இணை அமைச்சர்கள்.
இலாக்கா விவரம்:
அவர்களுக்கான இலாகாக்கள் நேற்று ஒதுக்கீடு செய்யப்பட்டன. பிரதமருக்கு அடுத்தபடியாக நான்கு பிரதான துறைகள் உள்ளன.
அவை, உள்துறை, ராணுவம், நிதி மற்றும் வெளியுறவு. அந்த நான்கு துறைகளும், கடந்த முறை பதவி வகித்த அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் ஆகியோருக்கு மீண்டும் அளிக்கப்பட்டுள்ளன.
பிரதமர் மோடியிடம் பணியாளர் நலன், பணியாளர் குறைதீர்வு, ஓய்வூதியம், அணுசக்தி, விண்வெளி துறைகள் உள்ளன.
பதவியேற்பு விழாவின்போது பிரதமர் மோடிக்கு அடுத்து ராஜ்நாத் சிங் கேபினட் அமைச்சராக பதவியேற்றார். ஏற்கெனவே வகித்த பாதுகாப்புத் துறை அவருக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது.
உள்துறை அமைச்சராக இருந்த அமித்ஷாவுக்கு மீண்டும் உள்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் நிதின் கட்கரி சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு மீண்டும் அதே துறை வழங்கப்பட்டுள்ளது.
பாஜக தலைவர் ஜே.பி.நட்டா அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு சுகாதாரம், குடும்ப நலத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேச முன்னாள் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு, வேளாண், விவசாயிகள் நலம், ஊரக வளர்ச்சித் துறை வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் நிதித்துறை அமைச்சராக பதவி வகித்த நிர்மலா சீதாராமனுக்கு மீண்டும் அதே துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஜெய்சங்கருக்கும் மீண்டும் வெளியுறவுத் துறை வழங்கப்பட்டுள்ளது.
அரியானா முன்னாள் முதலமைச்சர் மனோகர் லால் கட்டாருக்கு மின்சாரம், வீட்டு வசதி, நகர்ப்புற மேம்பாட்டுத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பியூஷ் கோயலுக்கு தொழில், வணிகத் துறை வழங்கப்பட்டுள்ளது.
தர்மேந்திர பிரதானுக்கு மீண்டும் கல்வித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில் ரயில்வே அமைச்சராக இருந்த அஸ்வினி வைஷ்ணவுக்கு மீண்டும் அதே துறை வழங்கப்பட்டுள்ளது.
பிற துறைகள்
கிரிராஜ் சிங் – ஜவுளித் துறை
ஜோதிர் ஆதித்ய சிந்தியா – தொலைத் தொடர்பு
அன்னபூர்ணா தேவி – மகளிர் துறை
கிரண் ரிஜுஜு – நாடாளுமன்ற விவகாரம்
பூபேந்திர யாதவ் – சுற்றுச்சூழல்
வீரேந்திர குமார் – சமூகநீதி
ஜோயல் ஓரம் – பழங்குடியினர் நலம்
பிரகலாத் ஜோஷி – நுகர்வோர் விவகாரம்
கிஷன் ரெட்டி – நிலக்கரி, சுரங்கத் துறை
சர்வானந்த சோனோவால் – கப்பல்போக்குவரத்து
எல்.முருகனுக்கு செய்தித் துறை:
தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு தகவல், செய்தி ஒலிபரப்பு, நாடாளுமன்ற விவகாரத் துறை வழங்கப்பட்டுள்ளது.
கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசத்தைச் சேர்ந்த ராம்மோகன் நாயுடுவுக்கு விமான போக்குவரத்துத் துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
லோக் ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பாஸ்வானுக்கு உணவுப் பதப்படுத்துதல் துறை வழங்கப்பட்டுள்ளது.
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எச்.டி.குமாரசாமிக்கு கனரக தொழில், உருக்குத் துறை வழங்கப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம் சார்பில் ரயில்வே துறை கேட்கப்பட்டது. ஆனால் அந்தக் கட்சிக்கு ரயில்வே துறை ஒதுக்கப்படவில்லை.
– மு.மாடக்கண்ணு