இந்தியாவின் மிகப்பெரும் தொழிலதிபரும், பிரபல சினிமா ஸ்டுடியோவான ராமோஜி பிலிம் சிட்டியின் நிறுவனருமான ராமோஜி ராவ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 87.
தமிழ் சினிமாவில் எப்படி ஏ.வி.எம். ஸ்டுடியோ பிரம்மாண்டமாகப் பேசப்படுகிறதோ அதேபோல் தெலுங்கு பட உலகில் சினிமா ஜாம்பவானாகத் திகழ்ந்தவர் ராமோஜி ராவ்.
ஐதராபாத்தின் புறநகரில் ராமோஜி பிலிம்சிட்டி என்னும் உலகிலேயே மிகப்பெரிய சினிமா படப்பிடிப்புத் தளத்தை நிறுவியவர்.
இங்குதான் அனைத்து மொழிப் படங்களும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக மெகா பட்ஜெட் படங்கள் அனைத்து ராமோஜி பிலிம்சிட்டியில் உருவானவையே.
மேலும் பல ஹிட் படங்களும் ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வெற்றி அடைந்தவையே. மேலும் ஈநாடு தினசரி செய்தித்தாள், ஈ டிவி போன்றவற்றின் நிறுவனரும் ராமோஜிராவ் தான்.
இதைத் தவிர மார்க்தர்சி சிட்ஃபண்ட், ரமாதேவி பப்ளிக் ஸ்கூல், பிரியா ஃபுட்ஸ், கலாஞ்சலி, ஹோட்டல் டால்பின் குரூப் போன்ற நிறுவனங்களையும் நிர்வகித்து வந்தார்.
ஆந்திராவின் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள பெடபருப்புடியில் 1936-ல் பிறந்தார் ராமோஜி ராவ்.
இந்நிலையில் கடந்த 5-ம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நானக்ராம்குடாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
கடந்த 2016-ல் பத்திரிக்கை, இலக்கியம், கல்வி போன்றவற்றில் சிறந்த பங்காற்றியதற்காக அவருக்கு பத்மவிபூஷன் விருது வழங்கி கௌரவித்தது மத்திய அரசு.
ராமோஜிராவின் மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட தலைவர்கள் மற்றும் தெலுங்குப் பட உலகம், தமிழ்த்திரையுலகம் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.