40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி!

அதிமுக, பாஜக அதிர்ச்சி தோல்வி

மக்களவைத் தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நான்கு முனைப் போட்டி நிலவியது. திமுக தலைமையில் ஓர் அணி, அதிமுக தலைமையில் ஓர் அணி, பாஜக தலைமையில் ஓர் அணி என மூன்று பிரதான கட்சிகளும், கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன. சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்து களமிறங்கியது.

தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு இடத்திலும் வெல்லவில்லை. தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியும் படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

தமிழக நிலவரம்:

தமிழகத்தில் கட்சிகளுக்கு கிடைத்த இடங்கள் வருமாறு:

திமுக – 21
காங்கிரஸ் -9
சிபிஎம் -2
சிபிஐ -2
விசிக -2
மதிமுக -1
முஸ்லிம் லீக் -1
கொமதேக -1

புதுச்சேரி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் வெற்றி பெற்றார்.

கனிமொழி அபாரம்:

திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி, தூத்துக்குடி தொகுதியில் இரண்டாம் முறையாக களம் இறங்கினார். அவர் 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக வேட்பாளர் சிவசாமி வேலுமணி 1,47,991 ஓட்டுகள் வாங்கி இரண்டாம் இடத்தை பிடித்தார்.

தூத்துக்குடியில் கனிமொழியைத் தவிர அதிமுக, தமாக, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் ‘டெபாசிட்’ இழந்தனர்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் (சிதம்பரம்), மதிமுக வேட்பாளர் துரை வைகோ (திருச்சி) ஆகியோர் வாகை சூடியுள்ளனர்.

உருண்ட தலைகள்:

இந்தத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட்ட ’பெரும் தலைகள்’ தோல்வியைச் சந்தித்துள்ளனர். ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தோல்வியைச் சந்தித்துள்ளார்.

அந்தத் தொகுதியில் திமுக அணியில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ்கனி, சுமார் 1 லட்சத்து 66 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வாகை சூடினார்.

கோவையில் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை போட்டியிட்டார். அவர் சுமார் ஒன்றே கால் லட்சம் ஓட்டு வித்தியாசத்தில், திமுக வேட்பாளரிடம் தோற்றுப்போனார்.

பாஜக கூட்டணி வேட்பாளராக தேனி தொகுதியில் போட்டியிட்ட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தோல்வி அடைந்தார். திமுக வேட்பாளர் தங்க. தமிழ்செல்வன், தினகரனை வீழ்த்தினார்.

நீலகிரியில் திமுக வேட்பாளர் ஆ.ராசா 3-வது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அங்கு பாஜக சார்பில் களம் இறங்கிய மத்திய அமைச்சர் எல்.முருகன் தோற்றுப்போனார்.

தென் சென்னையில் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன், தர்மபுரியில் பாமக வேட்பாளர் சவுமியா அன்புமணி, விருதுநகரில் தேமுதிக வேட்பாளராக போட்டியிட்ட விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன், பாஜக வேட்பாளர் நடிகை ராதிகா ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

கன்னியாகுமரியில் பாஜக சார்பில் போட்டியிட்ட முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்திடம் தோற்றுப்போனார்.

தென்காசி தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, பாஜக கூட்டணியில் களம் இறங்கிய தமமுக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோரும் தோல்வி அடைந்தனர்.

விளவங்கோட்டில் காங்கிரஸ்

மக்களவைத் தேர்தலுடன் சேர்த்து விளவங்கோடு சட்டசபைத் தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

இந்தத் தேர்தலில், காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் 91,054 வாக்குகள் பெற்று வெற்றி அடைந்தார்.

பாஜக வேட்பாளர் நந்தினி 50,880 ஓட்டுகள் பெற்று, இரண்டாம் இடத்தைப் பிடித்தார். இந்தத் தொகுதியை காங்கிரஸ் தக்க வைத்துக்கொண்டது.

– மு.மாடக்கண்ணு

admkbjpcongressdmkkanimozhivckஅதிமுககனிமொழிகாங்கிரஸ்தமிழகம்திமுகதிருமாவளவன்பாஜகபுதுச்சேரிமதிமுகவிடுதலை சிறுத்தைகள் கட்சி
Comments (0)
Add Comment