‘ஹாரர்’ படங்கள் என்ற பெயரில் பேய்களைப் பார்க்கத் தயாராக இருக்கும் ரசிகர்கள் கூட ட்ராகுலா, சாத்தான் உள்ளிட்டவற்றை உள்ளடக்கத்தில் கொண்டிருந்தால் கொஞ்சம் ‘ஞே’ என்று முழிப்பார்கள்.
ஏனென்றால், வழக்கமான பேய் படங்கள் போன்று அல்லாமல் அப்படங்கள் தியேட்டரை விட்டு வெளியேறியபிறகும் மூளையைப் பிசையும். தமிழில் இதற்கான உதாரணங்கள் மிகக்குறைவு. அந்த வரிசையில் இடம்பெறத்தக்க படமாக உருவாகியிருக்கிறது ‘தி அகாலி’.
நாசர் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் என்பதுதான் இப்படத்தின் யுஎஸ்பி. மேலும் ஜெயக்குமார், வினோதினி வைத்தியநாதன், ஸ்வயம்சிதா, வினோத் கிஷன், தலைவாசல் விஜய், அர்ஜெய் உட்படப் பலர் இதில் நடித்துள்ளனர்.
சரி, ‘தி அக்காலி’ படம் எப்படிப்பட்ட அனுபவத்தை நமக்குத் தருகிறது?
துரத்தும் இருள்!
2016-ல் சென்னையில் ஆறு பேரை நரபலி கொடுக்கப்பட்டு கொல்லப்பட்டதாகச் செய்திகள் வருகின்றன. அதனைச் செய்தவரின் பெயர் ஜானிஸ் என்றும், அவர் ஒரு கல்லூரிப் பெண் என்றும் சொல்கின்றன.
அந்த ஜானிஸை தேடிச் செல்கின்றனர் இன்ஸ்பெக்டர் ஹம்ஸா ரஹ்மான் (ஜெயக்குமார்).
அவருடன் இன்னொரு அதிகாரியும் அந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்கின்றனர்.
அப்போது, கல்லறையில் இருந்து சிலர் பிணங்களை தோண்டியெடுத்துச் செல்வதாக ஒரு தகவல் கிடைக்கிறது. அந்த கும்பலைக் கையும் களவுமாகப் பிடிக்கச் செல்கையில், அனிதா என்ற பெண்ணை அவர்களிடம் இருந்து மீட்கின்றனர்.
அனிதாவின் பெற்றோரோ, அவருக்குப் பேய் பிடித்திருப்பதாகச் சொல்கின்றனர். தங்களது வீட்டில் இருந்து சிலர் அவரைக் கடத்தியதாகத் தெரிவிக்கின்றனர். ஆனாலும், முழுமையாக அவர்கள் உண்மை சொல்கிறார்களா என்ற சந்தேகம் ஹம்ஸாவுக்கு எழுகிறது.
அதனால், அனிதாவின் நண்பர்கள் குறித்தும் அவர் விசாரிக்கிறார். அப்போது, ஜானிஸின் நெருங்கிய தோழியாக அனிதா இருந்தது தெரிய வருகிறது. அந்த நட்பினால், ஏற்கனவே அனிதாவிடம் நெருங்கிப் பழகிய மூன்று பேர் அவரை விட்டு விலகியதும் தெரிகிறது.
அந்த மூன்று பேரைத் தேடிச் செல்லும்போது, ஏற்கனவே கல்லறைப் பார்த்தது போல முகமூடி அணிந்த கும்பலொன்று அவர்களைத் தாக்க முயல்வதைக் காண்கிறார் ஹம்ஸா.
அந்த தாக்குதலில் இருந்து அனிதாவின் நண்பர்களை ஹம்ஸாவும் அவருடன் இருக்கும் அதிகாரியும் காப்பாற்றினார்களா? அனிதா தனது சுயநினைவை மீட்டெடுத்தாரா? அந்த கும்பலை போலீசாரால் பிடிக்க முடிந்ததா என்று சொல்கிறது ‘தி அக்காலி’ படத்தின் மீதி.
ஒளியைத் தேடிச் சிலரும், இருளைத் தேடிச் சிலரும் காலம்காலமாகப் பயணிக்கின்றனர் என்கிறது இப்படம். அப்படி இருளைத் தேடிச் சென்று சாகாவரம் பெற முனையும் ஒருவரது பெயரே ‘அக்காலி’. அவர் யார் என்று சொல்வதோடு இப்படம் முடிவடைகிறது.
2023ஆம் ஆண்டு, ஏற்கனவே நடந்த ஜானிஸ் கொலைகள் குறித்து ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான ஹம்ஸாவிடம் ஐபிஎஸ் அதிகாரி சௌம்யா (ஸ்வயம்சிதா) சில தகவல்களைக் கேட்ப்தாக, ‘தி அக்காலி’ இத்திரைக்கதை தொடங்குகிறது. அதனால், மொத்தக் கதையும் ஹம்ஸாவின் பார்வையில் பிளாஷ்பேக் ஆக விரிகிறது.
பின்தொடரும் பயம்!
குறைவான பட்ஜெட்டில் தயாரானாலும் கூட, ‘தி அக்காலி’ படத்தில் சண்டைக்காட்சி வடிவமைப்பும் கலை இயக்கமும் விஎஃப்எக்ஸும் வழக்கத்திற்கு மாறான வகையில் அமைந்து நம்மைக் கவர்ந்திழுக்கிறது.
கேமிரா கோணங்கள், நகர்வு சில ஷாட்களில் மிக வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருப்பது சிறப்பு.
அதிர்வைக் கூட்டாமல், மனதைப் பதற்றத்திற்கு உள்ளாக்கும் வகையில் மெலிதாக்ப் பயத்தைப் பரப்பும் பின்னணி இசை. இப்படிப் பல சிறப்பம்சங்கள் இதில் உண்டு.
இந்த படத்தில் கலை இயக்குனராக தோட்டா தரணி, ஒளிப்பதிவாளராக கிரி மர்பி, படத்தொகுப்பாளராக இனியவன் பாண்டியன், ஆடை வடிவமைப்பாளராக பூர்ணிமா ராமசாமி உள்ளிட்ட பலர் தங்களது பங்களிப்பைத் தந்துள்ளனர். அனிஷ் மோகனின் பின்னணி இசை நிச்சயம் ‘ஜெர்க்’ அடைய வைக்கும்.
முகம்மது ஆசிப் ஹனீப் இப்படத்தை எழுத்தாக்கம் செய்து இயக்கியுள்ளார். சாத்தான் வழிபாடு குறித்தும், அது தொடர்பான விஷயங்கள் பற்றியும் இயக்குனர் சொல்லும் பல விஷயங்கள் புதிதாகத் தெரிகின்றன.
படம் முழுக்க ஜெயக்குமார் வருகிறார். அவருடன் நடித்துள்ள இன்னொரு நபரும் பெரும்பாலான காட்சிகளில் இடம்பெறுகிறார்.
ஸ்வயம்சிதா, அர்ஜெய், தலைவாசல் விஜய், வினோத் கிஷன் என்று பலர் இரண்டொரு காட்சிகளில் வந்து போயிருக்கின்றனர். அவர்களில் முதன்மையான பாத்திரத்தில் நாசர் இடம்பெறிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆனால், அவருக்கும் கூடக் காட்சிகள் குறைவுதான்.
சில இடங்களில் ‘ஸ்டாக் ஷாட்கள்’ இடம்பெற்றிருப்பது துருத்திக்கொண்டு தெரிகின்றன.
இந்த பாத்திரத்தைச் சுற்றி, இந்த விஷயத்தைச் சுற்றித்தான் திரைக்கதை நகர்கிறது என்று நேரடியாகச் சொல்லாமல், பூடகமாகப் பல விஷயங்களைப் பேசியிருப்பத்தை குழப்பத்தை உருவாக்கியிருக்கிறது.
போதிய பட்ஜெட் இல்லாத காரணத்தால், இருட்டுலகை விஸ்தாரமாகக் காட்டாமல் தவிர்த்திருக்கிறார் இயக்குனர். அதையும் தாண்டி, சில இடங்கள் நம்மை ஆச்சர்யப்படுத்துகின்றன.
சுருக்கமாகச் சொன்னால், வழக்கத்திற்கு மாறான காட்சியனுபவத்தைத் தர வேண்டுமென்ற எதிர்பார்ப்பு கொண்டவர்கள் ‘தி அக்காலி’யை பார்த்து ரசிக்கலாம்.
அதேநேரத்தில், ஏதோ ஒரு பயம் நம்மைப் பின்தொடர்ந்து வருகிறது என்று புலம்பாத அளவுக்குத் தைரியசாலிகளாகவும் அவர்கள் இருக்க வேண்டும்.
அப்படிப்பட்டவர்களால் மட்டுமே சாத்தான் வழிபாடு, நரபலி, அதிகாரத்தைத் தேடும் வெறி போன்றவை பற்றிப் பேசும் இப்படத்தைக் காண முடியும்.
வழக்கமாக, இது போன்ற படங்களில் திரையில் விரியும் காட்சிகள் யதார்த்த உலகோடு நெருங்க முற்படாது. இதில், அந்த தடையையும் தாண்டியிருக்கிறார் இயக்குனர் முகமது ஆசிப்.
அதுவே, ‘தி அக்காலி’யை வேறொரு தளத்தில் இருக்கச் செய்கிறது. அந்த அனுபவமே போதும் என்பவர்கள் மட்டும் இதனைத் தாராளமாக ரசிக்கலாம்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்