இப்போது எனக்கு அகவை நாற்பத்தொன்பது ஆகிறது. இனி வருங்காலங்களில் செய்யவேண்டிய பணிகள் என்று உறுதிபூண்டிருப்பவை பல. அவற்றில் சிலவற்றை என் நண்பர்களிடத்தில் கண்களில் கனவுகள் விரியச் சொல்லியிருக்கிறேன்.
இந்நாளில் அவற்றை அனைவரோடும் பகிர்ந்துகொள்ளலாம் என்று தோன்றுகிறது.
(1). தமிழ் இலக்கணம், மொழியியல், சொல்லாராய்ச்சி சார்ந்து நூறு நூல்களையேனும் எழுத வேண்டும். அவற்றில் பதினைந்து நூல்களைத் தமிழ் அறிவோம் வரிசையில் எழுதிவிட்டேன். மீதமுள்ளவற்றை விரைந்து எழுதத் தொடங்கவேண்டும். அந்நூல்கள் இன்றைய காலத்தின் தேவை.
(2). நடைமுறையில் தமிழை எழுதுவதற்கு மிகச்சிறப்பாய் வழிகாட்டும் நூல்களையும் எழுதவேண்டும். மேலே கூறப்பட்டுள்ள நூல்கள் யாவும் அதற்கு உதவும்தான் என்றாலும் இன்னும் இறங்கி எளிய எழுத்துத் தமிழை உருவாக்கும்பொருட்டு அந்நூல்கள் அமைய வேண்டும்.
(3). இப்படி நூல்களை எழுதிக்கொண்டிருப்பது ஒரு பக்கம் என்றாலும், நேரடியாகக் கற்றுக் கொடுப்பது மிகச்சிறந்த விளைவுகளை உருவாக்குகிறது. என்னதான் எழுத்தில் பயின்றாலும் ஓர் ஆசிரியரிடம் நேரடியாக மொழியைப் பயில்வது மிகவும் வலிமையானது. என்னை நாடி வரும் அனைவர்க்கும் எனக்குத் தெரிந்த தமிழை மீதமில்லாமல் கற்றுக்கொடுத்துவிட வேண்டும் என்றிருக்கிறேன்.
(4). “நீங்கள் எழுதிக் கொண்டேயிருந்தால் எப்படி, அவை சில நூற்றுவரைத்தான் சென்று சேரும், புத்தகங்கள் படித்து மொழியைக் கற்றுத் தேர்ந்துவிடுவார்கள் என்று இராதீர், நீங்கள் விரும்பும் விளைவுகளை உருவாக்க வேண்டுமென்றால் மேடையேறிப் பேசுங்கள், ஓர் அரங்கில் நூற்றுக்கணக்கானோர் முன்னிலையில் உரையாற்றுங்கள், அவர்களிடத்தே விழிப்புணர்வூட்டுங்கள்” என்று நண்பர்கள் வலியுறுத்தினர்.
அதன்பிறகே மேடையேறத் தொடங்கினேன். மேடை வாய்ப்புகளை ஏற்றேன். அவ்வாறே “நேரடியாக மொழியைக் கற்றுக்கொடுங்கள்” என்று பலரும் வலியுறுத்தியதால்தான் அம்முயற்சியிலும் இறங்கினேன்.
(5). பள்ளி மாணாக்கர் மட்டத்தில் தமிழை எளிமையாகக் கற்றுத் தர முன்வருதல்வேண்டும். கூப்பிடு தொலைவில் இறங்கி நிற்கவேண்டும், அவர்களால் அடைய முடியாத உயரத்தில் நான் புழங்கிக் கொண்டிருக்கக்கூடாது என்று உணர்கிறேன். இவரிடம் தமிழ் பயிலவேண்டும் என்று மாணாக்கர் ஒருவர் விரும்பலாம்.
’நம் பிள்ளைகள் இவரிடம் தமிழ் கற்கவேண்டுமே’ என்று பெற்றோர் நினைக்கலாம். அவர்கள் நோக்கு நிறைவேறும் பொருட்டு நான் பள்ளி மாணாக்கர்கட்குத் தமிழைக் கற்பிக்கும் முயற்சிகளை மேற்கொள்வேன்.
(6). அயல்நாடுகளில் வாழ்வு நிலைத்தவர்கள் தமக்கு அடுத்த தலைமுறையினர்க்குத் தமிழைக் கற்றுத்தருவதவதற்கு வேண்டிய, இன்னும் எளிய வழிமுறைகளை, தமிழ் கற்றல்முறைகளை ஆக்குவேன். இவை அனைத்திற்கும் இணையத்தைப் பயன்படுத்தி இயல்வன செய்யவேண்டும் என்றால் தொழினுட்ப நண்பர்களை ஒருங்கிணைப்பேன்.
(7). தமிழ் மொழியில் பிறமொழி கலப்பதற்கு எதிராக என் அனைத்துச் செயல்பாடுகளையும் அமைப்பேன். இதோ, இந்தப் பதிவில் ஒரு பிறமொழிச் சொல்கூட இல்லை. இம்மட்டத்தில் யாரும் எழுதமுடியுமே.
பிறமொழிச் சொற்களை ஆளும் நிலை எதனால் வருகிறது? புதிதாக வரும் பிறமொழிச் சொல்லுக்குத் தமிழ்ச்சொல் இல்லாதபோது.
அவ்விடத்தில் என் முழு ஆற்றலையும் திரட்டி உரிய தமிழ்ச்சொற்களைத் தொடர்ந்து ஆக்கியளிப்பேன். எவ்வாறெல்லாம் புதுச்சொற்களை ஆக்கலாம் என்று என் மாணாக்கர்கட்குப் பயிற்றுவித்தும் வருகிறேன்.
உங்கள் தமிழில் பிழையில்லை, பிறமொழிச் சொல் இல்லை என்னும் நிலையை உருவாக்கப் பாடுபடுவேன்.
(8). என்னதான் இருப்பினும் புனைவில் ஓர் ஆளுமையாக விளங்குவதால்தான் இத்தகைய இணைச் செயல்பாடுகள் பெரும்பரவல் பெறுகின்றன. அதனால் என் வாழ்நாளுக்குள் நூறு கவிதைத் தொகுப்புகளையேனும் எழுதிவிடுவேன். அவற்றில் பெருங்காப்பிய முயற்சிகளும் இருக்கக்கூடும்.
(9). பேச்சுத் தமிழுக்கென்று ஓர் இலக்கண நூலை எழுதுவேன். பேச்சுத் தமிழிலும், வட்டார வழக்குகளிலும் மொழியிலக்கண இயல்புகள் எழுந்து வருகின்றன. அவ்வாறே இலக்கணச் செம்மைகள் பேச்சில் மாறாது நிலைத்துள்ளன.
அவற்றைப் புதிய முறையில் இனங்கண்டு எழுதும் நூலால் தமிழ் கற்பது மிகவும் எளிதாகிவிடும். வட்டார வழக்குகள் வழங்கும் நிலத்தில் குறைந்தது ஆறு திங்கள்களேனும் தங்கி ஆராயவேண்டும். பெரிய வேலை. ஒருநாள் அப்பணியில் இறங்குவேன்.
(10). ஒருவேளை நாங்கள் காலத்திற்குப் பொருந்தாத முயற்சிகளில் ஈடுபடுவதாக இஞ்ஞாலம் கருதினாலும் கைவிட்டாலும் சோர்ந்துவிடமாட்டோம். புன்னகையோடு இம்மொழிக் குமுகாயம் தரும் வெகுமதிகளை ஏற்றுக்கொள்வோம்.
மிக மிகச் சிறுபான்மையினராக மாறிப்போனாலும் மனந்தளராமல் மொழிக்கென்று இறுதிமூச்சுவரை செயல்படுவோம். ஆனால், களநிலைமை அவ்வாறில்லை. அனைத்துத் தரப்பினரும் இச்செயல்பாடுகளை ஊக்குவோராகவும் உடன்வருவோராகவுமே உள்ளனர்.
நண்பர்களின், ஒத்த எண்ணமுடையோரின், உங்கள் அனைவரின் வாழ்த்துகளே ஆற்றல் வழங்கும். அவ்வாறே ஆகட்டும் ! தமிழ்த்தாய் அருள்வாள், காலம் உதவும் !
நன்றி: முகநூல் பதிவு