மகா கலைஞன் தோஷிரோ மிபூன் (Toshiro Mifune) மற்றும் அகிரா குரஷோவா (Akira Kurosawa) ஆகியோர் இணைந்து, உலகின் ஆகச் சிறந்த படங்களாக 16 திரைப்படங்களில் முறையே நடிகராகவும் இயக்குனராகவும் பணியாற்றி உள்ளனர்.
நடிகர்கள் இல்லாமல் எவ்வளவு சிறப்பான திரைக்கதை இருந்தாலும் திரைப்படம் முழுமையாகாது. ஆகச் சிறந்த நடிகரை இயக்குனர் தேடிக் கொண்டே இருக்கிறார்.
தயாரிப்பாளரை தேடுவதைவிட அதிக சிரத்தையுடன் தனது செரிவான கதாப்பாத்திரங்களுக்காக நடிகர்களை தேடுவதே பெரிய வேலை.
உலக சினிமா வரலாற்றில் சில இயக்குனர்களுக்கு நல்ல நடிகர்கள் கிடைத்து விடுகிறார்கள். தான் உருவாக்கும் கதாப்பாத்திரம் எப்படியாக இருந்தாலும் இதற்கேற்ப தன்னை உருவொழுங்குபடுத்திக் கொள்ளும் நடிகர்கள் ஏராளம்.
அப்படி இயக்குனர்கள் கிடைக்கப்பெற்ற நடிகர்கள் இன்றைக்கும் ஆகச் சிறந்த திரைப்படங்களில் நடித்த பெருமையோடு பிரபலமாகவே இருக்கின்றனர்.
உலக திரைத்துறை வரலாற்றிலும் குறிப்பாக இந்தியத் திரைத்துறை வரலாற்றிலும் பெரிய பட்டியலை உருவாக்கலாம்.
நடிகர் அமிதாப்பச்சனுக்கு மன்மோகன் தேசாய், சிவாஜிக்கு பீம்சிங் மற்றும் சிலர். ரஜினிகாந்துக்கு எஸ்பி.முத்துராமன் மற்றும் பலர், கமலஹாசனுக்கு பாலச்சந்தர் மற்றும் பலர். ஷாருக்கானுக்கு யஷ் ராஜ் மற்றும் பலர் என நீண்ட பட்டியலை நீட்டலாம்.
சரியான நடிகர்கள் கிடைக்காமல் சில திரைப்படங்கள் எழுத்து நிலையிலேயே இருக்கின்றன.
சமீபமாக யாரும் யாரையும் மதிக்காத போக்கு அதிகரித்துவிட்ட நிலையில் இப்படி இயக்குனர் நடிகர் ஜோடி நிலைப்பதில்லை.
நல்ல நடிகர்கள் இருப்பது தெரிந்தாலே பல திரைக்கதைகள் எழுதி முடிக்கப்படும்.
நான் தற்போது இயக்கிக் கொண்டிருக்கும் திரைப்படத்தில் அழுத்தமான ஒரு அல்லது இரண்டு காட்சிகளில் தோன்றி நடிக்க சரியான நடிகர் இல்லாமல் காட்சியை நீக்கி இருக்கிறேன்.
நல்ல இயக்குனர்களைத் தேடிக் கொண்டிருக்கும் நடிகர்களே, நல்ல நடிகர்களை இயக்குனர்களும் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.
-மதியழகன் சுப்பையா