இந்தியாவில் அநேகமாக ஒவ்வொரு மாநிலத்திலும், தலித் மக்களின் முன்னேற்றத்துக்காக பாடுபடும் தலைவர்கள் உள்ளனர். அவர்களில் நாடறிந்தவர்கள் என இரண்டு தலித் தலைவர்கள் பேரை சொல்லலாம். ஒருவர், பீகாரின் ராம்விலாஸ் பஸ்வான். அரை டஜனுக்கும் மேற்பட்ட முறை மக்களவைத் தேர்தலில் ஜெயித்தவர்.
பல முறை மத்திய அமைச்சராகவும் இருந்தவர். பஸ்வான் இன்று இல்லையென்றாலும் அவரது லோக் ஜனசக்தி என்ற கட்சி உயிர்ப்புடன் உள்ளது. தலித் மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற ராம்விலாஸ் பஸ்வானால், முதலமைச்சர் பதவியை எட்ட முடியவில்லை.
தலித் தலைவர்களில் முக்கியமான இன்னொருவர் மாயாவதி. உத்தரப்பிரதேசத்தை தலைமையகமாகக் கொண்டு செயல்படும் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர். ஒருமுறை அல்ல, நான்கு முறை உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தவர். ஆனால் இன்று அவரது கட்சி எந்த நிலையில் உள்ளது?
அவரது பகுஜன் சமாஜ் கட்சிக்கு தேசியக் கட்சி எனும் அந்தஸ்து உள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் நாடு முழுவதும், இவரது கட்சி தனித்துப் போட்டியிட்டது. ஒட்டுமொத்தமாக 488 வேட்பாளர்களைக் களம் இறக்கினார் மாயாவதி. பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கூட இவ்வளவு அதிக எண்ணிக்கையில் வேட்பாளர்களை நிறுத்தவில்லை.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளிலும் பகுஜன் சமாஜ் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர். அவர்களில் முஸ்லிம் வேட்பாளர்கள் மட்டும் 35 பேர். வேறு எந்தக் கட்சியும் இத்தனை முஸ்லிம் வேட்பாளர்களுக்கு சீட் அளிக்கவில்லை. அந்த மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிக அளவில் உள்ளனர்.
ஆனால், தேர்தல் முடிவுகள், பகுஜன் சமாஜ் கட்சியின் முகத்தையும் முகவரியையும் ஒருசேர இழக்கச் செய்துவிட்டது. போட்டியிட்ட 488 தொகுதிகளில் ஒரு தொகுதியிலும் அந்தக் கட்சி வெல்லவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக அவரது கட்சியின் செல்வாக்கு சரிந்து கொண்டே வந்தது.
2007-ம் ஆண்டு நடந்த சட்டசபைத் தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி, உத்தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 403 இடங்களில் 206 இடங்களில் வாகை சூடியது. தனித்தே ஆட்சி அமைத்தது. இப்போது அங்குள்ள சட்டசபையில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரே ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே இருக்கிறார்.
புதிதாக அமையப்போகும் மக்களவையில், பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒரு எம்.பி.யும் கிடையாது. ஒரு நேரத்தில் மாயாவதியின் பெயர் பிரதமர் பதவிக்கும் அடிபட்டது குறிப்பிடத்தக்கது.
கே.சந்திரசேகர ராவ்
தொடர்ச்சியாக 10 ஆண்டுகளாக தெலுங்கானா மாநில முதலமைச்சராக இருந்தவர் கே.சந்திரசேகர ராவ். தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்.எஸ்) எனும் கட்சியை ஆரம்பித்து, தெலுங்கானா தனி மாநிலம் உருவாக காரணமாக இருந்தவர்.
தெலுங்கானா மாநிலம் உருவானது முதல் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வரை அதன் முதலமைச்சராக பதவி வகித்தவர்.
பிரதமர் கனவில் மிதந்த சந்திரசேகர ராவ், அதற்கான முன்னோட்டமாக, தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர சமிதி (பி.ஆர்.எஸ்) எனவும் மாற்றினார். ஆனால் கடந்த ஆண்டு கடைசியில் தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபைத் தேர்தலில் பி.ஆர்.எஸ். கட்சி தோற்றுப்போனது. காங்கிரஸ் கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளிலும் பி.ஆர்.எஸ். கட்சி வேட்பாளர்களை நிறுத்தியது. ஆனால் ஒரு தொகுதியிலும் அந்தக் கட்சி ஜெயிக்கவில்லை.
கடந்த மக்களவைத் தேர்தலில் அந்த கட்சி 9 இடங்களில் வெற்றி பெற்று இருந்தது. அதற்கு முந்தைய தேர்தலில் 11 தொகுதிகளில் ஜெயித்தது. இப்போது பூஜ்யம்.
தெலுங்கானாவில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள பி.ஆர்.எஸ். கட்சி ‘வாஷ் அவுட்’ ஆகி இருப்பது, அந்தக் கட்சித் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
– மு.மாடக்கண்ணு