ஏதேனும் ஒரு விஷயத்தை எடுத்துக்கொண்டு, அதைச் சுற்றியே உலகம் இயங்குவது நிச்சயம் இயலாத காரியம். ஏனென்றால், இங்கு ஒவ்வொருவரின் மனதுக்குள்ளும் ஒவ்வொரு உலகம் உண்டு. அதனைப் பொறுத்தே வெளியுலக நிகழ்வுகளின் தாக்கம் இருக்கும். அதனை மீறி, இந்த உலகமே ஏதேனும் ஒன்றைப் பற்றிச் சுழல்வதாக ஒரு திரைப்படத்தை வடிவமைப்பதுதான் ஒரு இயக்குனரின் வெற்றி.
அந்த வகையில், ‘மந்தாகினி’ என்ற மலையாளத் திரைப்படம் அரோமல் என்ற அப்பாவி இளைஞன் தன்னை மணம் முடித்த அம்பிலி எனும் பெண்ணின் மீது கொள்ளும் காதலைப் பேசுகிறது. அவர்களைச் சார்ந்தவர்களும் கூட, அந்தவொரு விஷயத்தைச் சுற்றியே இயங்குவதாகக் காட்டுகிறது.
‘மந்தாகினி’ கதை!
தந்தையைச் சிறு வயதில் இழந்து, தாய் ராஜலட்சுமியின் (சரிதா குக்கு) அரவணைப்பில் வளர்ந்தவர் அரோமல் (அல்தாப் சலீம்). வாலிப வயதில் சகோதரி அஜிதாவின் (அஸ்வதி ஸ்ரீகாந்த்) கணவர் உன்னி (வினீத் தட்டில் டேவிட்) உற்ற தோழனாக இருக்கிறார்.
‘தன்னை விரும்பவும் இந்த உலகில் ஒரு பெண் இருக்கிறாளா’ என்று ஏங்கிக் கொண்டிருக்கும் அரோமல், அம்பிலியைப் (அனார்கலி மரிக்கார்) பெண் பார்க்கச் செல்கிறார். பார்த்தவுடன் அவரைப் பிடித்துப் போகிறது. அம்பிலியின் வீட்டிலும் சம்மதம் தெரிவிக்க, திருமணம் நடைபெறுகிறது.
திருமணம் முடிந்து, அன்றைய நாளே அரோமல் வீட்டுக்கு வருகிறார் அம்பிலி. சடங்கு சம்பிரதாயங்கள் முடிந்து, பட்டாடைகள் களைந்து, ஒரு பெண்ணின் இயல்போடு அந்த வீட்டில் நடமாடுகிறார். அவரை எப்படிக் கவர்வது என்ற யோசனையோடே, அவ்வப்போது தனது அப்பாவித்தனத்தை வெளிப்படுத்துகிறார் அரோமல்.
உன்னியும் உறவினரான அனியும் (குட்டி அகில்), அரோமல் அதனைச் செய்தே தீர வேண்டும் என்பதில் விடாப்பிடியாக இருக்கின்றனர் (இந்த அனி, சென்னையில் ஒரு பாரில் ‘காக்டெய்ல்’ கலக்குவதில் வல்லுநர் என்பது உபரித்தகவல்). அவர்களது வற்புறுத்தலுக்காக, ‘குடி போதை வேண்டாம்’ என்ற தனது வைராக்கியத்தைத் துறந்து முதன்முறையாக மது அருந்தச் சம்மதிக்கிறார் அரோமல்.
விதிவசத்தால், அனி கலக்கிய காக்டெய்லை அம்பிலி குடித்துவிடுகிறார். அவ்வளவுதான். கன்னாபின்னாவென்று தன் மனதில் இருப்பதைக் கொட்டத் தொடங்குகிறார்.
‘சுஜித் வாசுதேவை நான் காதலிச்சேன்’ என்று அம்பிலி தனது காதலைச் சொல்லத் தொடங்கியதும், அரோமலுக்கு முதல் அதிர்ச்சி ஏற்படுகிறது. தொடர்ந்து அவர் சொல்லும் தகவல்கள் அவரது மனதைக் குத்தீட்டியாகக் கிழிக்கின்றன.
முதலிரவு அறையில் இருந்து வெளியே ஓடிவந்து, மச்சான் உன்னியைச் சந்தித்து அரோமல் விஷயத்தைச் சொல்கிறார். அம்பிலியின் போதையைக் குறைக்க என்ன செய்யலாம் என்று அவர்கள் ஒரு தீர்வைக் கண்டுபிடிப்பதற்குள், வீட்டு வாசலில் அமர்ந்து அங்கிருக்கும் பெண்களிடம் தனது காதல் கதையை விலாவாரியாகப் பேச ஆரம்பிக்கிறார். அரோமலின் தாய் ராஜலட்சுமி, சகோதரி என்று பலரும் அக்கூட்டத்தில் உண்டு.
‘மனைவி சொல்லும் காதல் கதையைப் பிறர் கேட்க வேண்டாம்’ என்று அம்பிலியைத் தடுக்க முயல்கிறார் அரோமல். ஆனால், ராஜலட்சுமி அதற்குச் சம்மதிப்பதில்லை. அம்பிலி முழுதாகத் தனது காதலைப் பற்றிச் சொல்வதற்குள், அங்கிருக்கும் சிலரால் விஷயம் காட்டுத்தீயாக ‘வாட்ஸ் அப்’ வழியே பரவுகிறது.
அரோமல் அதனை அவமானமாக எண்ண, அவரது தாய் ராஜலட்சுமியோ, ‘எனக்கு அந்த சுஜித் வாசுதேவ் யார் என்று தெரிய வேண்டும்’ என்கிறார். ‘வா, அவனை நேரில் சென்று பார்ப்போம்’ என்று நள்ளிரவில் மருமகள் அம்பிலியை அழைத்துக் கொண்டு கிளம்புகிறார். உடன் மகன் அரோமல், அவரது சகோதரி மற்றும் இரண்டு உறவினர் பெண்களும் செல்கின்றனர்.
அவர்களைப் பின்தொடர்ந்து செல்ல முனையும் உன்னி குரூப்போ ‘போதையின் உச்சத்தில்’ இருக்கிறது.
அவர்கள் அந்த சுஜித் வாசுதேவை நேரில் கண்டார்களா? அதன்பிறகு என்னவானது என்று சொல்கிறது இப்படத்தின் மீதி.
‘மந்தாகினி’ என்றால் புனிதமான நதியைப் போன்ற பெண் என்று அர்த்தம். அப்படியொரு பெண் தனக்கு வாய்த்துவிட்டாள் என்று நம்பும் ஒரு ஆண், இப்படியொரு நிலைமையை எதிர்கொண்டபிறகு என்னவானான் என்ற கேள்வி எழுவது இயல்பு. அதற்குப் பதிலளிக்கிறது இத்திரைப்படம்.
நிறைவு தரும் திரைப்படம்!
காமெடியா, ட்ராஜடியா என்ற கேள்விக்கு இடமில்லாத வகையில், ஒரு சீரியசான கதையை விழுந்து விழுந்து சிரிக்கும் வண்ணம் திரைக்கதை ஆக்கியிருக்கிறார் இயக்குனர் வினோத் லீலா. கூடவே, அதனைத் திரையில் அணுகியிருக்கும் அவரது ‘ட்ரீட்மெண்டும்’ முக்கியத்துவம் பெறுகிறது. அவரது கற்பனைக்கு நடிப்புக் கலைஞர்கள் மிகச்சரியான உருவத்தைத் தந்திருக்கின்றனர்.
நட்சத்திர அந்தஸ்து கொண்ட நடிகர், நடிகைகள் இல்லை. பெரிய பட்ஜெட் கிடையாது. தொழில்நுட்பக் கலைஞர்களிலும் பலர் ஒரு சில படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்கள். அப்படியொரு குழுவைக் கொண்டு, மிகச்சிறப்பான காட்சியாக்கத்தைத் திரையில் உணர வைத்திருக்கிறார் இயக்குனர்.
ஒளிப்பதிவாளர் சிஜு பாஸ்கர், தயாரிப்பு வடிவமைப்பாளர் சௌம்யதா வர்மா, படத்தொகுப்பாளர் ஷெரில், இசையமைப்பாளர் பிபின் அசோக், ஆடை வடிவமைப்பாளர், டிஐ மற்றும் விஎஃப்எக்ஸ் பணியில் ஈடுபட்டவர்கள் என்று பலரும் ஒன்றிணைந்து, இயக்குனர் நினைத்த உலகுக்கு உயிர் தந்திருக்கின்றனர்.
நாயகன் அல்தாப் சலீம், நாயகி அனார்கலி மரிக்கார் தொடங்கி சரிதா குக்கு, வினோத் தட்டில் டேவிட், கணபதி பொதுவால், அஸ்வதி ஸ்ரீகாந்த், குட்டி அகில் என்று பலரும் சின்னச் சின்ன பாத்திரங்களில், பெரிதாக வரவேற்பைப் பெறாத படங்களில் நடித்தவர்கள் தாம்.
இவர்களோடு இயக்குனர்கள் லால் ஜோஸ், ஜியோ பேபி மற்றும் ஜாபர் இடுக்கி போன்றவர்களும் தலைகாட்டியிருக்கின்றனர் என்பதே ‘மந்தாகினி’யில் என்ன சிறப்பு என்ற கேள்வியை நம்முள் எழுப்பி, அதற்கான பதிலைக் காண வைக்கிறது.
இந்த படத்தைக் காணும் எவரும், ‘நிஜத்துல இது போல நடக்க வாய்ப்பே கிடையாது’ என்று சொல்வது இயல்பு. அதனை மீறி, அப்படி ஒன்று நிகழ்ந்தால் என்னவாகும் என்பதனை அப்படிப்பட்டவர்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் திரையில் காட்டியிருக்கிறார் இயக்குனர் வினோத் லீலா. அதுவே இப்படத்தின் வெற்றி.
இந்த கதையை ஏற்றுக்கொண்டால், நிச்சயம் இப்படம் உங்களுக்குப் பிடித்துப் போகும். அதற்கேற்ப, இருக்கையில் நாம் கண்ணயர்ந்துவிடாத வண்ணம் பல்சுவையுடன் நகர்ந்து செல்கிறது திரைக்கதை.
மாதம் ஒரு ஹிட் என்றிருந்த நிலைமை மாறி, வாரம் ஒரு ஹிட் தந்து வருகிறது மலையாளத் திரையுலகம். அந்த வரிசையில் ‘சைலண்ட்’ஆக சேர்ந்திருக்கிறது ‘மந்தாகினி’.
குடும்பத்துடன் தியேட்டருக்குச் சென்று குதூகலமாகச் சிரித்து மகிழ்ந்து ஒரு திரைப்படத்தைக் கண்டு எத்தனை நாட்களாகிவிட்டது என்று எண்ணுபவர்கள், இந்த ‘மந்தாகினி’யைக் கண்டு மனநிறைவு பெறலாம்!
– உதயசங்கரன் பாடகலிங்கம்
#மந்தாகினி_விமர்சனம் #சரிதா_குக்கு #அல்தாப்_சலீம் #வினீத்_தட்டில்_டேவிட் #அஸ்வதி_ஸ்ரீகாந்த்
#அனார்கலி_மரிக்கார் #இயக்குனர்_வினோத்_லீலா #Mandakini_movie_review #Althaf_Salim #Anarkali_Marikar #aldheep_salim #vinith_thatil #vinoth_leela