நீண்ட நாட்களுக்குப் பிறகு தமிழ்ப் பதிப்புலகில் புதிய மாறுபட்ட அழகிய எழுத்துருக்களுடன் புதுமையான அட்டைப்பட வடிவமைப்புகளைப் பார்க்கமுடிகிறது. இந்த நவீன மாற்றத்தின் பின்னணியில் இருப்பவர் வடிவமைப்புக் கலைஞர் லார்க் பாஸ்கரன்.
சினிமா டைட்டில்
தமிழ் சினிமாவில் எழுபதுக்கும் அதிகமான படங்களுக்கு டைட்டில் எழுதியவர். படித்தது பார்மஸி. ஆனால் வாழ்க்கைப் பாதையோ அவரை டிசைனிங் உலகுக்கு அழைத்து வந்துவிட்டது. லார்க் என்பது அவரது டிசைன் நிறுவனத்தின் பெயர்.
சென்னைக்கு வந்த ஆரம்ப நாட்களில் ‘சேது’ பட அலுவலகத்தில் ஆபீஸ் பாயாக நுழைந்து, பின்னர் சினிமா உலகம் ஆச்சரியப்படும் கவின்கலை டிசைனராக மாறியவர் லார்க் பாஸ்கரன்.
சொந்த ஊர் சின்ன சேலம். மதுரையில் பார்மஸியில் டிப்ளமோ முடித்தார். படிக்கும்போதே கதைகள் எழுதுவதில் ஆர்வம். சினிமா கனவும் சேர்ந்துகொள்ள அடுத்தது சென்னைதான்.
டிசைனராக மாற்றிய இயக்குநர்
நம்மிடம் பேசிய லார்க் பாஸ்கரன், “சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்தேன். எனக்கு சுபிக்சா நிறுவனத்தில் பார்மஸிஸ்ட் வேலை கிடைத்தது. பகுதி நேரம். மீதி நேரத்தில் உதவி இயக்குநர் வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போது ‘காதலே நிம்மதி’ படத்தை இயக்கிய இந்திரனிடம் உதவி இயக்குநராகச் சேர்வதற்காகச் சென்றேன். என்னை அவர் டிசைனராக மாற்றிவிட்டார்.
என் கையெழுத்தைப் பார்த்துவிட்டு முடிவு செய்தார். ‘நீயே நிஜம்’ என்ற அவரது புதிய படத்திற்கான டைட்டில் எழுதிக் கொடுத்தேன். அதைப் பாராட்டிய அவர், அந்த டைப்போகிராபியை படத்திற்கான தலைப்பாகவே வைத்துக்கொண்டார். படம் வெளிவரவில்லை.
இந்த டிசைனை பார்த்த மலையாள இயக்குநர் யேசுதாஸ், எனக்கு ஒரு வாய்ப்பை வழங்கினார். பாலி என்று ஒரு படத்தை எடுத்தார். இன்று சினிமாவில் பர்ஸ்ட் லுக் என்று பேசப்படுகிறது. அப்போதே அதை என்னை அறியாமல் செய்தேன். இமேஜ் இல்லாமல் வெறும் தலைப்பை மட்டும் அறிமுகம் செய்தோம்.
ஆபீஸ் பாய்
டைட்டில் டிசைனை பார்த்துவிட்டு அவ்வளவு தொலைபேசி அழைப்புகள் வந்தன. இதற்கிடையில் வாய்ப்புகள் தேடியபோது, சேது பட அலுவலகத்தில் ஆபீஸ் பாய் வேலை கிடைத்தது. அங்கு இருந்தபோதுதான் சினிமாவில் பலரின் அறிமுகமும் எனக்கு வாய்த்தது.
டிசைனிங் பக்கம் வந்த பிறகு உதவி இயக்குநர் பணியை விட்டுவிட்டேன். வடிவமைப்பு செய்வதிலேயே நாட்கள் நகர்ந்தன.
இதுவரை யாவரும் நலம், சேவல், ஆறு, பார்த்திபன் கனவு, ஒற்றன், பைவ் ஸ்டார், டும் டும், வாழ்த்துகள், இனிது இனிது என 75 படங்களுக்கும் மேல் வடிவமைப்பாளராக இருந்திருக்கிறேன்.
சென்னையில் எனக்கு எந்த சிரமங்களும் இல்லை. காரணம், என் குடும்பப் பின்னணி. பெரிய பாத்திரக்கடை வைத்திருந்தார் அப்பா. எப்ப பணம் கேட்டாலும் கொடுப்பார்கள். ஆனால் நான் கேட்டதில்லை.
கலைஞர்கள் குடும்பம்
என் மூத்த அண்ணன் நவீன ஓவியர். தம்பி ஒருவர் அனிமேட்டர். இன்னொருவர் மாடலிஸ்ட் என குடும்பமே கலையில் செழித்து வளர்ந்திருந்தது” என்று உற்சாகத்துடன் நினைவுகூர்ந்தார்.
பாஸ்கரன் குடும்பத்திற்குச் சொந்தமான பாத்திரக்கடையில் பாத்திரம் நசுக்குவது, உடுக்கு எடுப்பது எனப் பல வேலைகள் இருக்கும். புதிய பாத்திரங்களுக்குப் பெயரிடுபவர், எம்ஜிஆர் படம் கேட்டால் செய்வார். மயில் போட்டுத் தருவார். சிறு உளி வைத்துக் கொத்தி பல உருவங்களை உருவாக்குவார்.
அவர் விடுப்பு எடுக்கும் நாட்களில் பாத்திரங்களில் பெயர் பொறிக்கும் வேலையை பாஸ்கரன் செய்யத் தொடங்கினார்.
ஒரு கட்டத்தில் நன்றாகவே எழுத வந்தது. அந்த அனுபவம்தான் சினிமாவில் அவருக்கு கைகொடுத்தது. விஷுவல் மீடியாவுக்கான தொடக்கமும் அங்கிருந்தே தொடங்குகிறது.
பெயர் பொறித்தல்
மீண்டும் பேசும் லார்க் பாஸ்கரன், “நம்முடைய முகம் புதிய பாத்திரங்களில் வெளிப்படும். ஒவ்வொரு பாத்திரத்திலும் முகம் மிளிர்வதைப் பார்க்கலாம். வண்ணங்கள் பற்றிய அறிவும், காட்சி அனுபவமும் ஊரிலேயே தொடங்கிவிட்டன என்று சொல்லலாம்.
தொடக்கத்திலிருந்தே, நான் தாளில் வரைந்து பழகவில்லை. டிஜிட்டல் கலைஞராகவே சினிமாவுக்குள் வந்துவிட்டேன். மெளசில் டிராயிங் செய்தேன், எழுதினேன், டிசைன் செய்தேன். தொழில்நுட்பம் பிரச்னையாக இல்லை. இன்று டைப்போகிராபி எழுதுவதில் நான் மிகப்பெரிய அனுபவத்தைப் பெற்றிருக்கிறேன்.
ரிவர்ஸில் எழுதும்போது புதிய வடிவம் கிடைக்கிறது. ஒரு எழுத்துருவை எழுதிவிட்டு வெவ்வேறு ப்ரெஸ்களைப் பயன்படுத்தினால், ஒவ்வொன்றும் புதிய வடிவத்தைத் தரும். அது ஒருவகையில் பெரிய பலமாக இருக்கிறது.
வெள்ளித்திரை
என்னிடம் இயக்குநர், ஒரு லவ் சப்ஜெக்ட் என்று சொல்லிவிடுவார். அதுபற்றி ஒரு கற்பனை செய்வோம். ஆயிரக்கணக்கில் படங்கள் தருவார். அதில் நான் ஒரு படத்தைத் தேர்வு செய்து அழகுபடுத்திக் கொடுப்பேன். சில நேரங்களில் கதைக்கேற்ப போட்டோஷூட்டும் செய்து பார்ப்போம்.
பெரிய டைப்போகிராபியைப் பயன்படுத்தினேன். அதிலேயே சுவரொட்டிகளையும் வித்தியாசமாக டிசைன் செய்திருந்தேன்.
சிலநேரங்களில் குமார், சசி போன்றவர்கள் எனக்கு டிசைன் பணிகளைக் கொடுப்பார்கள். அவர்களைப் பார்த்துத்தான் நாம் வளர்ந்தோம். நான் ஆர்வத்துடன் அவர்களுக்கு டிசைன் செய்துகொடுத்திருக்கிறேன்” என்கிறார்.
சி. மோகன் காட்டிய வழி
எழுத்தாளர் சி. மோகன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது. அன்னம் கதிரைச் சந்திக்கும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. “இவர் நல்லா வடிவமைப்பார். தஞ்சாவூர் வந்தா வரச் சொல்கிறேன்” என்று கதிரிடம் மோகன் அறிமுகம் செய்துவைத்தார்.
பின்னொரு நாளில் வேறு வேலைக்காகத் தஞ்சாவூர் சென்றபோது அன்னம் பதிப்பகம் சென்றார். ஒரே நாளில் 15 நூல்களுக்கான அட்டைப்படம் செய்துகொடுத்தார். அட்டைப்பட வடிவமைப்பு என்று பெயர்கூட போடவில்லை. ஆனால், பதிப்புலகம் அறிந்துகொண்டு அவரை அணுகத் தொடங்கிவிட்டது.
“மீண்டும் படம் இயக்குவது தொடர்பான முயற்சிகளில் இரண்டு ஆண்டுகள் ஈடுபட்டேன். 2020 முதல் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடுகளுக்கு அட்டைகள் டிசைன் செய்யத் தொடங்கினேன். அவர்களுக்கு 90 நூல்களுக்கு அட்டை வடிவமைத்துள்ளேன்.
இயக்குநர் அவதாரம்
இதுவரை 5 கவிதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஒரு நாவல் எழுதிவருகிறேன். நான் திரைப்படம் எடுப்பதற்காக எழுதி, நின்றுபோன கதையைத்தான் நாவலாக எழுதுகிறேன். விரைவில், ஒரு படத்தை இயக்கும் முயற்சியில் இருக்கிறேன்.
பல படங்களுக்கு டிசைன் செய்தபோது கிடைத்த பாராட்டுகளைவிட, இலக்கிய நூல்களின் அட்டைப்பட டிசைன்களுக்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த மகிழ்ச்சி என்னை ஒரு கலைஞனாக உற்சாகம்கொள்ள வைத்திருக்கிறது” என்கிறார் கவின்கலை நிபுணரான லார்க் பாஸ்கரன்.
-எஸ். சாந்தி