இன்றைய காலத்தில் பிறந்த குழந்தை நடக்க இயக்கம் பெற்று, நன்றாக ஓடத் தொடங்கி முன்னேறும்போது, இன்னும் இயக்க வேகத்தை அதிகமாக்க மூன்று சக்கர மிதிவண்டியை வாங்கித் தருகிறார்கள்.
ஆதிமனிதர்களின் மிகமுக்கிய கண்டுபிடிப்பான சக்கரத்தின் பயன்பாடு, ஆதி குழந்தையிலிருந்தே பரிணாம படிவங்களாக மூளையில் படிந்திருக்கிறது.
சக்கரம் மீதான தொடர்பு ஆதியிலிருந்து இன்று வரையிலான குழந்தையிடம் உள்ளுணர்வாக மிதிவண்டி மீது ஈர்ப்பு ஏற்படுத்தியிருப்பதை மறுப்பதற்கில்லை. அந்த வகையில் மிதிவண்டி பழகுவது என்பது மிக முக்கியமான வாழ்வியல் திறன் ஆகும்.
சில வருடங்களுக்கு முன்பெல்லாம், இப்போது இருப்பதுபோல கல்விக்கூடங்கள் நிறைந்திருக்கவில்லை. போக்குவரத்தும் அவ்வளவாக வளர்ச்சியுறாத காலம், குறிப்பாக மேல்நிலைக் கல்வி பெற தொலைதூரம் பயணிக்க வேண்டியிருந்தது.
கற்றோரும் கல்வி சார்ந்த விழிப்புணர்வும் குறைவுதான். அன்றைய காலகட்டங்களில் பலர் மேல்நிலைக் கல்வி மற்றும் கல்லூரிக்கு மிதிவண்டிகளில் நெடுந்தொலைவு பயணித்து கல்வி பெற்று முன்னேறியிருக்கின்றனர்.
அவரவர் வீடுகளில் பெற்றோரிடம் தாங்கள் எப்படி படித்தீர்கள் எனக் கேட்டாலே மிதிவண்டி அப்போதெல்லாம் எவ்வளவு பயனுள்ளதாய் இருந்தது என அறியமுடியும்.
முதல் பெண் மருத்துவர்:
நம் நாட்டின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி எப்படி கல்வி கற்றார்கள் என தெரிந்து கொண்டால், பெண் கல்வி எவ்வளோ பின்னோக்கி இருந்தது என்று புரியும்.
கல்வியே எட்டாக்கனி, அதில் பெண்களுக்கு மிதிவண்டி பழகுவது என்பதெல்லாம் நம் சமூகத்தில் நினைத்துக்கூட பார்க்கமுடியாமல் இருந்தது.
பெண்கல்வி மிதிவண்டி பழகுவதிலும் அடங்கியிருக்கிறது என்று பல கல்வியாளர்கள் கல்விக்கூடங்களில் பெண்களுக்கு மிதிவண்டியை ஓட்டக் கற்றுக் கொடுத்துள்ளனர்.
குரங்கு பெடல்:
தற்போது போல குழந்தைகளுக்கான சின்ன மிதிவண்டி வராத தலைமுறைகள் பெரிய மிதிவண்டியை பெரிய மேட்டுக்குத் தள்ளிக்கொண்டு போய் காலை வலப்பக்கமுள்ள பெடலில் லொடக்கு லொடக்கு என அடித்துக் கொண்டு செல்ல, வேகம் அதிகரிக்க மிதிவண்டியில் சமநிலை கிடைத்தவுடன் இன்னொரு காலையும் இடப்பக்கமுள்ள பெடலில் வைத்து மிதித்து ஒரு வட்டத்தை நிறைவு செய்துவிட்டாலே ஏதோ பெரியதாக சாதித்த உணர்வும் குதூகலமும் நம்மைத் தொற்றிக் கொண்டுவிடும்.
இதுக்கு குரங்கு பெடல்ன்னுபேர் வேற வைத்து அழைத்துக் கொண்டனர் அன்றைய குழந்தைகள். நன்குகற்ற பிறகு பல வித்தைகளைக் குழந்தைகள் செய்து ஆசுவாசமடைந்தனர்.
உடல், மனம் வலிமை பெறும்:
பெண் குழந்தைகள் மிதிவண்டிபழகுவது என்பது மிக இன்றியமையாதது என பல கல்வியாளர்கள் வலியிறுத்துகின்றனர். மேலும் போக்குவரத்தில் மோட்டார் வாகனங்களின் வரத்தால் மிதிவண்டி பயன்பாடு குறைந்துவிட்டது.
மிதிவண்டி பழகுவதால் உடல் மற்றும் மன வலிமை பெறும், எடை சீராக இருக்கும், குழந்தைகளுக்கு ஏற்ற வகையில் சாகசம் செய்யும் உணர்வுக்குத் தீனியாக அமையும், மன அழுத்தம், பதட்டம் போன்றவை ஏற்படாது, ஒருங்கமைவு, சமநிலையைக் கொணர்தல், இதயத்துடிப்பு சீராக இருத்தல், தண்டுவடம் வலிமை பெறுதல், இன்னும் பல நன்மைகள் இருக்கிறது. மேலும், நம் சுற்றுச்சூழலுக்கு எவ்வித மாசும் ஏற்படுத்தாத வாகனம் என்றால் அது மிதிவண்டிதான்.
கல்வியில் மிதிவண்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்ததாலேயே தமிழக அரசு மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி கொடுத்து ஊக்கமளிக்கிறது. இத்திட்டத்தின் மூலம் போக்குவரத்து வசதியில்லாத குழந்தைகள்கூட கல்வியை தொடர்கிறார்கள்.
பல முன்னேறிய நாடுகளில் மிதிவண்டி வாழ்வியல் திறனாக இருந்தாலும் தொடக்கப் பள்ளிகளில் ஆசிரியர்களாலும் கற்றுத் தரப்படுகிறது.
ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் அது தனிப் பாடத்திட்டமாக வடிவமைத்து கற்றுக் கொடுப்பது மிதிவண்டிக்கு முக்கியத்துவம் கல்வியிலேயே அளிக்கப்படுகிறது.
நம் பள்ளிக்கூடங்களிலும் மிதிவண்டி பழகுவதன் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் வலியுறுத்தலாம். அதிலும் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு. மிதிவண்டி பழகி வாழ்வில் அதன் அலாதி உணர்வை உடல், உள வலிமையோடு உணர்வோம்.
– கே.சாந்தசீலா (ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, பூவலை அகரம்)
- நன்றி : இந்துஸ்தான் தமிழ்