உதாரணமான தமிழ் சினிமா: வைரலாகும் எலான் மஸ்க் பதிவு!

தமிழ் சினிமா மீது காதல் கொண்டு பல தயாரிப்பாளர்கள் திரைப்படம் எடுக்க வருகிறார்கள். சிலர் இருக்கும் பணத்திற்கு ஏற்றபடி திரைப்பட தயாரிப்பில் இறங்கி எடுக்கும் படங்கள் ரசிகர்களிடம் சென்று சேராமல் போய் விடுவது உண்டு.

அப்படி எடுக்கப்பட்ட படங்களில் தப்பாட்டம் என்ற படமும் ஒன்று. கடந்த ஆண்டு வெளியாகி இந்தப் படத்தை ரசிகர்களும் மறந்து விட்டார்கள்.

இந்த நிலையில்தான் மீண்டும் அந்தப் படத்தை உலகம் முழுவதும் நினைவுபடுத்தும் வகையில் ஒரு வேலையை பார்த்திருக்கிறார் எலான் மஸ்க்.

உலக கோடீஸ்வரரான இவர் புத்திசாலிகள் எப்படி இருப்பார்கள் என்பதற்கு உதாரணமாக தமிழ்த் திரைப்படமான தப்பாட்டம் என்ற படத்தின் போட்டோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

விஞ்ஞானத்தின் முன்னேற்றமான ஏ.ஐ மொபைல் போன்களிலிருந்து எப்பாடியெல்லாம் தகவல்களைத் திருட முடியும் என்பதை இந்தப் படம் விளக்குவதாக இருக்கிறது.

எங்கிருந்தோ அவர் போட்ட இந்த பதிவைப் பார்த்து தமிழ் சினிமா வட்டாரம் இப்போது தப்பாட்டம் படத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறது.

இந்த மகிழ்ச்சியான பதிவைப் பற்றி  தப்பாட்டம் படத்தைத் தயாரித்து நாயகனாக நடித்த துரை சுதாகரிடம் பேசியபோது, காலையில் இருந்தே போன்கால்ஸ் வந்துகொண்டே இருக்கிறது.

தப்பாட்டம் படம் என்னுடைய முதல் படம். சின்ன வயதில் இருந்தே நான் பார்த்து வளர்ந்த பல விஷயங்களை அதில் சொல்லி இருந்தோம்.

குறிப்பாக தப்பாட்டம் என்று சொல்லப்படும் பறை இசைக் கலை பற்றியும் எவரோ சொல்வதை எண்ணி ஒரு பெண் மீது அவதூறு சொல்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் சொன்ன படம் இது.

தப்பாட்டம் படம் எனக்கு நல்ல நண்பர்களை சினிமாவிற்குள்ளும் சினிமாவிற்கு வெளியேயும் கொடுத்தது. அதன் விளைவால் தான் களவாணி 2, பட்டத்து அரசன் உள்ளிட்ட படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இன்று எலான் மாஸ்க் அந்தப் படத்தின் ஸ்டில்லை பகிர்ந்து எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தி உள்ளார். இந்தப் படத்தை எலான் மாஸ்க் பகிர்ந்திருந்தாலும் அந்த பெருமை எல்லாம் அவர் வரைக்கும் இதைக் கொண்டு சேர்த்த ரசிகர்களையே சேரும்.

எலான் மாஸ்க், அவரிடம் கொண்டு சேர்த்த தமிழ் சினிமா ரசிகர்கள், சமூக வலைதளவாசிகள், பத்திரிகைகள் மற்றும் ஊடகங்கள் என அனைவருக்கும் என் நன்றிகள்.

நல்ல படைப்புகளில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறேன். இன்னும் சில கதைகள் கேட்டிருக்கிறேன். உங்கள் ஆதரவு எப்போதும் எனக்கு இருக்கும் என்றார்.

ஷங்கர், மணிரத்னம் போன்றவர்கள் எடுத்த படங்களுக்கு இல்லாத ஒரு பெருமை ஒரு சிறிய திரைப்படத்திற்கு கிடைத்திருப்பது வித்தியாசமான கற்பனைகளுக்கு எப்போதும் வரவேற்பு கிடைக்கும் என்பதையே இந்தப் பதிவு காட்டுகிறது.

– தேனி கண்ணன்

நன்றி: வாவ் தமிழா இணைய இதழ்

Comments (0)
Add Comment