எங்கேயோ, எப்படியோ ஆரம்பித்தாலும், ஏதோ ஒரு இலக்கை அடைந்தாகிவிட்டது என்ற ஆசுவாசத்தைச் சில பயணங்கள் தரும். சில திரைப்படங்களும் கூட அப்படித்தான். உருவாக்கத்தின்போது பல சிக்கல்களைச் சந்தித்தாலும், ஒவ்வொன்றாகக் கடந்து, திசைதோறும் நகர்ந்து, இறுதியாக ‘வெற்றி’ என்ற இலக்கை அடையும். அப்படிப்பட்ட திரைப்படங்கள் வெகு அரிது என்றபோதும், அவற்றின் உள்ளடக்கத்தையோ, அதில் நிகழ்ந்த மாற்றங்களையோ, அதனால் ரசிகர்கள் மனதில் விளைந்த நல்விளைவுகளையோ நாம் மறந்துவிட முடியாது.
அந்த வரிசையில் இடம்பெறத்தக்க படங்களில் ஒன்று ஒளிப்பதிவாளர் ஜீவா இயக்கிய ‘உள்ளம் கேட்குமே..’!
நண்பர்களின் கூடல்!
கல்லூரிக் காலத்தில் ஜாலி, கேலி, கிண்டல், கலாட்டா என்றிருந்த மாணவர்களும் மாணவிகளும் சில ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு, தங்களுடன் படித்த மாணவர் ஒருவரின் திருமணத்தின்போது மீண்டும் சந்திக்கின்றனர். விட்ட இடத்தில் இருந்து தொடர்வது போல, அவர்களது நட்பு அத்தினத்தில் மீண்டும் மலர்கிறது.
தங்களுக்குத் தெரிந்த ஒரு சில தகவல்களைத் தெரியாத நண்பர்களுக்காகப் பரிமாறுவதும் நிகழ்கிறது. அதனூடே, அதற்கு எதிர்த்திசையில் கல்லூரிப் பருவத்தில் அவர்கள் நிகழ்த்திய கலாட்டாக்களும் நினைவலைகளாகத் தவழ்கின்றன.
அதற்கு நடுவே, நட்பில் இருந்த ஒரு ஆணும் பெண்ணும் தங்களது காதலைப் பரிமாறி இணைவதும் நிகழ்வதாகச் சொன்னது ‘உள்ளம் கேட்குமே’.
‘காலேஜ் ரீயூனியன்’ என்றதுமே, ‘காதல் தேசம்’ படத்தில் வரும் ‘முஸ்தபா.. முஸ்தபா..’ பாடல் நினைவுக்கு வரும். கிட்டத்தட்ட அந்த பாடல் உருவாக்கும் பல்வேறுபட்ட உணர்வுகளைத் திரைக்கதையில் தந்திருக்கும் இப்படம். அதுவே இதன் யுஎஸ்பியாக இருந்தது. அதனாலேயே, பல்வேறு பிரச்சனைகளால் பலமுறை திரையரங்குகளில் வெளிவராமல் தடைகளைச் சந்தித்தப்பின்னும் இப்படம் பெருவெற்றியைப் பெற்றது.
சிறப்புகள் பல..!
பிரியா, இமான், பூஜா, ஷ்யாம், ஐரின் என்று ஐந்து கதாபாத்திரங்களைச் சுற்றி நடக்கும் கதை இது. அதனால், அப்பெயர்களின் ஆங்கில முதலெழுத்துகளைக் கொண்டு ‘பெப்சி’ என்று இதற்கு டைட்டில் வைத்திருந்தார் இயக்குனர் ஜீவா. ஆனால், மணிரத்னம் தயாரிப்பில் தான் இயக்கிய படத்திற்கு அந்த தலைப்புதான் என்று மல்லுக்கு நின்றார் இயக்குனர் சுசி.கணேசன். ஒருவழியாக அத்தலைப்பு ஜீவாவிடம் இருப்பது உறுதி செய்யப்பட, அந்தப் படத்திற்கு ‘பைவ் ஸ்டார்’ என்று பெயரிடப்பட்டது.
ஆனால், ‘பெப்சி’ என்ற குளிர்பானத்தின் அப்போதைய விளம்பரங்களில் இடம்பெற்ற வாக்கியமான ‘உள்ளம் கேட்குமே more..’யை ‘டைட்டில்’ ஆக்கினார் ஜீவா. இறுதியாக, ‘உள்ளம் கேட்குமே’ என்ற பெயரில் இப்படம் வெளியானது.
முதலில் ஷாம், ரிச்சா பலேட் இதில் நடிப்பதாக இருந்தது. ‘12பி’ படத்திற்குப் பிறகு மீண்டும் ஷாமை இதில் நடிக்க வைப்பதில் உறுதியாக இருந்தார் ஜீவா. பிறகு ஆர்யா, பூஜா, அசின் ஆகியோரை இப்படத்திற்காகத் தேர்ந்தெடுத்தார்.
2002-ம் ஆண்டின் தொடக்கத்தில் இதன் முன் தயாரிப்புப் பணிகள் ஆரம்பித்தன. அதற்கடுத்த ஆண்டில் படப்பிடிப்பு தளத்தைக் கண்டது இப்படம். 2014 ஏப்ரல் மாதம் இப்படம் வெளியாவதாக இருந்தது. ஆனால், அது நிகழவில்லை. பல தடைகள், பலமுறை நேர்ந்த தாமதங்களுக்குப் பிறகு, 2005-ம் ஆண்டு ஜுன் 3 அன்று ‘உள்ளம் கேட்குமே’ வெளியானது.
‘நரேந்திரன் மகன் ஜெயகாந்தன் வகா’ என்ற ஒரேயொரு மலையாளப் படத்தில் நடித்த அசின், இப்படத்தின் வழியே தமிழில் அறிமுகமாகவிருந்தார். அதற்குள் அவரை ரசிகர்கள் ஆராதிக்கும்விதமாக ‘எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’ வந்துவிட்டது. தமிழில் குறிப்பிடத்தக்க ஹீரோயினாக அவர் உயர்ந்திருந்தார்.
போலவே ஆர்யாவுக்கும் பூஜாவுக்கும் இதுவே முதல்படமாக இருந்திருக்க வேண்டும். ஆனால், இப்படம் வெளியாவதற்குள் பூஜா நடிப்பில் ‘அட்டகாசம்’, ‘ஜேஜே’ வெளியாகியிருந்தன. ஆர்யா நடித்த ‘அறிந்தும் அறியாமலும்’ படம் வெளியாகிக் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றது.
அதனால், அவர்களது தோற்ற மாறுபாடு இப்படத்தில் தெளிவாகத் தெரிந்தது. ஆனால், அதையும் மீறி இப்படம் வெற்றி பெற்றது. காரணம், இந்த படத்தில் நிறைந்து வழிந்த இளமைக் கொண்டாட்டம்.
முதல் பாதி முழுக்க காலேஜ் கல்ச்சுரல்ஸ், கேண்டீன் கலாட்டாக்கள் என்று நகர்ந்தது. பின்பாதியில் ஒவ்வொருவருக்குமான தனிப்பட்ட வலிகள், வேதனைகள், அதிலிருந்து விடுபட உதவிய வாழ்வின் அடுத்தகட்ட நகர்வு போன்ற விஷயங்கள் சொல்லப்பட்டிருந்தன. அவை அனைத்தும் திரையில் ‘ப்ரெஷ்’ஷாக தெரிந்தன. ஜீவாவே ஒரு வெற்றிகரமான ஒளிப்பதிவாளராகவும் திகழ்ந்தது அதற்கு முக்கியக் காரணம்.
ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் ‘கனவுகள் ஆயிரம்’, ‘ஓ மனமே’, ‘மழை மழை’, ‘தோ தோ தோடா’, ‘என்னைப் பந்தாட வந்தவளே’ பாடல்கள் அன்றைய இளையோர் மனதில் ‘ரிங்டோன்’ ஆக ஒலித்தன.
லைலாவின் அப்பாவித்தனமான செய்கைகளும், அதற்காகவே ‘டீசிங்’ செய்யும் ஷாம், ஸ்ரீநாத்தின் கலாட்டாக்களும் சட்டென்று ஈர்ப்பை உருவாக்கின.
‘காலேஜ் ரீயூனியன்’, ‘ஸ்கூல் ரீயூனியன்’ என்ற பெயரில் தாம் படித்த இடத்திலோ அல்லது வெளியிடங்களிலோ அதே மாணவ மாணவியர் சந்திப்பது இன்று வழக்கமாகிவிட்டது. ஆனால், அப்போது அது போன்ற நிகழ்வுகள் அரிதாகவே இருந்தன. அந்த வகையில், அது குறித்த தூண்டுதலை விதைத்த படைப்பென்றும் இதனைச் சொல்லலாம்.
போலவே, ஒரு திரைப்படம் உருவாவதில் எப்படிப்பட்ட கால தாமதம் நேர்ந்தாலும், ஒரு படைப்பாக அது ரசிகர்களைத் திருப்திப்படுத்தினால் பெருவெற்றியைப் பெறும் என்ற உண்மையை மீண்டும் உணர வைத்தது ‘உள்ளம் கேட்குமே’.
இந்தப் படம் வெளியாகி 19 ஆண்டுகள் ஆகின்றன. அந்த உண்மையை நாம் புறக்கணிக்கும் அளவுக்கு, இப்போதும் இளமைத் துள்ளலை விதைக்கிறது இப்படம்..!
– மாபா
#ஒளிப்பதிவாளர்_ஜீவா #உள்ளம்_கேட்குமே #இயக்குனர்_ஜீவா #ஆர்யா #பூஜா #அசின் #ஷாம் #ஹாரிஸ்_ஜெயராஜ் #லைலா #Ullam_Ketkumae #director_jeeva #ullam_ketukume_movie_review #arya #pooja #ashin #sham #haris_jayaraj #laila