சசிகாந்த் செந்தில்: ஆட்சிப் பணியிலிருந்து மக்கள் பிரதிநிதி!

தமிழ்நாட்டில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சசிகாந்த் செந்தில்.

திருவள்ளூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பாக களமிறக்கப்பட்ட சசிகாந்த் செந்தில் மொத்தமாக 7,96,956 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவருக்கு பின் பாஜகவைச் சேர்ந்த பொன் வி.பாலகணபதி 2,24,801 வாக்குகளையும், தேமுதிகவின் நல்லதம்பி 2,23,904 வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

திமுக வேட்பாளர்களை விடவும் காங்கிரஸ் வேட்பாளர் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றதால், யார் இந்த சசிகாந்த் செந்தில் என்று தேடத் தொடங்கியுள்ளனர்.

கர்நாடகாவைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தான் சசிகாந்த் செந்தில். பாஜக சார்பாக கர்நாடகா ஐபிஎல் அதிகாரியான அண்ணாமலை தமிழக அரசியல் களமிறக்கப்பட்ட சில காலத்திலேயே, அதே கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் கட்சி ஐஏஎஸ் அதிகாரியை களமிறக்கியது என்றும் சொல்லலாம்.

கர்நாடகா மாநிலத்தின் ராய்ச்சூர், சித்ரதுர்கா உள்ளிட்ட மாவட்ட ஆட்சியராக பணியாற்றிய சசிகாந்த் செந்தில், அதன்பின் பல்வேறு துறைகளிலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அதன்பின் 2019-ல் தனது பணியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலில் இறங்கப் போவதாக அறிவித்தார். எந்தக் கட்சியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொண்டார். அதற்கு முன்பாக சிஏஏ-வுக்கு எதிராக குரல் கொடுத்தவர்.

காங்கிரசில் அவருக்கு சமூக ஊடக பிரிவு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு அளிக்கப்பட்டது. ஆனால் சசிகாந்த் செந்தில் காங்கிரஸ் மேலிடத்திற்கு நெருக்கமானது கர்நாடகா தேர்தலின் போதுதான்.

காங்கிரஸ் கட்சியின் செண்ட்ரல் வார் ரூம் தலைவராக சசிகாந்த் செந்தில் நியமனம் செய்யப்பட்டபோது, கர்நாடகாவில் பாஜக ஆட்சியில் நடந்த முக்கிய பிரச்சனைகளை மக்களிடம் புதிய யுக்தியுடன் கொண்டு சென்றது இவரின் ஐடியா தான்.

போஸ்டரில் க்யூஆர் கோட் அடித்து பாஜக ஆட்சியின் ஊழல்களை மக்கள் மத்தியில் டிஜிட்டல் வாயிலாக எடுத்து சென்றவர் சசிகாந்த் செந்தில்.

அந்த ஃபார்முலா காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய சாதகத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமல்லாமல் சசிகாந்த் செந்திலுக்கு காங்கிரஸ் குடும்பத்துடன் நெருக்கமும் ஏற்பட்டுள்ளது.

இதன்பின் திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட சசிகாந்த் செந்தில் விருப்பம் தெரிவித்துள்ளார். இதனை ஏற்று காங்கிரஸ் கட்சி அவருக்கு சீட் கொடுத்துள்ளது.

காங்கிரஸ் கட்சி வைத்த நம்பிக்கையை சசிகாந்த் செந்திலும் 5 லட்சத்திற்கும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காப்பாற்றியுள்ளார்.

முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை தேர்தலில் தோல்வியடைந்த நிலையில், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியான சசிகாந்த் செந்தில் வென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

– நன்றி : ஒன் இந்தியா இதழ்

congressIAS officer Sasikanth SenthilSasikanth Senthil IASthiruvallur loksabha constiuencyஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில்சசிகாந்த் செந்தில்திருவள்ளூர் லோக்சபா தொகுதி
Comments (0)
Add Comment