எம்ஜிஆருக்கும் சிவாஜிக்கும் முதல் பாட்டு பாடிய அனுபவம்!

- எஸ்.பி.பி. வெளியிட்ட தகவல்

மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சில ஆண்டுகளுக்கு முன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் தனது முதல் தமிழ் சினிமா பாடல் மற்றும் எம்.ஜி.ஆர்., சிவாஜி ஆகியோருக்கு பாடிய முதல் பாடல் குறித்து சுவாரஸ்மான தகவல்களை தெரிவித்துள்ளார்.

அதன் சாராம்சம்:

“நான் பாடிய முதல் சினிமா பாடல் எது என்பது குறித்து ஆளாளுக்கு கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

எம்.ஜி.ஆர். நடித்த ‘அடிமைப்பெண்’ படத்தில் இடம் பெறும் “ஆயிரம் நிலவே வா’’ பாடல் எனது முதல் பாடல் என்று சிலர் கூறுகிறார்கள்.

“இல்லை.. இல்லை.. சாந்தி நிலையம் படத்தில் இடம் பெறும் “இயற்கை எனும் இளைய கன்னி’’ பாடல் தான் எனது முதல் பாடல் என்று வேறு சிலர் சொல்கிறார்கள்.

இரண்டுமே உண்மை அல்ல.

நான் பாடிய முதல் தமிழ் சினிமா பாடல் ’’ஓட்டல் ரம்பா’’ என்ற படத்துக்காக பாடிய “அத்தானோட இப்படி இருந்து எத்தனை நாளாச்சு.. அட இத்தனை நாளா இந்த சுகம் இல்ல.. அத்தனையும் வீணாச்சு’’ என்ற பாடல் தான்.

அந்த படமும் வெளிவரவில்லை. அப்போது கேசட் கிடையாது என்பதால் அந்தப் பாடலும் வெளியாகவில்லை.

சின்னவர் எம்.ஜி.ஆருக்கு நான் பாடிய முதல் சினிமா பாடல் அனுபவத்தை சொல்கிறேன். எம்.ஜி.ஆர். நடித்த தமிழ் படம் அப்போது தெலுங்கில் ’டப்பிங்’ செய்யப்பட்டது.

தமிழ் படத்தில் இடம் பெறும் “உன் வாளும் என் விழியும் சந்தித்தால்’’ என்ற பாடலை, தெலுங்கு படத்துக்காக ஏவி.எம், ஸ்டூடியோவில் உள்ள ரிக்கார்டிங் தியேட்டரில் நான் தெலுங்கில் பாடிக்கொண்டிருந்தேன். அப்போது எம்.ஜி.ஆர். பக்கத்து படப்பிடிப்பு அரங்கில் அமர்ந்திருக்கிறார்.

இந்தப் பாடலை கேட்டதும், அட இது நம்ம பாடலாச்சே! ஆனா வேற மொழி.. வேற வாய்ஸ்ல கேட்குதேன்னு, “இந்தப் பாடலை யார் பாடுறது’’ன்னு கேட்டு ஒரு ஆளை ரிக்கார்டிங் தியேட்டருக்கு அனுப்பினார்.

அவர் இங்க வந்து விசாரிச்சு “யாரோ புதுப்பையன். எஸ்.பி.பாலசுப்பிரமணியம்”னு பேரு என்று எம்.ஜி.ஆரிடம் சொல்லி இருக்கார். சரின்னு எம்.ஜி.ஆர். விட்டுட்டார்.

மறுநாள் (ராமாவரம்) தோட்டத்தில அடிமைப்பெண் படத்துக்கான பாடல் கம்போசிங் நடந்துருக்கு. கே.வி.மகாதேவன் சார் இசை. அவரிடம், எம்.ஜி.ஆர். என்னைப் பற்றி விசாரித்துள்ளார்.

“யாரோ எஸ்.பி.பாலசுப்பிரமணியமாம். தெலுங்கில் பாடுறாராம். உங்களுக்கு தெரியுமா?’’ என்று கேட்க, “தெரியுமே! நிறைய பாடி இருக்கார்’’னு சொல்ல, இந்தப் பாடலை அந்தப்பையனுக்கு கொடுக்கலாமேன்னு எம்.ஜி.ஆர். சிபாரிசு செய்துள்ளார்.

அப்புறமா என்னை கூப்பிடாங்க. “ஆயிரம் நிலவே வா’’ பாடலுக்கு ஒத்திகை பார்த்தோம். பிறகு ரிக்கார்டிங்கும் நடந்தது. அற்புதமான பாடல்.

ரெண்டு, மூணு பாடல் பாடி இருந்த எனக்கு எம்.ஜி.ஆருக்கு பாடினது நான் செய்த பாக்கியம். வடநாட்டுக்கு, ஜெய்ப்பூருக்கு அந்தப் பாடலை எடுத்துப்போய் ஷுட்டிங் பண்ணினாங்க.

அந்த சமயத்தில் என் தந்தை தோள்ல எம்.ஜி.ஆர். கை போட்டு, “உங்க மகனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு”ன்னு சொன்னதை மறக்க முடியாது. அதன் பிறகு ‘சுமதி என் சுந்தரி’ படத்தில சிவாஜிக்கு பாடும் வாய்ப்பு கிடைத்தது. அந்தப் படத்துக்கு எம்.எஸ்.விசுவநாதன் மியூசிக்.

பாலமுரளி கிருஷ்ணா தான் அந்த பாடல பாடுறதா இருந்தது. அதிர்ஷ்டவசமா அந்த பாடல் எனக்கு கிடைத்தது. சிவாஜி சாருக்கு டி.எம்.சவுந்தரராஜன் தானே காம்பினேஷன். நான் பாடினா, அவருக்கு சரியா வருமான்னு யோசிச்சேன். பயிற்சி எடுத்து ஸ்டுடியோவுக்கு பாடப்போனேன். ரிக்கார்டிங் அன்னைக்கு சிவாஜி சார் வந்தார்,

“தம்பி இங்க வா’’ன்னு கூப்பிட்டார். எனக்கு நடுக்கமா இருந்துச்சு. முதன் முறையா அவரோட பேசுறேன்.

“எனக்கு பாடுறேன்னு வாய்ஸ மாத்தி பாட வேண்டாம். நீ எப்படி பாடுவியே.. அப்படியே பாடு.. அதற்கு ஏத்த மாதிரி படத்தில் நான் நடிச்சுக்கிடறேன்”ன்னு சொன்னார்.

அந்த பாடல் தான் “பொட்டு வைத்த முகமோ? பொன்மணிச் சரமோ?’’

பாரதிராஜா – இளையராஜா – எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காம்பினேஷன பத்தி சொல்லணும்.

சினிமா டைரக்ட் பண்ணறதுக்கு முன்னாடியே நானும், பாரதிராஜாவும் நண்பர்கள். அப்போது அவர் நாடகங்களில் நடித்துக் கொண்டிருந்தார். ஒரு நாடகத்தில் ஜிப்பா போட்டு நடிக்கணும். பாரதிராஜாகிட்ட ஜிப்பா கிடையாது. என்னோட ஜிப்பாவ போட்டு நடிச்சார். லாண்டரியில போட்டு நாலு நாள்ல தர்றதா சொன்னார்.

ஸ்டேஜ்ல உணர்ச்சி வசப்பட்டு, என்னோட ஜிப்பாவ கிழிச்சிட்டார். இன்னும் வாங்கி தரல. ஆனா அருமையான ஒரு கலைஞன எனக்கு அறிமுகம் செய்தார். அது இளையராஜா. ஆமாம். இளையராஜாவ எனக்கு பாரதிராஜா தான் அறிமுகம் செய்தார்,

‘பதினாறு வயதினிலே’ படத்தை முதலில் நான் தான் தயாரிப்பதாக இருந்தேன். அந்தப் படத்தில் வர்ற வில்லன் கேரக்டரில், அதான் அந்த டாக்டர் வேடத்தில் நான் தான் நடிக்கிறதா இருந்தது.

பெங்களூர்ல படம் எடுத்தால் மானியம் கொடுப்பாங்க என்பதால் அங்கு ஆபீஸ் போட்டு கொஞ்ச நாள் இருந்தோம். இரண்டு வருடம் ஆகியும் பைனான்ஸ் கிடைக்கல. மீண்டும் மெட்ராஸ் வந்துட்டோம். பிறகுதான் ராஜ்கண்ணு தயாரிச்சார்.’’

இவ்வாறு அந்த பேட்டியில் மனம் திறந்து தெரிவித்திருந்தார் பாடும் நிலா பாலு.

– எம்.மாடக்கண்ணு.

bharathirajailayarajaMGRmsvsivajispbtmsஇளையராஜாஎம்.எஸ்.விஎம்.ஜி.ஆர்எஸ்.பி.பாலசுப்பிரமணியம்எஸ்.பி.பிசிவாஜிபாரதிராஜா
Comments (0)
Add Comment