ஜூன் – 1 : உலக பெற்றோர் தினம்:
அன்றாடம் உழைத்து, குழந்தைகளின் நலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ள பெற்றோர்களுக்கு வயதான பின்னர் கிடைக்கும் பரிசு தனிமை.
இளமையில் தனிமை என்பது அனைவரும் விரும்பி ஓடுவது. அதுவே முதுமையில் கிடைத்தால் அதைவிட வறுமை வேறெதுவும் இல்லை.
பெற்றோரை மகிழ்ச்சியாக வைப்பதற்கு குழந்தைகள் வேறேதும் செய்யத்தேவையில்லை. உங்களுக்கான நேரத்தில் சிறிது நேரம் ஒதுக்கி தினமும் அவர்களுடன் உறவாடுங்கள். அவர்களுக்கான தனிமை எண்ணம் வராமல் இருக்க நான் உங்களுடன் உள்ளேன் என்பதை எப்போதும் தெரிவியுங்கள்.
சிறு வயதில் பெற்றோரின் பேச்சைக் கேட்டு நடந்த நாம் நமக்கென சம்பாதிக்க தொடங்கியதும், வீட்டில் முடிவெடுக்கும் சில விஷயங்களில் சுயநலமாக பெற்றோர் சம்மதம் இன்றி முடிவெடுக்கப் பழகுவோம்.
எப்போதும் வீட்டில் பெரியவர்கள் இருக்கும் பட்சத்தில் வீட்டில் எடுக்கப்படும் முடிவுகளில் அவர்களின் பேச்சைக் கேட்டு நடப்பது பெற்றோருக்கு நாம் தரும் மரியாதையாக பார்க்கப்படும்.
வயதான பெற்றோருக்கு இருக்கும் இரண்டு முக்கிய பிரச்சனை, பணம், அன்பு. பணம் என்பது அவர்களுக்கு தேவைப்படும் பட்சத்தில் குழந்தைகள் என்றாலும் கேட்க தயங்குவர்.
இவ்விரண்டும் வயதான காலத்தில் பெற்றோர்களுக்குத் தாராளமாக எளிதாக கிடைக்கச் செய்வது குழந்தைகளின் கடமை.
வயதான காலத்தில் வீட்டில் இருந்து மன அழுத்தம் வரமால் இருக்க பெற்றோரை மகிழ்விக்க, அவர்களின் பிறந்த தினம், திருமண தினம் என வீட்டில் சிறு சிறு நிகழ்வுகளையும் அவர்ளுடன் இணைந்து கொண்டாடலாம்.
இன்றைய இளைஞர்களில் ஒருசிலர் தங்களின் பெற்றோர் செய்த அனைத்தையும் மறந்து விட்டு, அவர்களை அனாதையாக விட்டு விடுகின்றனர். சிலர், முதியோர் இல்லங்களில் தங்களது பெற்றோரை சேர்த்து விடுகின்றனர்.
தனிக்குடும்பமாக வாழ வேண்டும் என்று நினைக்கின்றனர். தங்களது பெற்றோர்களுடன் கூடி வாழ்வதை சங்கடமாக எண்ணுகின்றனர்.
பெற்றோர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அவர்களது ஆயுட்காலம் வரை, அவர்களிடம் அன்புடன் நடந்து கொள்ள வேண்டும்.
அவர்களுக்கு குழந்தைகளாய் நாம் இருக்கும்போது, எதற்கு முதியோர் இல்லங்களில் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் எழ வேண்டும். பெற்றோர்கள் நம் இரு கண்கள். நம் கண்களை நாம்தான் பாதுகாக்க வேண்டும். பெற்றோர்கள் நமது வாழ்க்கையின் வழிகாட்டிகள்.
அவர்கள் நம்மை பெற்றெடுக்கவில்லையென்றால் நாம் இந்த மண்ணில் பிறந்திருக்க முடியாது. ஒரு நல்ல நிலையை அடைந்திருக்க முடியாது. ஆகவே, நாம் அனைவரும் படித்து முடித்து நல்லதொரு வேலைக்குச் சென்றதும் நமது பெற்றோரை கைவிடாமல் கடைசி வரை வைத்து காப்பாற்ற வேண்டும்.