நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து தேர்தல் முடிவுகள் வெளிவந்த நிலையில், ஊடகங்களிடம் இருந்த இரு கேள்விகள்,
1. பாஜக இனி எப்படிச் செயல்படப் போகிறது?
2. காங்கிரஸ் எதிர்கட்சிப் பொறுப்பில் எப்படிச் செயலாற்றப் போகிறது?
முதல் கேள்விக்குப் பதிலாக தற்போது நிதிஷ்குமார், சந்திரபாபு நாயுடு மற்றும் இதர கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்து பிரதமராக ஆகியிருக்கிறார் நரேந்திர மோடி.
அரசியல் சாசனத்தை மதித்து தலைவணங்கி நாட்டு மக்களின் நலனுக்காகத் தொடர்ந்து பாடுபடப் போவதாகக் கூறிய பிரதமர் மோடி,
பாஜகவுக்கு ஏற்பட்ட வாக்குச் சரிவை தான் ஒரு தோல்வியாகக் கருதவில்லை என்றும், தாங்கள் எப்போதும் தோல்வியடைய மாட்டோம் என்றும் கூறியிருக்கிறார்.
ஆக – இந்தத் தேர்தல் முடிவிலிருந்து அவர் கற்றிருக்கும் பாடம் இதுதான்.
காங்கிரஸ் கூட்டணிக்கு வருவோம் – கடந்தத் தேர்தலைவிட காங்கிரசுக்குக் கூடுதலான தொகுதிகள் கிடைத்திருக்கின்றன.
காங்கிரசுடன் கூட்டணி வைத்தக் கட்சிகளும் பலம் பெற்றிருக்கின்றன. கூட்டணி வைத்தக் கட்சிகள் மூலம் காங்கிரசுக்கும் பலம் கிடைத்திருக்கிறது.
ஒருவேளை பாஜக கூட்டணியில் ஏதேனும் பிரச்சனை உருவானால், குறிப்பிட்ட கட்சிகளை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியமைக்க முயலலாம் என்பதும் ஊடகங்களில் பேசப்பட்ட கருத்தாகவே இருந்தது.
ஆனாலும் அதற்கான வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், தற்போதைக்குக் காங்கிரஸ் அடுத்த செய்ய வேண்டியது ஒன்றுதான்.
இந்தியா முழுக்க நடைபயணம் சென்று பல மாநில மக்களை நேரடியாகச் சந்தித்துப் பெற்ற அனுபவம் ராகுல்காந்திக்கு உண்மையாகவே ‘கை’ கொடுத்திருக்கிறது.
மல்லிகார்ஜூன கார்கே போன்றவர்களை தலைமைப் பொறுப்பில் நியமித்தாலும் கூட, அவரும் இன்னொரு மன்மோகன்சிங் தான்.
உடன் இருப்பவர்களால், இயக்கப்படுவராகத் தான் மல்லிகார்ஜூன கார்கேவும் இருந்து கொண்டிருக்கிறார். காங்கிரசுக்குள்ளேயே தலைமைப் பொறுப்பு வகிப்பதில் ஒரு வெளிப்படைத் தன்மை இல்லை.
முன்பு சோனியா காந்தி பிரதமராக ஆவதற்கு வாய்ப்பு கனிந்திருந்த போதும் எதனாலோ அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மன்மோகன் சிங்கைத் தான் முன்னிறுத்தினார். கட்சியில் பின்னிருந்தபடியே தான் இயங்கினார்.
பிரியங்கா காந்தி போன்றவர்கள் அவ்வப்போது காங்கிரசுக்காக பிரச்சாரம் செய்தாலும் முன்னாள் பிரதமர் இந்திராகாந்தியுடன் அவரை ஒப்பிட்டு ஊடகங்கள் எழுதினாலும் கூட அவரை காங்கிரஸ் முன்னிறுத்தவில்லை.
ஒருவேளை காங்கிரசில் குடும்ப வாரிசு அரசியல் நடக்கிறது என்று பாஜக தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
தற்போதும் அதே கதைதான் நீடிக்கிறது. ராகுல்காந்தி காங்கிரசுக்காக கடுமையாக உழைக்கிறார். இந்தியா முழுக்கப் பயணம் செய்திருக்கிறார். கடுமையான விமர்சனத்தையும் முன்வைக்கிறார். ஆனால், தன்னை ஒரு பிரதமர் வேட்பாளராக அவர் வெளிப்படுத்திக் கொள்ளவில்லை.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அவரை பிரதமர் பதவிக்கான வேட்பாளராக முதலில் முன்னிறுத்தியவர் தமிழ்நாடு முதலமைச்சரான மு.க.ஸ்டாலின்தான்.
ஆனால், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளருக்கான இருக்கை காங்கிரஸ் கூட்டணியைப் பொறுத்தவரை காலியாகவே இருந்தது. அந்த இடத்தை ஒற்றுமையோடு நிரப்புவதிலும் இந்தியாக் கூட்டணியிலிருந்த கட்சிகளிடம் ஒன்றிணைந்த பார்வையில்லை என்பது மிகப்பெரும் பலவீனம்.
அப்படி ஒருவேளை பிரதமர் பதவிக்கான வேட்பாளர் இவர்தான் என்று குறிப்பிட்டு இந்தியா கூட்டணி சார்பில் பிரச்சாரம் நடந்திருந்தால், அது இந்தியா கூட்டணிக்கு வலுசேர்த்திருக்கும். தற்போது பெற்றிருப்பதைவிட கூடுதலான எண்ணிக்கையிலான தொகுதிகளையும் பெற முடிந்திருக்கும்.
ஆனால், இது எதுவுமே நடந்து முடிந்த தேர்தலுக்கு முன்பு சுமூகமான முறையில் நடக்கவில்லை. கூட்டணிக்குள் ஒருமித்தக் கருத்து உருவாவதில் ஒரு தயக்கம் நீடித்துக் கொண்டே இருந்தது. தற்போது எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் செயல்பட வேண்டிய தருணம் இது.
கூடுதலான எண்ணிக்கையோடு தங்களை வெற்றிபெற வைத்த வாக்காளப் பெருமக்களுக்கு காங்கிரஸ் செய்யும் கைமாறு என்ன?
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்கின்ற பொறுப்பை தட்டிக் கழிக்காமல் பொறுப்புடன் ஏற்று, மக்கள் நலனுக்கான குரலை நாடாளுமன்றத்தில் எதிரொலிப்பதுதான் எதிர்க்கட்சி செய்ய வேண்டிய முக்கியமான பணி.
அதிலும், ஆதிக்க மனோபாவம் கொண்ட மோடி பிரதமராக நீடித்திருக்கும் நிலையில் எதிர்க்கட்சியின் பங்கு முக்கியமானது. கூடவே, நாட்டின் தேவை சார்ந்து அவசியமானதும் கூட.
இந்தியப் பெருமக்கள் தங்களுக்கு அளித்திருக்கிற வாய்ப்பை சரிவர பயன்படுத்தி பொறுப்புமிக்க எதிர்க்கட்சியாக காங்கிரசும் அதன் கூட்டணிக் கட்சிகளும் மக்கள் நலன் சார்ந்து இயங்கும் பட்சத்தில் அது மீண்டும் ஆளுங்கட்சி ஆவதற்கான வாய்ப்பும் இதே ஜனநாயக கட்டமைப்பில் இருக்கிறது.
இதை காங்கிரசுக்கு சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பிருந்து ஆங்கிலேயரை எதிர்த்த பழமையான வரலாறு உண்டு என்றாலும், தற்போது நிகழ்காலத்தில், அது எப்படி கடமையாற்றப் போகிறது என்பதைத்தான் இந்திய வாக்காளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த எதிர்பார்ப்புகளை காங்கிரஸ் நிறைவேற்ற வேண்டிய தருணம் இது.
– யூகி