நாளை மறுநாள் பதவி ஏற்கிறார் மோடி!

இலாகாக்களை ஒதுக்குவதில் நீடிக்கும் சிக்கல்

கடந்த 2019-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பாஜக தனித்து 303 தொகுதிகளில் வென்று ஆட்சியைப் பிடித்தது. மோடி இரண்டாம் முறையாக பிரதமர் ஆனார். இந்தத் தேர்தலில் 400 + இடங்களில் வெல்வோம் என பாஜக பிரகடனம் செய்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டது. ஆனால் கனவு பலிக்கவில்லை.

இந்த முறை, பாஜக 240 இடங்களை மட்டுமே கைப்பற்றி உள்ளது. ஆட்சி அமைக்க 272 எம்.பி.க்களின் ஆதரவு தேவை எனும் நிலையில், பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 தொகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறது.

பாஜகவின் 14 கூட்டணி கட்சிகளிடம் 53 எம்.பி.க்கள் உள்ளனர். அதிகபட்சமாக, சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியிடம் 16 எம்.பி.க்களும், நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சியிடம் 12 எம்.பி.க்களும் உள்ளனர்.

இந்தக் கட்சிகளுக்கு அடுத்த படியாக, தேசிய ஜனநாயகப் கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சியாக ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சி உள்ளது. அந்த கட்சி 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

முழு முடிவுகளும் வெளியானதை அடுத்து, டெல்லியில் உள்ள பிரதமர் மோடியின் இல்லத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் 5-ம் தேதி நடைபெற்றது. பாஜக கூட்டணி ஆட்சி அமைப்பதற்கான ஆதரவு கடிதங்களை கூட்டணிக் கட்சி தலைவர்கள் வழங்கினர்.

இலாகாக்கள் ஒதுக்குவதில் சிக்கல்

புதிய ஆட்சி அமைப்பதற்கான பணிகள் ஒரு பக்கம் முழு வீச்சில் நடந்து கொண்டிருக்க, இன்னொரு பக்கம், மோடி ஆட்சி அமைக்க ஆதரவு தந்துள்ள சந்திரபாபு நாயுடு, நிதிஷ்குமார் ஆகியோர் முக்கிய இலாகாக்களை கேட்டு நெருக்கடி கொடுத்து வருகிறார்கள்.

பீகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற நிதிஷ்குமாரின் கோரிக்கையை மோடி ஏற்றுக் கொண்டுள்ளார். இதையடுத்து, சந்திரபாபு நாயுடு, ஆந்திராவுக்கும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறார். அமராவதியில் உருவாகும் தலைநகரின் கட்டுமான பணிகளுக்கு, மத்திய அரசு முழு நிதி உதவி அளிக்க வேண்டும் என்பதும் அவரது கோரிக்கை.

இது தவிர மக்களவை சபாநாயகர் பதவியையும் தெலுங்கு தேசம் கட்சி கேட்கிறது. வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது தெலுங்கு தேசம் கட்சியின் பாலயோகி, சபாநாயகராக இருந்ததை, அந்தக் கட்சி சுட்டிக்காட்டி, இந்தக் கோரிக்கையை முன் வைத்துள்ளது. மேலும் தங்கள் கட்சிக்கு 5 அமைச்சர் பதவியையும் அந்தக் கட்சி கோரியுள்ளது.

சபாநாயகர் பதவியை வழங்க முடியாது என பாஜக தலைமை, சந்திரபாபு நாயுடுவிடம் கறாராக சொல்லி விட்டது. அந்தக் கட்சிக்கு 2 கேபினட் அமைச்சர்கள் மற்றும் 2 ராஜாங்க அமைச்சர்கள் பதவியை அளிக்க பாஜக முன் வந்துள்ளது.

நிதிஷ்குமார் 3 கேபினட் அமைச்சர் பதவியை எதிர் பார்க்கிறார். நிதித்துறையையும் கேட்கிறார். ஆனால் உள்துறை, நிதி, ராணுவம் ஆகிய துறைகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்க பாஜக விரும்பவில்லை. இதனால் பேச்சு வார்த்தையில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளதாக டெல்லியில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஞாயிற்றுக்கிழமை பதவி ஏற்பு

இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சி எம்.பி.க்கள் கூட்டம் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சி எம்.பி.க்களும் இதில் பங்கேற்கின்றனர்.

இந்தக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சியின் மக்களவைத் தலைவராக – அதாவது பிரதமராக, மோடி ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை சந்திக்கும் மோடி, ஆதரவு எம்.பி.க்கள் பட்டியலை அவரிடம் வழங்கி, ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்.

நாளை மறுநாள் (09.06.2024) மாலை 6 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பாஜக கூட்டணி அரசு பதவியேற்க உள்ளது.

மூன்றாவது முறை பிரதமராக மோடி பதவியேற்கிறார். சில அமைச்சர்களும் அன்றைய தினம் பதவி ஏற்பார்கள். அமைச்சரவையில் பாஜக மூத்தத் தலைவர்கள் நிதின் கட்கரி, ராஜ்நாத் சிங், பியூஷ் கோயல் உள்ளிட்டோருடன் 40 புதிய முகங்கள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

– மு.மாடக்கண்ணு

amaravathyandrabjpchandrababumodinithishkumarசந்திரபாபு நாயுடுபிரதமர்மோடி
Comments (0)
Add Comment